29 August 2011

ஊழல் அரிப்புக்கு ஹசாரே அல்ல நாமே களிம்பு


மாமல்லன் சார் என்ன சொல்ல வருகிறார்? இரண்டு டீவி இருந்தாலும் இன்னொரு டீவி வாங்க அலைகிறார்கள், அதனால் கம்யூனிட்டி சான்றிதழுக்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது சரி என்றா?

இது பற்றி விரிவாகவே எழுத வேண்டும்.
***
@jyovramsundar@gmail.com 

விரிவாக யார் எழுத வேண்டும்? நீங்களா நானா? 

நீங்கள் அவசரத்திலும் ஆத்திரத்திலும் படித்து இருக்கிறீர்கள். மனம் சமநிலைக்கு வந்தபின் பொறுமையாய்ப் படியுங்கள். அதற்குப்பின் இதைப் படிக்கலாம். 

முன் குறிப்பு: 
எழுதி முடித்தபின் இது ஏதோ ஜ்யோவ்ராம் சுந்தருக்கு மட்டுமே சொல்வது போன்ற தொனி வந்துவிட்டிருப்பது தெரிய வந்தது. கோடிக்கணக்கான தீவிர வாசகர்கள் எனது அன்பு நண்பரும் ஹசாரேவின் தமிழகக் கிளையின் ஒரே கொபசெவுமான ஜெயமோகனை முன்னிறுத்தியே நான் இதை எழுதி இருப்பதாய் - இல்லவே இல்லை என்று நான் எவ்வளவுதான் சொன்னாலும் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்புள்ளது. ஏற்கெனவே இரண்டு பலம்வாய்ந்த இணைய வல்லரசுகள் எனக்கு எதிராய் போய்விட்ட காரணத்தால் மூன்றாவது மாபெரும் இணைய ஏகாதிபத்தியமான சுந்தரையும் இழந்தால் என்பாடு அதோகதிதான்? பரமசிவன் பிட்டுக்கு மண்சுமந்தான் எழுத்தாளன் ஹிட்டுக்கு எதையாவது சுமந்துதானே ஆகவேண்டும். எனவே சுந்தர் என்னிடம் கேட்டதால் அவரது வரிகளைக் கொண்டு,பொதுவாக பதிலளித்ததாக எடுத்துக்கொண்டு படிக்கும்படி தாழ்மையுடன் தெண்டனிட்டுக் கேட்டுக் கொள்கிறேன்.

<இது பற்றி விரிவாகவே எழுத வேண்டும்.>

விரிவாகவும் தெளிவாகவும் எழுதியதாகத்தான் நினத்திருந்தேன். லஞ்சம் ஊழல் நேர்மையின்மை போன்றவை,அரசு அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகளிடம் மட்டுமே இருக்கிற விஷயங்களில்லை. அவை தனிநபர் மனோபாவத்திலும் தனியார் தொழில் நிறுவனங்களிலும் தனிநபர் ஈடுபடும் தொழில்களிலும் கூட இருக்கிற விஷயம் என்று தனித்தனி உதாரணங்களோடு எடுத்துக்காட்டி எழுதி இருந்தேன்.

<என்ன சொல்ல வருகிறார்? இரண்டு டீவி இருந்தாலும் இன்னொரு டீவி வாங்க அலைகிறார்கள், அதனால் கம்யூனிட்டி சான்றிதழுக்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது சரி என்றா?>

இருவரி குதர்க்கத்துடன் உங்கள் காரியம் முடிந்தது. 

என் தலையெழுத்து அப்படி அல்ல. விளக்கித்தீர வேண்டும். ஏனெனில் நான் என் எழுத்துகளுக்குப் பொறுப்பேற்பவன். விளக்கமளிப்பதால் நான் ஷீணித்துப் போய்விடுவதாக எண்ணுபவனும் அல்ல.

<அதனால் கம்யூனிட்டி சான்றிதழுக்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது சரி என்றா?>

விண்ணப்பித்தது உண்மையான சாதிச் சான்றிதழ் எனினும் லஞ்சம் கேட்கிறார் எனில், லஞ்சம் கேட்ட அதிகாரி மீது DVACக்குப் புகார் செய்தவர்கள் எத்துனை பேர்? அப்படிச்செய்தும் எந்த நடவடிக்கையும் குறைந்த பட்சம் அந்த லஞ்சஅதிகாரி மாற்றப்படக்கூட இல்லை என்றால் மட்டுமே அப்படிப் புகார் கொடுத்தவர்களுக்கு மட்டுமே லஞ்ச ஊழல்களை எதிர்த்துப் பொங்கவோ பொறுமவோ உரிமை உண்டு.

