21 August 2011

கடமையும் ஊழலும் நீள நாக்குகளும்

அதிகார எல்லைக்குள் இருக்கும் தொழிற்சாலைகளில் ஏற்றுமதியைக் கண்காணிப்பதும் அரசு அதிகாரிகளின் வேலைகளில் ஒன்று. சுயமாகவே தொழிற்சாலைகள் ஏற்றுமதி செய்துகொள்ளவும் சட்டம் அனுமதிக்கிறது. அதோடு அல்லாது, சுயமாக ஏற்றுமதி செய்துகொள்வதா அல்லது அரசு அதிகாரியை அணுகுவதா இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்பது தொழிற்சாலைகளின் பிரத்தியேகத் தேர்வாய் அளிக்கப்பட்டுள்ள உரிமை. மட்டுமல்ல, அதிகாரத்தின் பிடியைத் தளர்த்தும் முகமாய் எந்த திட்டத்திலும் வராத வழமையான ஏற்றுமதிகளை அந்தந்த நிறுவனங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் அமலுக்கு வந்தாகிவிட்டது.தங்களிடம் வந்துதான் ஏற்றுமதிசெய்ய வேண்டும் என அதிகாரிகள் கட்டாயப்படுத்தலாகாது என்றும் சட்டம் சொல்கிறது. பலகாலமாகவே, அரசின் நோக்கம் தொழிற்சாலைகளின் மீதான அதிகாரிகளின் கெடுபிடியை, அத்துமீறல்களைத் தடுப்பது என்பதே. அதன் காரணமாகவே பெரும்பாலான நடவடிக்கைகள் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வை /கண்காணிப்பு இல்லாது தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களிடமே கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதிகாரிகள் தொழிற்சாலை /நிறுவனங்களுக்கு செல்வதற்கும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் அலுவலகத்திற்கே வராமல் மாதாந்தர தாக்கல்களையும் வரி கட்டுவதையும் ஆன்லைனில் செய்வது சலுகையாகவோ வசதியாகவோ அல்ல, கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  

இருந்தும் பல தொழிற்சாலைகள் அரசாங்க அதிகாரிகளின் கண்காணிப்புக்கு உட்பட்டு ஏற்றுமதி செய்வதையே தேர்வு செய்கின்றன. காரணம் தொழிற்சாலையே சோதித்து சுயமாக வைத்துக்கொள்ளும் சீல் துறைமுகத்தில் சுங்க ஆய்வுக்கு உட்பட்டது. ஆனால் ஒருமுறை ஆய்வாளர்-இன்ஸ்பெக்டர் (அ) சூப்பிரெண்டெண்டெண்ட் சோதனை செய்து கையெழுத்திட்டு வைக்கப்பட்ட சீல் வெளிநாட்டின் எல்லையை /கரையைத் தொட்டு முகவரியாளரால் மட்டுமே உடைக்கப்படும். 

இக்கரை கடக்கும் முன், சீல் வைக்கப்பட்ட கண்டெய்னரில் தடை செய்யப்பட்ட பொருள் கடத்தப்படுவதாக பிரத்தியேக துப்பு இருந்தால்தவிர வருவாய் புலனாய்வுத்துறைகூடக் கைவைக்காது, கூடாது. அந்த அளவிற்கு ‘நம்பிக்கையும் புனிதமும்’ உள்ள ஒன்று ஓடிஎஸ் என்கிற ஒன் டைம் சீல். நெடுஞ்சாலைப் பயணத்தில், நிதானமாய் சென்றுகொண்டிருக்கும் கண்டெய்னர்கள், நாம் சாதாரனமாய்க் கடந்து செல்பவை. அடுத்தமுறை முந்த நேர்கையில் கவனித்தால் கண்டெய்னரின் வல இட கதவுகளுக்கு நீள் இரும்புக் கம்பிகளாலான நான்கு தாழ்ப்பாள்கள் இருப்பதும் அவற்றில் இரண்டாவதாய் மூடப்படும் இடக்கதவின் முதல் தாழ்ப்பாளில் குண்டு சாக்பீஸுக்குத் தொப்பி வைத்ததுபோல் அடியில் சிறிய குப்பியுடன் ஒரு பொருள் தொங்கிக்கொண்டிருப்பதையும் காணலாம்.அதற்கு அடுத்து வண்னத்தில் ஒல்லியாய்த் தொங்குவது லைனர் ஏஜெண்டின் சீல். எந்த சீலுமற்றிருப்பது சரக்கேற்றச் செல்வதாய் இருக்கக்கூடும். 

சில நிறுவனங்களுக்கு, ’சீல் மட்டும் வேண்டும்’ அதே நேரம் அதிகாரி கம்பெனி வளாகத்திற்குள் வராமல் இருப்பதும் அவசியம். வேவுக் கண்களில் ஏற்றுமதி தவிர வேறு எதெல்லாம் படும் என்று யாருக்குத் தெரியும்? தகவல்களும் தரவுகளுமே தன்னிகரற்ற பலம்.

