21 August 2011

மாவோவுக்காக ஜோசியம்

மாவோ சே துங் 1949ல் ஜோசியம் பார்த்தார் என்று அங்குள்ள கைடுகள் பேசிக்கொள்கிறார்கள் என்று தினமணி ஆசிரியர் ஆதாரமில்லாமல் அவதூறாக எழுதி இருக்கிறாராம். ஆகவே அவரைப்பற்றி “அம்மாவின் திருவடியை நக்கிய தினமணி வைத்தியநாதன் !” என்று புரட்டுகரமாய் எழுதுவார்களாம் இணையப் புரட்சியாளர்கள்.
மாவோவுக்காக,கலைஞரின் பராசக்தி கிளைமாக்ஸ் காட்சி ரேஞ்சில், தினமணி ஆசிரியரைப் பார்த்துக் கேட்கும் கேள்விகளைப் பாருங்கள். 

”இந்த செய்திக்கு என்ன ஆதாரம்? யார் சாட்சி? யார் சொன்ன தகவல்? எந்த விவரமும் கிடையாது.”

அடப்பாவிகளா!இதையேத்தானே ஒருவருடமாக நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.வினவின் முழுநேரப் பிரச்சாரகர் என்றும் தன்னை இந்த்திய நக்ஸலைட் பேரியக்கத்தின் இயக்கவாதி என்றும் சொல்லிக்கொண்டு திரியும் முகம்காட்ட தைரியமற்ற ஒன்றோ பலதோவான ஏழர என்கிற ஜென்மம் தினமணி ஆசிரியர் மாவோவுக்கு செய்ததாய்க் கூறும் ஆதாரமற்ற அவதூறைத்தானே எனக்கு எதிராய் செய்துகொண்டு இருக்கிறது.

70களில் இயற்கை எய்தியபின் இன்றுவரை கைலாயத்திலோ வைகுந்தத்திலோ கடவுளர்களைக் கம்யூனிஸ்டுகளாக மாற்றும் புனித திருப்பணியில் ஈடுபட்டிருக்கும் மாவோ சே துங் 60 வருடங்கள் முன்னால் ஜோசியம் கேட்டார் என்பதை ஆதாரமில்லாமல் எழுதினால் அவதூறு.

அதுவே நாடுதழுவிய நக்ஸலைட் பேரியக்கமான மகஇகவின் இணைய முகமான வினவின் பிரச்சாரகர் அடுத்தவனை ஊழல்வாதி லஞ்சலாவண்யக்காரன் ஆகவேதான் இடைக்காலப் பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தான் என்று ஆதாரமே இல்லாமல் பொய்யை எழுதினால் அது இயக்கப்பணி. 

தினமணி ஆசிரியருக்கு இவர்கள் டபாய்ந்துடபாய்ந்து நாங்கள் இப்படிச்சொன்னால் அப்படிச்சொன்னால் என்றெல்லாம் நான் சொல்லவில்லை. நேரடியாக சிபிஐக்கும் சிவிசிக்கும் அட்ரஸ் கொடுத்து புகார் செய்யச் சொல்லி ஓராண்டு ஆகிறது ஆனாலும் எதிர்காற்றில் எச்சில் துப்பல்தான் நடந்துகொண்டு இருக்கிறது. 

என்னைப் பற்றி RTI போட்டுக் கேட்கச்சொல்லி அதற்கான முகவரியும் கொடுத்தாயிற்று.  என்மீது நானே போட்டுக் கேட்ட RTIஐயும் அதற்கான  பதிலும் என் தளத்திலேயெ பிரசுரித்தும் இருக்கிறேன். 

சென்ற வருடம் வெறும் லீவில் இருந்ததை ஆதாரமே இல்லாமல் இவர்கள் இடைக்காலப்பணி நீக்கம் என்று பொய்ப் பிரச்சாரம் செய்தால் அது நக்ஸலைட் இயக்கத்திற்கான நற்பணி. ஆனால் 60 வருடம் முன்பாக மாவோசேதுங் சீனாவில் புத்தபிக்குக்களிடம் ஜோசியம் கேட்கவில்லை என்பது மட்டும் இவர்களுக்கு உறுதியாய்த் தெரியும். அதைப்பற்றி எவரேனும் சாங்கோபாங்கமாய் எழுதினால்கூட வினவித் தீர்த்துவிடுவார்கள்.

எல்லா எதேச்சதிகாரிகளையும்போல மாவோ இறந்த மறுதினம் முதலே கம்யூனிஸம் மெல்ல நீர்க்கத்தொடங்கி செந்நிறம் வியாபார காந்தமாய் உருமாறி மஞ்சள் பிசாசை விரட்டிப் பிடிக்க லோலோவென்று அலைந்துகொண்டு இருப்பதுதான் இன்றைய நிதர்சனம்.

காந்தியைப் போலவே பாவம் மாவோவும் சீனாவில் படமாய் மட்டுமே தொங்கிக்கொண்டிருக்கிறார். அதுவும் எத்துனைக் காலத்திற்கு என்று யார் கண்டது? 

வேண்டுமானால் ஒன்று செய்யலாம், சட்டையை கழற்றிக் கக்கத்தில் செருகி, கிராஸ்பெல்ட்டு ஐயர் வழிவிட ஆதி சங்கரர் அமர்ந்த உள்மண்டபப் புனிதஸ்தலத்தில் குந்தி உட்கார்ந்து காஞ்சி காமாக்ஷி எதிரில் சீட்டுருட்டிப்போட்டு அருள்வாக்கு கேட்டுப் பார்க்கலாம். ஏனென்றால் அந்த அம்பாள் மட்டும்தான் அதிகாரபூர்வமாய் மத்திய கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்டது.