<ரேஷன் கார்ட் கொடுப்பதற்கு லஞ்சம் கேட்கறான்யா!>

அட்ரஸ் தொல்லைக்காக, ரேஷன் அட்டை வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும் எனத் தெரிந்துகொள்ள மயிலை அலுவலகத்திற்குச் சென்று விசாரித்தேன். (மயிலை குளத்திலிருந்து சாய் பாபா கோவில் செல்கையில் முதல் மாடியில் இருக்கும் ரேஷன் அட்டை அலுவலகத்தில்) ஒரு படிவத்தை முழுமை செய்து கொடுத்தால் ரேஷன்கார்டு வாங்கிக்கொண்டு போகலாம் என்றார் ஒரு அதிகாரி காசும் கிடையாது கீசும் கிடையாது. அவர் எனக்கென்ன மாமனா மச்சானா? (இது நடந்தது ஊழலோ ஊழல் என்று கூவப்பட்ட கடந்த ஆட்சியில்) 

முயன்று பார்த்து முடியாமல் தோல்வியுற்றோருக்கே முனக உரிமை உண்டு. வெட்டி வாதப் பிரதிவாதம் நேர வீணடிப்பு.

எட்டு ஃப்ளாட்டுகள் கொண்ட கிரோம்பேட்டை வீட்டிற்கு சொத்துவரி கட்ட பல்லாவரம் நகராட்சி அலுவலகம் சென்று படிவங்கள் வாங்கிவந்தது நான். எல்லோரிடமும் கையெழுத்து வாங்கி அலுவலகத்தில் சமர்ப்பித்தவர் இன்னொரு விட்டின் உரிமையாளர். அலுவலகத்தில் தலைக்கு இரண்டாயிரம் ஆகும் எனத் தெரிவித்தார்கள் என்று சொன்னார். சொன்ன அதிகாரியின் அலைபேசி எண் வாங்கித் தொடர்பு கொண்டேன்.

சார் நான் *** பேசுகிறேன். வீட்டுவ்ரி சம்பந்தமாய் அந்த நெமிலிச்சேரி வி.வி.கோவில் தெரு, போஸ்டல் நகர்...

சொல்லுங்க சார்... 

நீங்கதான் சொல்லணும். ஒவ்வொரு ஃப்ளாட்டு ஓணர்கிட்டையும் ரெண்டாயிரம்ரூபாய் கேட்டீங்களாமே.

ஆமா சார். இல்லை சார் உங்குளுக்குக் கொறைச்சி பண்ணித் தறேன்.

உங்களைக் கொறைக்கச்சொல்லி நான் கேக்கலியே சார். 

சார் ஒரிஜினலா டாக்ஸ் போட்டா 1200 ரூபா ஆகும். நான் ஐநூறு ரூபாவுக்குப் பண்ணித்த்றேன். 

1200 ஆகறதை எப்படிங்க 500ஆ ஆக்கமுடியும்? உங்க எடத்துக்கு அடுத்து வர்ர அதிகாரி பிரச்சனை பண்ணினா? அதெல்லாம் எதுக்குங்க உள்ளது என்ன உண்டோ அதையே போடுங்க கட்ட்றேன்.

மத்தவங்க எல்லாம் இதுக்கு ஒத்துகிட்டாங்களே சார்.

மத்தவங்களை விடுங்க எனக்கு என்ன உண்டோ அதைப் போடுங்க நான் கட்டிடறேன்.

சார் ஒரு தடவை கட்டினா அப்பறம் ஆறாறு மாசத்துக்கும் அதிகமா கட்ட வேண்டி இருக்கும்.

உள்ளதைக் கட்டறது எப்படிங்க அதிகமா கட்டறதா ஆகும். நீங்கதான் இப்ப உள்ளதைக் கொறைக்கச் சொல்லி வற்புறுத்தறீங்க. பாத்துங்க டிவிஏஸில்லாம் எவன் கெடைப்பான்னு தெருத்தெருவாத் திரிஞ்சிகிட்டு இருக்காங்க. நாளுக்கு ரெண்டு பேரை பிடிச்சிகிட்டு இருக்கான்னு பேப்பர்ல வருது. பாத்துக்கோங்க. ஏன்னா நானும் உங்களை மாதிரியே ஒரு கவர்மெண்டு சர்வெண்டு அந்த நல்ல எண்ணத்துலதான் சொல்றேன்.

