28 January 2012

இதுதான் என் பெயர் - சக்கரியாவின் முன்னுரை

இந்தச் சிறுநாவல், மொழிபெயர்ப்பாளரான திரு.சுகுமாரனின் கைகளினூடே தமிழ் வாசகர்களை அடைவது என்னை மிகவும் மகிழ்ச்சிகொள்ளச் செய்கிறது.
மலையாளிகள் தங்களது இலக்கியம் பற்றியும் கலாச்சாரம் பற்றியும் மிகுந்த பெருமை கொண்டிருப்பவர்கள். சரித்திரம், சூழ்நிலை, இயற்கை ஆகியவற்றின் வரத்தால் பல நல்ல செயல்களை செய்துமிருக்கிறார்கள். மலையாள இலக்கியம் உன்னத உயரங்களில் சஞ்சரிக்கும் நிமிடங்களும் உருவாகியுள்ளன. மறுபக்கம், ஆடம்பர வீடுகளின் உயரத்திலும் பிரம்மாண்டத்திலும் மலையாளிகள் ரிகார்டு ஏற்படுத்துகிறார்கள். நாங்கள் தின்னுகிற கறிவேப்பிலையிலிருந்து குருவாயூரில் அர்ப்பணம் செய்யும் பூக்கள்வரை, எழுதுகிற சிலேட்டிலிருந்து சாப்பிடும் அரிசிவரை தமிழ்நாட்டிலிருந்துதான் இங்கே வருகிறது. பதிலுக்குக்குக் கொடுக்கும் தண்ணீரின் பேரில் இங்கேதான் எத்தனை நறநறப்பு! சஹ்ய பர்வத்தின்* மேற்காகப் பாயும் நீரில் தொண்ணூறு சதவீதத்தை, அடிமணல்வரைக்கும் சுரண்டியெடுத்து, நதியைக் கீறி காயப்படுத்தியபிறகு கடலில் பாய்ந்து கலக்கவிடுகிறோம். ஆனால் கிழக்கு நோக்கி ஓடும் நீரைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் பூமியில் சொர்க்கத்தை உருவாக்குவதை, தமிழ்நாட்டில் பயணம் செய்யும்போது நான் பார்த்திருக்கிறேன்.

என் நண்பர்களிடம் நான் திரும்பத் திரும்பச் சொல்லும் ஓர் உண்மை - மலையாளிகளான நமக்கு இருப்பது படாடோபம் மட்டுமே. சம்பளம் வாங்கவும் தின்று தீர்க்கவுமே நமக்குத் தெரியும். இல்லையென்றால் கேரளத்தைவிட்டு வெளியேறி ‘காசின் நிர்வாணம்’ தேடத் தெரியும். நீடித்து நிற்கும் கலாச்சாரம் தமிழ் நாட்டினுடையது. நாம் வெறும் நினைவாக மிஞ்சும் வரை அவர்கள் நிலைத்திருப்பார்கள்.

கிறிஸ்துவப் பெயருடைய நான் முஸ்லீம் நண்பருடன் தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற கோவில்களில் தரிசனத்துக்காகப் போயிருக்கிறேன். ஒரு கோவிலில்கூட, எங்கள் பெயரைக் கேட்ட பின்பும், நாங்கள் கடவுளைத் தரிசிப்பதை யாரும் தடை செய்ததில்லை. இதுவே குருவாயூரிலோ, ஸ்ரீபத்மநாபசுவாமி க்ஷேத்திரத்திலோ கேரளத்திலுள்ள மற்ற அநேக ஆலயங்களிலோ எனில் நாங்கள் வெளியே தள்ளப்பட்டிருப்போம் அல்லது விரட்டியடிக்கப் பட்டிருப்போம். கடவுளின் முன்னிலையிலான இந்த சமநோக்குதான் தமிழ்க் கலாச்சாரத்தின் அஸ்திவாரம்.

