15 January 2012

கலையின் வேலை

இரண்டு படைப்புகளை எடுத்துக்கொண்டு ஒன்று ஏன் கலையாக இருக்கிறது பிரிதொன்று ஏன் ஆகவில்லை என்று விளக்க முற்படுவதைப்போல சிரமமான காரியம் இலக்கியத்தில் வேறு இல்லை.

கலை இலக்கியம் பெரும்பாலும் மனம் சார்ந்தவை என்பதால் எனக்குப் பிடித்திருக்கிறதே என் உணர்வைத் தட்டி எழுப்பிற்றே உன்னை ஒன்றும் செய்ய்வில்லை என்பதால் இதைக் கலையில்லை என்று சொல்ல முடியுமா? உங்கள் உழக்கால் இதை அளக்கமுடியாததால் கோடி பேரைக் கவர்ந்த இதனை எப்படிக் கலையில்லை என்று கூற முடியும் என்று கச்சைகட்டிக்கொண்டு களத்தில் இறங்கிவிடுவார்கள். குடுமி எழுதியிருந்தால் மட்டுமே உமக்கு இலக்கியம் என்று கொச்சையான கூச்சலும் கிண்டலுமாய்க் கிசுகிசுக்கப்படும்.

எழுதியவனே இறங்கி விளக்க முற்பட்டால், ஊரையெல்லாம் நொட்டை சொன்னாயே உன்னை விமர்சித்தால் தாங்க முடியவில்லையா என்கிற கேள்வி எழும்.

எவனைப் பார்த்து நொட்டை சொல்லப்பட்டதோ அவன் தனது படைப்பாளிப் பதவிசைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டி பதிலளிக்காது இருக்கிறான் என்பதால் எவனுமே பதில் சொல்லக்கூடாது என்பது எந்த ஊர் இலக்கிய சட்டம்? பதிலளிக்க முனைந்தால் உள்ளதும் போய் பப்பரப்பே என்றாகிவிடும் என்கிற சாதாரனத் தற்காப்பைப்போய்,ஏதோ சட்டையே செய்யாத புறக்கணிப்பாய்க் கொண்டாடுகிற கோமாளித்தனத்தை என்னவென்று சொல்வது? புளுக்கைகளுக்கெல்லாம் கூட ’படைப்பாளி’ என்பது கமாண்டோ பாதுகாப்பாய் அல்லவா பயன்படுகிறது.

தர்க்கரீதியாக தம் தகிடுதித்தங்கள் அம்பலப்படுவதை ஏற்க முடியாதவர்களுக்குக் கிடைத்த நொண்டிச்சாக்குதான் விமர்சனத்திற்கு படைப்பாளி பதிலளிக்கக்கூடாது என்கிற பாவ்லா.

இணைய உலகத்தில் பதில் சொல்ல இறங்கினால், இலக்கிய விவாதம் குடுமிப்பிடி குழாயடிச் சண்டையாகி வார்த்தை தடிக்கும். அது அநாகரிகம். கெட்டவார்த்தை உபயோகிக்காமல் நாசூக்காக நிமிண்டலாம். கிள்ளி ரத்தம் வந்தால் மட்டுமே கிரிமினல் குற்றம்.

குற்றம் என்று அறிவிக்கப்பட்டபின் அதைக் கண்டிக்காமல் போனால், தள்ளி நின்று கவனிப்பவனின் கற்பு கேள்விக்குள்ளாகும் எனவே பதறியடித்துக்கொண்டு ஆசாபாசத்துடன் ஆபாசம் ஆபாசம் என்று கூக்குரல் எழுப்பியாகவேண்டிய நிர்பந்தம்.

புனைவு என்கிற லேபிளைப் போட்டுக்கொண்டுவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை வண்டை வண்டையாக எழுதலாம் என்பது இணையத்தின் எழுதப்படாத விதி.

வசை கலக்காத அப்பட்டமான தர்க்கத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் நாந்துகொள்ளும்படி ஆகிவிடக்கூடாதே என்கிற நல்லெண்ணம்தான் ’பொறுக்கி’ மொழிக்குக் காரணம். கனவான் பட்டத்தைக் கழுத்தில் சுமக்க விரும்புவோர் பொறுக்கி மொழியை மட்டும் பயன்படுத்தாமல் இருந்தால் போதும். மற்றபடி எந்த பொறுக்கித்தனம் செய்யலாம் தவறில்லை. எந்தத் தடையும் இல்லை.

கலை இலக்கியத்தின் தலையாயக் கடமையே அறம் செய்ய விரும்பு ஆறுவது சினம் என்கிற வாய்ப்பாடாய், வளர்ந்த சிறார்களுக்கு போதிப்பதுதான் என்பது போல் படைப்பாளிக்குப் பாடம் எடுக்க வந்துவிடுவார்கள் இணையத்துப் பேராசான்கள்.

பள்ளியில் கற்ற ’ஒழுங்கை’ கற்பிதம் எனக் கலைத்துக்கொண்டால்தான் வாழ்க்கையில் எப்படி ‘ஒழுங்காக’ முன்னேற முடிகிறது என்கிற யதார்த்த அமிலத்தைப் போகிற போக்கில், முகமூடியைப் பொசுக்கி நம் முகத்தில் வீசிச்செல்வதல்லவா இலக்கியம்?

Diane Lane Richard Gere நடித்து Adrian Lyne இயக்கிய Unfaithful (2002) என்கிற ஹாலிவுட் படத்தைப் பலரும் பார்த்திருக்கக்கூடும்.

இதன் மூலத்திரைப்படம் 1969ல் CLAUDE CHABROL இயக்கத்தில் வெளியான Unfaithful wife (La Femme infidèle). இது ஒன்பது பகுதிகளாக யூட்யூபில் கிடைக்கிறது. விருப்பமும் ஆர்வமும் உள்ளோர் இரண்டையும் பார்த்து ஒப்பிட்டுக்கொள்ளலாம். எப்படி ஏன் ஒன்று மேதை படமாகவும் மற்றது வெறும் கூனா படமாகவும் இருக்கிறது என்பதை உணரலாம்.

தி.ஜானகிராமனிடம் இருக்கும் மனித மனங்களுக்கிடையிலான மோதலின் தீவிரமும் பாலகுமாரனின் அதீத ஆவேசப் போலிக் கூச்சலும் ஒன்றா? வாழ்வின் நிகழ்வுகளை உண்மைக்கு நெருக்கமாய் இருந்தபடி சுவாரசியாமாய் சொல்வதற்கும் சுவாரசியத்திற்காக பொய்யை பூதாகாரமாக்கித் திணிப்பதற்கும் வித்தியாசம் இல்லையா?

Fritz Lang and Alfred Hitchcock இருவரையும்போலவே CLAUDE CHABROL எடுத்த படங்களும் த்ரில்லர் வகையை சார்ந்தவையே. அவை வெறும் த்ரில்லர்கள் மட்டுமேவா, ஏன் அவை கலையின் சிறந்த வெளிப்பாடுகளாய்க் கொண்டாடப்படுகின்றன என்பதைப் பார்த்துதான் படித்துக்கொள்ள முடியும். கூடவே எது கலை ஏன் பிறிதொன்று கலை இல்லை என்பதும் பிடிபடக்கூடும்.  

கலையின் வேலை காலட்சேப போதனையல்ல, அனுபவம்.

க்ளாட் ஷெப்ரால் பற்றி அறிந்துகொள்ள உதவியாய்