இம்முனையில் நான் ஹலோ ஹலோ என்று நான்கைந்து முறை கூவி தொடர்பு துண்டிக்கப்பட்டதை உறுதி செய்துகொண்டேன்.

அவசியமே இல்லை என எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஏழுபேரும் தலைக்கு இரண்டாயிரம் கொடுத்தார்கள். அவன் என்ன செய்துவிடுவானோ ஏது செய்து விடுவானோ வீடு கட்டியதில் அயோக்கிய பில்டர் என்னென்ன கோளாறு செய்து வைத்திருக்கிறானோ எதையாவது நோண்டப்போய் வேறு ஏதாவது பூதம் கிளம்பினால் என்னாவது என்கிற கிலி அவர்களைப் பிடித்து ஆட்டிற்று. அதை ஒருவன் காசாக்கிக்கொண்டான். 

நெட்டை மரங்களென நின்று புலம்பினார் 
பெட்டைப்புலம்பல் பிறர்க்குத் துணையாமோ
பாஞ்சாலி சபதம் - பாரதி.

காசு கேட்டு மிரட்டும் காலமல்ல இது காசு கேட்பவனை மிரட்டும் காலம். அன்னா ஹசாரேவுக்கு முன்னாலேயே அதற்கான உறுதியான சட்டங்கள் உள்ளன. சரியாகப் புரிந்து பிரயோகிக்கத் தெரியவேண்டும். நமக்குத் தெரிந்ததை நான்குபேருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

திருட்டுத்தனம் / சோம்பேரித்தனம் / மூட பயம் இவற்றை நம்மிடம் வைத்துக்கொண்டு இதைக் காசாக்குபவனைக் குறைகூறிக்கொண்டிருப்பது வெற்றுக் கணினிப்புலி வீரம் மட்டுமே.

<முக்கியக் காரணம் அதிகாரிகளின் பேராசைதான். >

சரி அதை எதிர்த்து ஏதேனும் ஒரு துரும்பையாவது கிள்ளிப்போட்டீர்களா? 

<எனக்குத் தெரிந்து 20 ஆயிரம் சம்பளம் வாங்கும் சில அதிகாரிகள் மாதத்திற்கு 5 லட்சம் ரூபாய்க்கு குறையாமல் லஞ்சம் வாங்குகிறார்கள்.>

லஞ்ச ஒழிப்புத் துறைக்கு, இதுவரை ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பி இருக்கிறீர்களா? அன்னா ஹசாரே வருகையில் பஸ்விட்டால் உங்கள் சமூகக்கடமை முடிந்து போயிற்று அல்லவா?

மாதாந்தர 5 லட்சத்தை விடுங்கள். வெறும் பத்தாயிரம் ரூபாய் கேட்டு வேலை போன எக்ஸாமினரைக் கேள்விப்பட்டிருக்கலாம். ஏனெனில் பாதிக்கப்பட்டவன் சிபிஐக்குப் போனான். கணினி குமாஸ்தாவில் இருந்து பதவி உயர்வு கிடைத்த ஓரிரு ஆண்டுகளிலேயே அவன் வீட்டில் 28 லட்சம் கிடைத்தது. மூன்று வேளை சொம்பில் ஜலம் வைத்துக் கொண்டு சந்தி செய்பவன். தந்தையோ ஓய்வு பெற்றும் தள்ளாத வயதில் உணவகங்களில் கணக்கெழுதி வந்தவர்.

//சோம்பேரிகளின் / திருடர்களின் சுரக்கிற குணமும் போய்த்தொலைகிறது அவன் செய்கிற தப்பிற்குப் புள்ளைக்குட்டிகள் கஷ்டப்படும். அந்தப் பாவம் நமக்கெதுக்கு என்கிற இரக்ககுணமுமே புகார்களைப் பரவலாய்க் குறைக்கின்றன.//

என்று எழுதி இருந்ததைப் படிக்கவில்லையா?

