31 August 2011

ஊழலைப் பற்றி ஜல்லியடி வில்லுப்பாட்டு

<இன்று காலை செய்தித்தாள்களில் பார்த்திருப்பீக்ரள். ரவீந்தர் என்ற வருவாமன வரி கூடுதல் ஆணையர் 50 லட்சம் ரூபாய் (அதுவும் ஒரே டிரான்ஸாக்‌ஷனில்) லஞ்சமாக வாங்கி பிடிபட்டிருக்கிறார். 

மாமல்லன் சார், இப்பவே நிறைய சட்டங்கள் இருக்கு, புகார் செய் புகார் செய்ன்னு சொல்றாருல்ல. இந்த வழக்கு என்ன ஆகுதுன்னு பார்ப்போம். ஒரு சுக்கும் ஆகாது என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், விமலாதித்த மாமல்லன் சாருக்காக பொறுத்திருந்து பார்ப்போம். அதிகபட்சம் பாதி சம்பளத்துடன் கூடிய தற்காலிக வேலை நீக்கம், கொஞ்ச நாள் கழித்து மறுபடியும் போஸ்டிங் (ரிடையர்மெண்ட் வயசு ஆகாவிட்டால்!). இதற்கு மேல் ஒன்றும் ஆகாது.

போன வருடமோ அல்லது அதற்கு முந்தியோ லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்ட கடவுச்சீட்டு உயர் அதிகாரி என்ன ஆனார்? அதேதான் இதற்கும் :-) 

உயர் அதிகாரிகளுக்கு மட்டும் இப்படி என்று நினைத்துவிடாதீர்கள். எனக்குத் தெரிந்தே பல கீழ் நிலை / இடைநிலை அதிகாரிகள் மாட்டிக் கொள்வதும், பிறகு ஒன்றுமே நடக்காதது போல் தொடர்வதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இப்போது லோக்பாலுக்கான தேவை என்ன என்பது புரியும்.>


**********

ஜ்யோவ்ராம் சுந்தர்ஜி வில்லுப்பாட்டாய் எதையாவது சொல்லிகொண்டு போங்கள். என் காதில் வந்து ஏன்யா ங்கொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

<மாமல்லன் சார், இப்பவே நிறைய சட்டங்கள் இருக்கு, புகார் செய் புகார் செய்ன்னு சொல்றாருல்ல. இந்த வழக்கு என்ன ஆகுதுன்னு பார்ப்போம்>

இதுவரை புகார் கூட செய்யாமல், புகார் செய் புகார் செய் என்று சொல்கிறாரே மாமல்லன் புகார் செய்வது என்பது என்று ஆரம்பித்தால் புகார் செய்வதை மட்டுமே தொழிலாய் செய்துகொண்டிருக்கவேண்டும் என்று பஸ் விட்டு விவாதிப்பதை மட்டுமே வாழ்வின் ஆதியந்த செயல்பாடாய் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கும் ஹிந்து பத்திரிகைக்கு ஆசிரியருக்குக் கடிதம் எழுதி ஆத்ம திருப்தி அடையும் அம்மாஞ்சி மாமாக்களுக்கும் என்ன வித்தியாசம்? 

அந்த அம்மாஞ்சி மாமாவாவது ஏதேனும் ஒரு அரசு அலுவலகத்தில் எப்போதேனும் ”திஸ் ஈஸ் அட்ராஷியஸ்” என்று ரெண்டு வார்த்தை பேசிவிடக்கூடும். ஆனால் தொழில் நிறுவன அதிபதிகள், மூடிக்கொண்டு காசு கொடுத்து ஊத்திமூடும் வேலையை ஜல்தியாய் முடித்து அலுவலகம் வந்து அதை பற்றி பஸ்ஸில் பொங்க மட்டுமே முடியும்.

லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல, கொடுப்பதும் குற்றம் என்கிறது சட்டம் என்பதாவது தெரியுமா? இல்லை செளகரியம் கருதித் தெரியாதா?

ஓ! அப்போ அன்னா ஹசாரேவின் ஜன்லோக்பால் வந்துவிட்டால் 50லட்சம் 'வாங்கி'ப் பிடிபட்டவரைத் தூக்கில் போட்டுவிடுவார்களோ?