எழுத்தாளன் என்ற நிலையில் என்னை பிடித்து உலுக்கிய ஒரு சம்பவம் அண்மையில் நிகழ்ந்தது. தெஹல்கா டாட் காம் நிறுவனம் விமர்சனத்துக்காக ஒரு தமிழ் நாவலை எனக்கு அனுப்பி வைத்தது. அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு. மலையாளி புத்திஜீவியின் நிரந்தர உதாசீனத்தோடும அகந்தையோடும் அதை வாசிக்கத்தொடங்கினேன். ஒவ்வொரு பக்கம் புரளும்போதும் என்மனம் பதைக்கத் தொடங்கியது. ஒவ்வொரு பக்கம் முடியும்போதும் நான் ஒரே சமயத்தில் பதற்றமும் ஆனந்தமும் அடைந்தேன். என்னுடைய முன்தீர்மானங்கள் வீசியெறியப்பட்டன. என்னுடைய மலையாளி கர்வம் அடங்கியது. ஜமுனாவும் சாயாவும் டீச்சரம்மாவும் என்னை அவர்களது தனிமைக்கும் துக்கங்களுக்கும் தண்ணீரில்லாத நாட்களுக்கும் ஒரு பிஞ்சுக் குழந்தைபோல கைபிடித்து அழைத்துச் சென்றார்கள். கடின இதயமுள்ளவனான நான் இடையிடையே எனது ஈரமான கண்களை ரகசியமாகத் துடைத்துக்கொண்டேன். ’தண்ணீரை’ வாசித்து முடித்த பிறகு நான் சிறிது நேரம் மரத்துப்போய் உட்கார்ந்திருந்தேன்.

1971இல் எழுதிய நாவல். இந்த முப்பது வருடங்களாக கேரளத்தில் நாங்கள் இலக்கியத்தின் பெயரால் என்னவெல்லாம் சமத்காரங்களும் குலுக்கல்களும் தமுக்கடிப்புகளும் நடத்தியிருக்கிறோம். அப்போதெல்லாம் கள்ளமில்லாத ரத்தினம்போல இந்த நாவல் தமிழ் மண்ணில் எளிமையும் நிர்மலமுமான வாழ்க்கையை, நவீனத்துவத்துக்கும் அதிநவீனத்துக்கும் அப்பாலுள்ள நிரந்தர மனிதத்துவத்தின் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. ’தண்ணீரை’’ முப்பது வருடங்களுக்கு முன்பே வாசித்திருந்தால் நான் இன்னும் மேன்மையான மனிதனும் எழுத்தாளனுமாகியிருந்திருப்பேன்.

எனவே, எனது இந்தச் சிறுநாவலை தமிழ் வாசகர்களின் கரங்களில், பணிவுடனும் சங்கோஜத்துடனும்தான் சேர்ப்பிக்கிறேன். காந்திஜியைக் கொன்றவர்களின் குலம் இந்தியாவை ஆட்சிசெய்துகொண்டிருக்கும் இன்றைய களங்கம் படிந்த நாட்களுக்கு ஓர் அடிக்குறிப்பு இந்தப் படைப்பு. இதன் ஏதேனும் ஒரு அம்சம் உங்களை ரசிக்கவோ சிந்திக்கவோ தூண்டினால் நான் நிறைவு பெற்றவனாவேன்.

சக்கரியா

***
*மேற்கு தொடர்ச்சி மலை

(இதுதான் என் பெயர் 35 பக்க நாவல் - ”சக்கரியா, கோட்சே மூலமாகக் காந்தியைக் கண்டடைய முயற்சிக்கிறார்” - சக்கரியாவின் கோட்சேயும் கோட்சேயின் காந்தியும் - சுகுமாரன்)

வெளியீடு : அகரம்
முதற்பதிப்பு :டிசம்பர் 2001
பக்கங்கள் : 61
விலை : ரூ 40
முன் அட்டை ஓவியம் : கே.எஸ்.பணிக்கர்
இன்னமும் சுற்றில் இருக்கிறது.

சக்கரியாவின் இந்த முன்னுரைபற்றிக் கூறி, புத்தகமும் தந்துதவிய ஜோசப்புக்கு நன்றி.