<ஏன் என்று யாராவது கேட்டால் நீ ரேஷன் கார்டுல எக்ஸ்ட்ராவா அரிசி வாங்கலையான்னு நொள நியாயம் பேச வந்துவிடுகிறார்கள்>

கீழ்க்கண்டது என் அனுபவம் அல்ல தனியார் துறையான ஐடியில் தனி நபர்கள் நடந்து கொள்வது பற்றி பஸ்ஸில் படிக்கக் கிடைத்தது.

Joe Anand - வரியைத் தான் விடாம புடிங்கிடுரான்களே? மென்பொருள் நிறுவன ஊழியர்கள் அரசியல்வாதிகளா, இல்ல சினிமாகாரங்களா? கறுப்புப் பணத்தை வெளிநாட்டில பதுக்கிரதுக்கு?
Aug 27, 2011

aravind aravind - ஜோ அப்படியில்ல. வரி ஏய்ப்பு நடக்குது.முந்தைய கம்பெனியில் மருத்துவ செலவுக்கு என்று பத்தாயிரம் கொடுப்பார்கள். அதற்கு ரசீது இருந்தால் வரி கிடையாது. நல்லா இருக்கிற எல்லோரும் போய் மருந்து கடைகளில் ரசீது வாங்கி விடுகிறார்கள். அவனுக்கு ஆயிரம் கொடுப்பார்கள். அரசுக்கு பிம்பிளிக்கி ப்லாப்பியை நாமம் சாத்தி விடுவார்கள். அவனுங்க எல்லாம் பொங்கும் போது எரிச்சல் வருது :-)))) இது ஒரு உதாரணம்.இது மாதிரி நிறைய இருக்கு :-)8/27


தனி நபர் முறைகேடு என வந்தால் மட்டும் அரிசி ரேஷன் கடை என்கிற பஞ்சப்பாட்டு நொள நியாயம் ஏன்? மேற்படி சம்பவத்தில் யாரும் யாரிடமும் நிர்பந்திக்கவில்லை. இருந்தும் ஏமாற்றுவதற்குப் பெயர் பேராசை இல்லாமல் வேறு என்ன ? பேராசை கொண்டவர்கள் மனித இனத்தில் அரசு அதிகாரிகள் மட்டுமேதான் இல்லையா?

பத்தாயிரம் அல்ல சமாச்சாரம். ஓசியில் காசு கிடைக்கிறது என்றால் பொய் ரசீதை நீட்டுவதுதான் விஷயம்? பல லட்சம் கிடைக்கிற அதிகாரம் வாய்ந்த இடத்தில் இருந்தால் எதையெதை எல்லாம் நீட்டுவார்கள்? அதிகாரியும் அரசியல்வாதியும் தவிர இந்நாட்டுப் பிரஜைகள் எல்லோரும் புனிதர்கள்.

வெறும் இரண்டாயிரம் ரூபாய்க்கே அதிகாரிகளை அல்லாட வைக்கலாம் எனில் மாதம் 5 லட்சத்திற்குக் குறையாமல் லஞ்சம் வாங்குபவர்களைப் பற்றி நேரடியாய்த் தெரிந்திருந்தும் இன்னமும் ஏன் புகார் கொடுக்காமல், சமூகக் கடமையை ஆற்றாமல், ஹசாரே கொடியை ஆட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்? மெய்நிகர் உலக பஸ்ஸில் மட்டும் பொங்கி வழிவதைக் கொஞ்சம் நிறுத்தி, மெய்யுலகிலும் செயலில் காட்டி ஊழல் ஒழியப் பாடுபடலாமே!

5 லட்சத்தை சும்மா தூக்கிக் கொடுப்பவன் எவன். அவன் எடுத்துக் கொடுப்பது என்ன வெள்ளைப் பணமா? ஏன் கொடுக்கிறான்? எந்த ஆதாயமும் இல்லாமல் கொடுக்க அவன் என்ன தர்ம ஸ்தாபனமா நடத்துகிறான்? (ஐந்து லட்சமும் ஒருவரே கொடுத்தது அல்ல எனினும் - எந்த கைமாறும் இல்லாமல் நயாபைசா கைமாறாது) 

