31 August 2011

வாழ்த்துக்கள் வணக்கம் மாப்பு மற்றும் நன்றி முஹமத்


mohd safiullah *****@gmail.com to me
show details 4:43 PM (3 hours ago)

நலமா மாமல்லன் சார்,

நானும் உங்கள லந்த குடுக்கற கோஷ்டில ஒரு ஆளுன்னு நினைச்சுடீங்க.பரவாயில்ல சார். வாரத்துல யாராவது ஒருத்தர் உங்கள சீண்டரதுனால உங்களுக்கு அப்பிடி நினைக்க தொனிருக்கலாம்.

நான் ஒரிஜினல் முஹமத் தான் சார்.ஈகை திருநாள் இங்க நேற்று கொண்டாடினோம்.(பொண்டாட்டி புள்ளைகள் ஊருல இருந்துகிட்டு நாங்க இங்க என்னத்த கொண்டாடி மகிழ்றது.ரொம்ப வேதனையா இருக்கு சார். காசை 
சம்பாரிச்சு சந்தோசத்தை இழந்துக்கிட்டுருக்கோம்.சீக்கிரம் ஊருக்கு போய்டனும்னு நினச்சுகிட்டே இருக்கோம்)

ஊர்ல இன்னைக்கு நோன்பு பெருநாள்.உங்களுக்கும் எல்லோருக்கும் ஈகை திருநாள் வாழ்த்துக்கள் சார். இந்த ஒரு மாச நோன்புங்கறது வெறும் டெய்லி 14 மணி நேரம் சாப்பிடாம,தண்ணி குடிக்காம இருக்கறது மட்டும் இல்லாம ஒரு self check பண்ணிக்கற மாசமாவும்,பணக்காரங்களுக்கு பசிய பத்தி உணர்தறதும்,ஏழைகளுக்கு பணக்காரன்களோட ஈகை குணத்த தெருஞ்சிக்கறதுகான வாய்ப்பாவும் இருக்கு. 

உங்களோட "முடிச்சு" கவிதை படிச்சு அப்பிடியே மனசு கலங்கி கொஞ்சநேரம் உக்காந்துட்டேன். என் பையன் கூட நான் இருந்த கணங்கள இப்பிடி ஒரு கவிதையா படிச்சப்ப அப்பிடியே பரவசமா இருந்துச்சு.இந்த மாதிரியான உணர்வுகள குடுக்கற கவிதை சிறுகதை நீங்க எழுதிகிட்டே இருக்கணும்னு அந்த இறைவன்ட்ட பிரார்த்திகுறேன் சார்.

அன்புடன்
முஹமத் . 


முடிச்சு

நீளமாய் இருந்த நூலில்
முடிச்சு போட்டு வளையமாக்கினான்.
பையனின்
இரண்டு கை விரல்களிலும்
குறுக்குமறுக்காய் மாட்டிவிட்டு,
விளையாட்டின் விதிகளையும்
சொல்லிக் கொடுத்தான்
அப்பன்காரன்.

விளையாடத் தொடங்கிய
கொஞ்ச நேரத்திலேயே
சிடுக்காக்கிக் கொண்டான் சிறுவன்.

அப்பனில்லை,
அவனுடைய அப்பனாலும்
அவிழ்க்க முடியாதபடிக்கு
விழுந்திருந்தது சிடுக்கு.

எனினும்,
எதுவுமே நடக்காததுபோல்
புதிய நூலெடுத்து முடிச்சு போட்டு
மகனுக்கு
மாட்டிவிட்டுக்கொண்டிருந்தான்
சிறுவனாய் இருந்த அப்பன்.

***

அன்பான முஹமத்,

வாழ்த்துக்கள் வணக்கம் மாப்பு மற்றும் நன்றி. 

தங்கள் கடிதம் கண்டு இதற்குமேல் என்ன எழுதுவதென்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறேன்.

அன்பன்
விமலாதித்த மாமல்லன்.