22 August 2011

போர்ஹே மற்றும் நான் [சிறுகதை] - ஜோர்ஜ் லூயி போர்ஹே

மற்றவனுக்கு, போர்ஹேவிற்குத்தான், எல்லா விஷயங்களும் நடக்கின்றன. நான் போனஸ் அயர்ஸ் தெருக்களினூடே நடக்கிறேன், ஆங்காங்கே நின்றுகொண்டு ஒருவேளை பழக்கத்தினால் இருக்கலாம்,பழைய நுழைவாயில்களின் வில்வளைவுகளை அல்லது கம்பிக் கதவுகளை நோக்கியபடி. போர்ஹே பற்றிய செய்திகளை தபால் மூலம் அறிகிறேன். அவன் பெயரை பேராசிரியர் குழுவின் மத்தியிலும், வாழ்க்கைச்சரித அகராதியிலும் காண்கிறேன். எனக்கு விருப்பமானவை காலக்கண்ணாடிகள், வரைபடங்கள், பதினெட்டாம் நூற்றாண்டு அச்சுமுறை, வார்த்தைகளின் மூலம் காபியின் நறுமணம், ஸ்டீவன்சனின் உரைநடை; மற்றவனும் இந்த விருப்பங்களையெல்லாம் பகிர்ந்துகொள்கிறான்; ஆனால் அவற்றைக் கோட்பாடுகளாக மாற்றுமளவிற்கு ஒரு ஆடம்பரமான முறையில், எங்களுடைய உறவுமுறை மோசமாயிருக்கிறது எனச்சொல்வது மிகையாகப்படும். போர்ஹே தன்னுடைய கதைகளையும் கவிதைகளையும் புனைவதற்கு ஏதுவாக இருக்க நான் வாழ்கிறேன்.என்னை நான் வாழவிடுகிறேன். மேலும் அக்கதைகளும் கவிதைகளும் எனது பிராயச்சித்தம். அவன் உத்தமமான ஒருசில பக்கங்களை சாமர்த்தியமாய் எழுதிவிட்டானென்று ஒப்புக்கொள்வதில் எனக்குப் பிரயாசமில்லை. ஆனால் இப்பக்கங்கள் என்னைக் காப்பாற்ற முடியாது. ஏனெனில் உயர்ந்தவையெல்லாம் இனிமேலும் யாருக்கும் உரித்தானவை அல்ல - மற்றவனுக்கும்கூட இல்லை - பேச்சிற்கும் பாரம்பரியத்திற்கும் மட்டும். எப்படி இருப்பினும் நான் முற்றிலும் மறைந்து போகவேண்டுமென்பது என் விதி. எனது சில தருணங்கள் மாத்திரம் மற்றவனிடம் எஞ்சியிருக்கும். அவனுடைய முரட்டு வழக்கங்களான பொய்த்தலுக்கும் பாராட்டுதலுக்கும் என்னிடம் சாட்சியங்கள் இருந்தபோதிலும் சிறிது சிறிதாக நான் எல்லாவற்றையும் அவனிடம் ஒப்புவித்துக் கொண்டிருக்கிறேன். ஸ்பினோஸா,எல்லாப் பொருட்களும் தாமாகவே இருக்கவேண்டி அவை முயற்சி செய்வதாகக் கூறினார். ஒரு கல் தானொரு கல்லாகவே இருக்க விரும்புகிறது. ஒரு புலி புலியாகவே. நான் போர்ஹேவிடமே இருப்பேன். என்னுடன் அல்ல. (அப்படியானால் நான் வேறொருவன்) ஆனால் நான், பிறருடைய புத்தகங்களிலிருப்பதைக் காட்டிலும், கிடாரை இசைப்பதைக் காட்டிலும் குறைவாகவே என்னை அவனுடைய புத்தகங்களில் இனம் காண்கிறேன். வருடங்களுக்கு முன்பு அவனிடமிருந்து என்னைப் பிரித்துக்கொள்ள முயன்றேன். நகரத்திற்கு தொலைவிலுள்ள சேரிகளின் கட்டுக்கதைகளிலிருந்து நான், காலம் மற்றும் முடிவின்மையுடன் கூடிய விளையாட்டுகளுக்குச் சென்றேன். ஆனால் அவ்விளையாட்டுகள் இப்போது போர்ஹேவிற்கு உரியன. நான் வேறு விஷயங்களுக்குத் திரும்ப வேண்டும். எனவே என் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. நான் எல்லாவற்றையும் இழக்கிறேன். அனைத்தும் மறதிக்கு அல்லது மற்றவனுக்கு விட்டுச் செல்கிறேன். 