எப்படி எழுதுகிறீர்கள் என்று தி.ஜானகிராமனைக் கேட்டதற்கு அவர் சொன்ன பிரபல பதிலான கண்னையும் காதையும் திறந்து வைத்துக்கொண்டிருக்கிறேன் என்பது இலக்கியத்திற்கு மட்டுமே பொருந்தக்கூடியதா என்ன?

அலுவல் நாளில்கூட சென்னைக்குள்ளேயே சில கிலோமீட்டர் தொலைவில்தான் ஏற்றுமதி என்றபோதிலும், சென்றுவர வண்டி காத்திருக்கிறது எனினும், இருந்த இடம்விட்டு நகராமல், கண்டைனருக்குள் அப்படி என்ன தப்பாகப் போய்விடப்போகிறதா என்ன என்று ’டேபிள் கிளியரன்ஸாய்’ ‘நம்பிக்கையின் பேரில்’ கண்டெய்னர் சீலை நேரில் போய் சோதித்துபோல் கையெழுத்து போட்டு, கம்பெனிக்காரர்கள் கையிலேயே கொடுப்போரும், கிடைத்தது ஓஸிக்கார் சவாரி என்று சொந்த வேலைக்காக அதை தொழிற்சாலைக்கு நேர் எதிர் திசையில் ஓட்டிக்கொண்டு செல்பவர்களும் உண்டு. தூசு தும்பு அலர்ஜி காரணமாய் தொழிற்சாலைக்கு நேரில் செல்வதைத் தவிர்ப்பவர்களும் உண்டு. நேரில் சென்று கொடுப்பதே சட்டப்படியான செயல் ஆகவே அப்படியானவர்களும் உண்டு எனச்சொல்வது ஏதோ அவர்கள் அறுதிச்சிறுபான்மை என்கிற தோற்றத்தைக் கொடுத்துவிடலாகாது.

சோதிப்பது என்பது அதிகாரியின் கடமை என்பதை அழுத்திச் சொல்வதுதான் நோக்கமே அன்றி தொழிற்சாலைகள் எல்லாம் கடத்துவதையே கனகாரியமாய்ச் செய்துகொண்டிருக்கின்றன என்று பொருளல்ல. எப்போதோ யாரோ ஒருவர்தான் தவறு செய்யப்போகிறார்கள் என்கையில் ஏன் இவ்வளவு அதிகாரிகளுக்குத் தண்டச் சம்பளம் என்பது, எப்போதோ வரக்கூடும் என்று எதிர்பார்க்கிற போருக்கு ஏன் இத்தனை தளவாடமும் ராணுவமும் என்கிற பொறுப்பற்ற அசட்டுக் கேள்விக்கு இணையானது. 

விபத்து எப்போதோ ஒருமுறை நடப்பதுதான் எனினும் எப்போதும் விழிப்பாய் இருப்பவனுக்குப் பெயர்தான் ஓட்டுநர்.

அதிகாரமும் சட்டமும் கண்ணெதிரில் நிற்கையில் மீறுவதற்கு அரிப்பெடுத்தாலும் சற்றே பயம் கலந்த தயக்கம் ஏற்படுவதில்லையா? டிராஃபிக் போலீஸே இல்லாமல் சிக்னல் மட்டுமே ஒழுங்குபடப் போதுமானதாய் இருக்க வேண்டும் என்பது தொலைதூர லட்சியம். பேருக்கு ஒரு ஆள் சீருடையுடன் ஓரமாய் சும்மா நிற்பதே பெரும்பாலோரைக் கட்டுப்படுத்துகிறது என்பதே நடைமுறை யதார்த்தம்?

நாட்டின் பொருளாதார நலத்திற்கான அந்நியச்செலாவணியை ஈட்டிக் கொடுக்கும் அத்தியாவசியக் காரணிகளில் ஒன்று ஏற்றுமதி. எனவேதான் ஏற்றுமதிக்கு இவ்வளவு ட்ராபேக் சலுகைகள். ஷூ அப்பர் ஏற்றுமதி செய்வதான போர்வையில், மிகச்சில பெட்டிகள் தவிர மொத்த கண்டெய்னரிலும் தாள் குப்பைகள் அடைக்கப்பட்டு வருஷக்கணக்காய் நடந்த 500 கோடி மோசடியை தினசரிகளில் படித்து அறிந்திருக்கலாம். தடை செய்யப்பட்ட ரெட் சாண்டர்ஸ் கடத்தப்பட்டது, புலனாய்வுத் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது அடிக்கடி சென்னையிலேயே தட்டுப்படும் செய்தி. 

நமக்குத் தொழில் சோதித்தல் சந்தேகக் கடமையில் சோராதிருத்தல்.