”சும்மா கிடைக்க சுதந்திரமென்ன சுக்கா மிளகா” சுக்கும் மிளகும் கூட சும்மா கிடைக்காத காலம் இது. வாய் திறந்து லஞ்சம் எனக் கேட்காமல் பேப்பரை சுற்றி விடுகிறானா, சரி எத்துனை நாள்தான் நீ தாமதிப்பாய் என பொறுத்து இருந்துதான் பாருங்களேன். (எந்தப் பேப்பருக்கும் 15 நாளுக்குள் ஆக்‌ஷன் எடுத்தாக வேண்டும். இல்லை என்றால் RTI ஐ போட்டு என்ன ஆயிற்று என்று கேட்டால் மூத்திரம்தான்)இருக்கமாட்டோம் நம் வேலை உடனடியாக முடிந்தாக வேண்டும். இங்கு தாமதமானால் எட்டு காசு நட்டம். எனவே ஒரு காசை விதியே என்று வெட்டு. ஏழு காசு சம்பாதிக்க எகிறிப்பற. எவனாவது வந்து உண்ணாவிரதம் இருந்தால் நமக்கு எந்த சேதாரமும் வராதபடிக்கு நோகாமல் பஸ் விட்டு ஆதரி!

ஆர்டிஓ ஆஃபீசில் பழைய ஓட்டுணர் உரிமத்தைப் புதுப்பிக்க பழைய அலுவலகத்தில் இருந்து ( 94ல் அப்போதைய அலுவலக முகவரியான 121, உத்தமர் காந்தி சாலையைக் கொடுத்திருந்ததால் அப்போது ஆர்டிஓ அலுவலகம் ஸ்பர் டேங்க் ரோடு ஸ்ரீமித்தாய் அருகில் இருந்தது. தற்போது அய்யனாவரத்தில் உள்ளது. அங்கிருந்து திருவான்மியூர் ஆர்டிஓவுக்கான மாற்றலுக்கான அனுமதியை வாங்கிவந்தால்தான் முடியும் என்றார்கள். திருவான்மியூர் டு அய்யனாவரம் பைக்கில் பற. அங்கேயே ஃபார்ம் ஃபில்லப் பண்ணி உடனே கையெழுத்து வாங்கி பறந்து திருவான்மியூர் வந்து டாக்டர் சர்டிஃபிகேட் வாங்கி - அதற்கு (டாக்டரம்மா ரசீது கொடுக்காத காரணத்தால் அந்தம்மாளின் இன்கம்டாக்ஸ் கணக்கில் வராத) 100 ரூ கொடுத்ததும் பெட்ரோலும் மட்டுமே செலவு. ஓட்டுநர் உரிமத்திற்கு ஒற்றைபைசா என்னிடம் கேட்கப்படவும் இல்லை நான் கொடுக்கவும் இல்லை. இதுகூட கடந்த ஊழலோ ஊழல் என்று கூப்பாடு போடப்பட்ட ஆட்சியில்தான் நடந்தது.

வன்முறை பிரயோகிக்கப்பட்டால்தான் வன்புணர்ச்சி. இருவர் சம்மதித்தால் சம்போகம். 

என்ன செய்யட்டும் வேறுவழியில்லை விதியே என்று இருந்துவிட்டேன் என்று படிக்காத பாமரனோ அன்றாட பாட்டிற்கே முகம்கொடுத்து மாளாத பாட்டாளியோ சொல்லலாம். சொல்வ்தைக் குறைகூறாமல் புரிந்தும் கொள்ளலாம். எழுத்தில் இமயத்தைப் புரட்டும் நாமும் இயலாமையைச் சுட்டுவது நியாயமில்லை.

2005ல் அம்மா தவறிப்போனபோது இறப்புச்சான்றிதழ் வாங்க அடையாறு மேம்பால இறக்கத்தின் அருகில் இருக்கும் அலுவலகம் சென்றேன். படிவம் எழுதித்தருகிறேன் என ஒருவன் வந்தான் 

எனக்கு எழுதப்படிக்கத் தெரியும், இது இங்கிலீஷில் கூட இல்லை. தமிழில்தான் இருக்கிறது. நானே பார்த்துக் கொள்கிறேன் என்றேன்.

சான்றிதழ் வேணும்னா... என்று இழுத்தான். ஜன்னலுக்குள் இருந்து அலுவலர் என்னைப் பார்ப்பதை நானும் ஓரக்கண்ணால் பார்த்தபடியே அவனிடம் கூறினேன்.

ஃபார்ம் ஃபில்லப் பண்ணனும் அவ்ளதானே பண்ணிக்கிறேன்.