எங்களில் யார் இந்தப் பக்கத்தை எழுதுகிறோம் என்று எனக்குத் தெரியாது.

***

போர்ஹே மற்றும் நான் - இக்கதையைப் பற்றிய போர்ஹேவின் உரை.

இப்பிரபலமான கதை பழைய Jakyll and Hyde என்ற கதையின் உத்தியைக் கொண்டிருக்கிறது. அந்தக் கதையில் எதிர்ப்பு, நன்மைக்கும் தீமைக்கும் இடையே உள்ளது. என்னுடைய கதையில் காண்பவனும் காட்சியும் எதிராளிகள். அதிகமான மகிழ்ச்சி அல்லது மகிழ்ச்சியின்மை எனக்கு நேரும் வேளையில், நான் எதை அனுபவிக்கிறேனோ அது வேறு யாருக்கோ நடந்துகொண்டிருப்பதாக நான் உணர்வேன். ஒரு இந்தியத் தத்துவத்தின்படி ‘நான்’ என்பது வெறுமனே ஒரு பார்வையாளன்; தான் தொடர்ந்து நோக்கிக்கொண்டிருக்கும் ஒருவனிடம் தன்னை இனம் காண்பவன். நான் எழுதும்போது என்னுடைய சில விசேஷ சுபாவங்களை மட்டும் வலியுறுத்தி மற்றவற்றைப் புறக்கணிக்கிறேன். இந்த உண்மைதான் போர்ஹே ஒரு கற்பனை சிருஷ்டியென்று எனக்கு எண்ணத் தூண்டியது. பல கட்டுரைகளும் நூல்களும் அவனைப்பற்றி இருப்பது இந்த சந்தேகத்தை மேலும் வலுவாக்குகிறது. 

மொழிபெயர்ப்பு: சத்யன்.


Borges and I

The other one, the one called Borges, is the one things happen to. I walk through the streets of Buenos Aires and stop for a moment, perhaps mechanically now, to look at the arch of an entrance hall and the grill-work on the gate; I know of Borges from the mail and see his name on a list of professors or in a biographical dictionary. I like hourglasses, maps, eighteenth-century typography, the taste of coffee and the prose of Stevenson; he shares these preferences, but in a vain way that turns them into the attributes of an actor. It would be an exaggeration to say that ours is a hostile relationship; I live, let myself go on living, so that Borges may contrive his literature, and this literature justifies me. It is no effort for me to confess that he has achieved some valid pages, but those pages cannot save me, perhaps because what is good belongs to no one, not even to him, but rather to the language and to tradition. Besides, I am destined to perish, definitively, and only some instant of myself can survive in him. Little by little, I am giving over everything to him, though I am quite aware of his perverse custom of falsifying and magnifying things. Spinoza knew that all things long to persist in their being; the stone eternally wants to be a stone and the tiger a tiger. I shall remain in Borges, not in myself (if it is true that I am someone), but I recognize myself less in his books than in many others or in the laborious strumming of a guitar. Years ago I tried to free myself from him and went from the mythologies of the suburbs to the games with time and infinity, but those games belong to Borges now and I shall have to imagine other things. Thus my life is a flight and I lose everything and everything belongs to oblivion, or to him. I do not know which of us has written this page.
Translated by J. E. I.