வேலைநிறுத்தம் காரணமாய் லாரி கிடைக்காது.அன்று கிடைத்த கண்டெய்னரில் அன்றிரவே அது மதுராந்தகத்தைவிட்டுப் புறப்பட்டு மறுநாள் தூத்துக்குடியை அடையவில்லை எனில், திங்கட்கிழமை திரும்ப விடுமுறை என்பதாலும் அடுத்த கப்பல் அடுத்த வாரம்தான் என்பதாலும் அன்றைய தினம் கண்டெய்னர் கம்பெனி கேட்டைத் தாண்டியே ஆகவேண்டும். விடுப்பு தினம் என்று 24 மணிநேர ஊழியத்தை ஏற்றுக்கொண்டபிறகு முரண்டுவது முட்டாள்தனம்.

வார இறுதி வேலைநாளான வெள்ளிக்கிழமையே சனி ஞாயிறில் இருக்கப்போகும் ஏற்றுமதிக்கான சீலையும் கையெழுத்திட்டப் படிவங்களையும் கொடுக்கச்சொல்லி வந்த அழுத்த வற்புறுத்தல்களைக் கராறாகப் புறக்கணித்து, விடுப்பு எனினும் மாலை 5.30 மணிக்குக் கிளம்பி, அசோக சிங்கங்கள் பொரிக்கப்பட்ட அரசு சீலில் சுய கைரேகை மட்டுமே பதிவதுதான் சீருடைக்குக் கெளரவம் என்கிற கர்வத்துடன் ஊர்விட்டு ஊர் பயணம் செய்து சோதித்துப் பார்ப்பவனைக் கண்டு, எல்லாமே சரியாக இருக்கும் நமது தொழிற்சாலையும் நாமும் போய் இப்படி ஒரு கிறுக்கிடம் மாட்டிக் கொண்டிருப்பது நம் கிரகச்சாரம், என தலையிலடித்துக் கொண்டு இளக்கார முறுவல் பூப்பதைக் கண்ணோரம் கண்டாலும், கவனிக்காததுபோல் கடமையைச் செய்வதில் இருக்கும் திருப்தி, அலாதியானது. தீர்க்கமான படைப்பொன்றை படைத்ததற்கோ படித்ததற்கோ இணையானது. 

இலக்கியவாதிக்கு இலக்கியம் மட்டுமே முக்கியம் மற்றதெல்லாம் இரண்டாம்பட்சம் என்று,இருப்பதிலேயே லகுவான வேலையாய்ப் பொறுக்கிக்கொண்டு கால் சம்பளத்திற்கு வேலை செய்வதாய் ஒப்பேற்றி, முக்கால் சம்பளத்திற்கு காவியம் படைத்து மூச்சுக்கு முன்னூறுமுறை அறமாய் சீறிக்கொண்டிருந்தால் அரசாங்க வருவாயில் கட்டிய வீட்டின் செங்கல்லாவது நம்மை சீந்துமா? வாய்க்கு அவலாய் இடைவிடாது கிடைத்துக்கொண்டே இருக்கிறதே இது ஒன்று போதாதா என்று, எழுதப்பட்டதெல்லாம் இலக்கியம் பெரிதாய் எழுதப்பட்டதெல்லம் பெரியபுராணம் என்கிற தோலாழ வாசிப்பு அரிப்புகளுக்குத் தொடர்ந்து சொறிந்து கொடுப்பதே நம் தொழில் என வாழ்வதும் எண்ணற்றவிதமான ஜீவராசிகளின் வாழ்முறைக்குள் வரக்கூடியதுதான்.

அறச்சீற்றத்தில் ஆருக்கும் நான் குறைவில்லையாக்கும் இந்தா ஊழலை ஒழிக்கிறேன் பேர்வழி என்று அன்னா ஹஸாரே பின்னால் எல்லோரும் கச்சை கட்டி இறங்கினால்தான் கற்பைக் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்கிற கட்டாயமா என்ன? வாங்கும் சம்பளத்திற்கு முழுமையாய் அவனவன் கடமையை சட்டப்படி சற்றும் சுணங்காமல் சரியாகச் செய்தாலே ஊழலுக்கு வாய்ப்பேது? 

அரசு அதிகாரி தடம் மாறி சட்டத்திற்குப் புறம்பாய் செல்லாவிடில் தொழிலதிபருக்கு ஏது அதீத லாபம்? அரசுக்கு ஏது வரி நட்டம்? ஓரிடத்துப் பள்ளமே வேறோரிடத்தில் மேடு. அரசுக்கு, சட்டப்படி வரவேண்டிய வரிப்பணம் தனியாரின் பாக்கெட்டுக்குப் போவதால்தானே புல்லுக்கும் ஆங்கே பொசிகிறது? சட்டத்திற்குட்பட்ட லாபத்திற்குப்போய் லஞ்சம் கொடுக்க தொழிலதிபரின் தத்துப் பிள்ளையா அரசு அதிகாரி?

உண்மை என்னவென்றே அறியாது, அவதூறு செய்ய, வாய் மட்டும் எப்படி ஒன்பது அடிக்கு நீள்கிறது? சப்போட்டாவை சப்பித்தான் சாப்பிட வேண்டும்  என்றென்ன கட்டாயம்? நீள நாக்குள்ளோர், நக்கியும் சாப்பிடலாம்.