இல்ல சார் அது வந்து... 

ஏய் நீ யாரு உம் பேரென்ன? இந்த ஆஃபீஸ்ல நீ என்னவா இருக்கே? என்று நாக்கை மடித்ததும் அரண்டுபோனான். ஜன்னலுக்கு உள்ளிருந்த சிப்பந்தியைத் தாண்டி அமர்ந்திருந்த அதிகாரியே ஜன்னலுக்கு வந்து அவ்னை அதட்டி மிரட்டத் துவங்கிவிட்டார். அவனும் அகன்று விட்டான். குளத்துப் பாசியாய் அவர்கள் மீண்டும் பிணைவார்கள். ஆனால் ஒவ்வொரு கையாலும் தண்ணீர் தட்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். லோக் அயுக்தா வரட்டும் எனக் காத்திருக்கக்கூடாது. அடுத்த ஐந்தாவது நிமிடம் இறப்புச்சான்றிதழ் மூன்று அசல்களுக்கு என்ன உண்டோ அதற்கான காசு மட்டுமே கேட்கவும் கொடுக்கவும்பட்டது. அதற்குப் பிறகு இப்போதெல்லாம் நேரில் சென்று மல்லுகட்டும் சிரமம் கூட இல்லை ஆன்லைனில் பெற வசதி செய்யப்பட்டுவிட்டது (இதுகூட கடந்த ஊழலோ ஊழல் ஆட்சியில்தான். இந்த ஆன்லைன் ஏன் அமல்படுத்தப்பட்டது? ஹசாரே வரும்வரைக் காத்திருக்காமல் அரசு இயந்திரத்தின், அதிகாரிகளின் நேரடி ஆதிக்கத்தைத் துண்டிக்கத்தான். 

அதற்குச் சில தினங்கள் முன்பாக, பெசண்ட்நகர் மின்சார சுடுகாட்டில் 400 ரூபாயை இழுத்திழுத்துக் கேட்டார்கள். சிரித்தபடி ரசீதுல என்ன அமொவுண்டு போட்டுத் தருவீங்க என்றேன். சார் பாத்துக் குடுங்க சார் ஆறு மணிக்கு மேல ரெசிடென்சியல் ஏரியாவுல கம்ளெய்ண்ட் ஆயிரும் சார். இத்துனைக்கும் 10.45க்குப் போன அம்மாவுக்கு, வந்து பார்த்து இயற்கையான் மூப்புமரணம் என சர்ட்டிபிகேட் தந்த தனியார் மருத்துவமனை டாக்டருக்கு 400 ரூபாய் (கம்ப்யூட்டர் இருந்தும் கார்பன் காப்பி கூட வைத்து எழுதப்படாத ’நியாயமான’ ரசீது) திட்டமிட்டபடி 1 மணி வாக்கில், அவளது விருப்பப்படி ஆச்சார் வந்து காரியங்கள் தொடங்கி, அம்மாவின் உடலுடன் நான்கு மணிக்கே முடியிருப்பிலிருந்து ஒரு கிலோமீட்டர் கூட இல்லாத சுடுகாட்டை அடைந்துவிட்டோம். ஆறுமணிக்கு இன்னும் ஒரு உடலை எரிக்கும் அலவிற்கு நிறைய சமயமிருந்தது எனினும் அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்தேன். இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய ஆச்சாரியாருக்கு வேட்டி மேல்துண்டு கொடுப்பதில்லையா அதுபோல இது எலக்ட்ரிக் வெட்டியானுக்குக் கொடுத்தது. அதற்குப் பெயர் லஞ்சமல்ல என் விருப்பம்.

வாழ்வைப் போராட்டமாக எதிர்கொள்ளாமல் சிறு துரும்பையும் நகர்த்தத் துப்பில்லாதவர்கள்தான் ஹசரே வருவாரா எனக்காக மசால்தோசை சுட்டுத் தருவாரா என்று வானத்தை நோக்கி அண்ணாந்தபடி இருந்துவிட்டு, எந்த குடாக்கு வந்தாலும் அப்போது மட்டும் கொடியாட்டி ஆத்மசாந்தி அடைந்து கொள்ளும். இந்த லோக்பால் கூத்தடிப்பிற்கு முன்னால் இன்னொரு பாபா ஆம்தேவாக இருக்கலாம் என்று எதிர்பார்த்து அன்னா மீது பெருமதிப்பு வைத்திருந்தேன். இந்தப்பத்து நாளில் அவரது விரதம் என்கிற ஒரு கிண்ணி மாவை வைதது வந்தது போனதையெல்லாம் கோரிக்கைகள் என்றாக்கி கடைசியில் ஒப்பனைப் பின்வாங்கலாய் உப்புப்புளி பெறாத எதையும் சட்டரீதியாய்க் கட்டுப்படுத்த வழியற்ற தீர்மானமாய்க் கொண்டு விடுவதற்கா இத்துனை ஆர்ப்பாட்டம்? இது சும்மா உளூவுளாயி என்று அறியாமலொன்றும் விரதம் முறிக்கப்படவில்லை. 

லஞ்சத்தைப் பற்றி லபோதிபோ என அடித்துக் கொள்பவர்களில், லஞ்சம் கேட்டவரின் கண்களை நேராகப் பார்த்து இது என்ன ஃபீஸா சார். ரசீது கொடுப்பீங்களா? நான் ஏன் சார் உங்களுக்கு சும்மா பணம் குடுக்கணும் என்று எத்துனைப்பேர் கேட்டிருப்பீர்கள்? 

அதையும் மீறி காசுக்காக, காசு கொடுக்காததால் உங்கள் காரியம் தாமதமாகிற பட்சத்தில் கேட்பவரைப் பற்றி மாநில அரசாக இருந்தால் DVACயிலும் மத்திய அரசாக இருப்பின் CBI Anti-Corruption இருக்கும் சாஸ்திரி பவன் அலுவலகத்திலும் எத்துனைப்பேர் புகார் கொடுத்து இருப்பீர்கள்.

இப்போதெல்லாம் இதற்காக நேரில் போய் மெனக்கெட வேண்டிய அவசியம்கூட இல்லை. தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.ஆன்லைனில் புகார் செய்யலாம்.அதுவுமில்லை எனில் குறுஞ்செய்தி அனுப்பலாம். பஸ் விட்டு பாறை பிளப்பதற்கு பதில் முதலில் அதைச் செய்யுங்கள். 

மாநில அரசுத்துறை அதிகாரிகள் தொடர்பான புகார்களுக்கு
Directorate of Vigilance And Anti-Corruption
Head Quarters
Officers' Name & Address Phone
The Director,
Vigilance and Anti-Corruption,
Post Box No.487,
NCB 21, P.S.Kumarasamy Raja Salai,
Chennai – 600 028. 
044-24612561 (Direct)
044-24615929/24615949 
044-24615989/24954142
Fax:044-24616070

The Joint Director,
Vigilance and Anti-Corruption,
Post Box No.487,
NCB 22, P.S.Kumarasamy Raja Salai,
Chennai – 600 028.
044-24615969 (Direct)
044-24615929/24615949 
044-24615989/24954142 Fax:044-24617553
Central Range
Western Range
Southern Range
Special Investigation Cell

மத்திய அரசுத்துறை அதிகாரிகள் தொடர்பான புகார்களுக்கு

CHENNAI ZONE Joint Director and Head of Zone, III Floor, E.V.K., Sampath Building, College Road, Chennai 600006. 044-28232756 (Direct), 044-28272358(General), 044-28232755 (FAX) hozchn@cbi.gov.in 094444-46240 State of Tamil Nadu, Kerala & Pondicherry.

ACB Chennai III Floor,Shastri Bhavan No. 26, Haddows Road, Nungambakkam, Chennai 600006. 044- 28273186, 044 - 28270992 hobacchn@cbi.gov.in 094440-49224 Tamil Nadu, State and Punducherry Union Territory

SCB Chennai A Wing, IIIrd floor, Rajaji Bhawan, Besant Nagar, Chennai-600 090. 044- 24917144, 044-24468416 hobscchn@cbi.gov.in 094449-02112 States of Tamil Nadu, Andhra Pradesh, Karnataka and UT of Pondicherry pertaining to Special Crimes.

EOW Chennai A Wing, IIIrd floor, Rajaji Bhavan, Besant Nagar, Chennai-600 090 044-24461959, 044-24468889 044-24463888 hobeochn@cbi.gov.in 094449-71533 States of Tamil Nadu, Andhra Pradesh, Karnataka and UT of Pondicherry pertaining to Economic Offences.