போகவும் <வருவாமன வரி கூடுதல் ஆணையர்> இவர் கீழ்மட்ட அதிகாரியா? ஐஆர்எஸ் அதிகாரி என்றல்லவா அவரே பின்னால் ஓரிடத்தில் சொல்கிறார். <கம்பெனி அந்தப் பணத்தை பெனால்டியோடு கட்டியாக வேண்டும். அவங்களும் கட்டிடுவாங்க. ஆனால் இந்த ஐஆர்எஸ் அதிகாரி?> அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத உயிர்த்தியாக கோரிக்கையின்படி கீழ்மட்டத்து அதிகாரிகள் மட்டுமே ஜன்லோக்பாலின் கீழ் வருவார்கள். இந்த எழவுகூடத் தெரியாமல் 

<கம்பெனி அந்தப் பணத்தை பெனால்டியோடு கட்டியாக வேண்டும். அவங்களும் கட்டிடுவாங்க.>

நிறுவனம் செய்த மோசடியை எவ்வளவு சுலபமாய்த் தாண்டிச் செல்ல முடிகிறது. அடடே என்னமாதிரியான அப்பழுக்கற்ற வெண்பொங்கல்!

கொலையே செய்தவன் என்றாலும் அவன் உயிரைப் பறிக்க அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று கேள்வி எழுப்பும் சமகால மதிப்பீடுகளின்படி லஞ்சம் வாங்கியவனை என்ன செய்வது? ஜன்லோக்பால் என்று மூன்றுமுறை கூவிவிட்டு தூக்கில் போடுவதா? 

<அதிக பட்சம் சஸ்பெண்ட் பண்ண போறாங்க! அவரோட பிஸினஸை நல்லா பார்த்துக்க முடியும்!>

ஒரு துறை அதிகாரிகளை அன்றாடம் சந்திக்கும் அனுபவ அறிவை வைத்து அனைத்துத்துறை நடவடிக்கைகளும் அப்படியே என்று எவ்வளவு சுலபமாய் முடிவுகட்டித் தீர்ப்பு வழங்கிவிட இயல்கிறது. அல்லது சும்மா கோக்குமாக்காக நானும் ஒரு கமெண்ட் போட்டேன் என்பதில் ஊழலை ஒழித்த திருப்தி. தெருவோரச் சுவர் போல பஸ்ஸ் இணையத்தின் தனிநபர் பொதுக்கழிப்பிடம்.

துறை அளவில்:
லஞ்சம் கேட்டதாக வாய்வழிப் புகார் செய்யப்பட்டது, துறையின் மேலதிகாரியிடம் மட்டுமே எனில் வாய்வழிப் பரேடு, ஒப்புக்கேனும் உடனடி இடமாற்றம்.

புகார் எழுத்து வடிவில் கையெழுத்திடப்பட்டு துறையின் விஜிலென்ஸ் பிரிவுக்கு வந்தது எனில் இடமாற்றம் + II/10A எனப்படும் விஜிலென்ஸ் ஃபைல் திறக்கப்பட்டுவிடும். அந்த ஃபைல் மூடப்பட பற்பல ஆண்டுகள் பிடிக்கும். அதுவரை அந்த நபருக்கு எந்த ‘வருமானம் வரக்கூடிய’ போஸ்டிங்கும் கொடுக்கப்படமாட்டாது. கை சிவக்கக் காசு வாங்கியே பழகிப்போனவருக்கு அடுத்தவர்கள் வாங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பது எவ்வளவு பெரிய தண்டனை?

அட அரசு எப்படி இவ்வளவு வேகமாக செயல்பட முடியும்? நடவடிக்கை எடுக்கும் உயர் அதிகாரி மட்டும் என்ன லஞ்சம் வாங்காதவரா? அல்லது அவருக்கு மட்டும் கப்பம் கொடுக்கப்படாமல், லஞ்சம் வரும் இடத்தில் இவரால் வந்து உட்கார்ந்து உஞ்சவிருத்தி பண்ண எப்படி முடிந்தது என ஆச்சரியமாக இருக்கிறதா?

RTI என்கிற அஸ்திரம் அரசு அலுவலகங்களில் செய்த மாயம் அசுரத்தனமானது. பொதுவாக அரசு அலுவலகத்தில் கொடுக்கப்படும் எந்தத் தாளும் ‘வெயிட்’ வைக்காவிட்டால் தானாகல் பறந்து குப்பைக்கூடைக்குப் போய்விடும். 15 ஜூன் 2005க்குப் பிறகு விஷயமே வேறு. கொடுக்கப்பட்ட புகார் 15 நாட்களுக்குள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால், அதன் மீதான நடவடிக்கை என்ன ஆயிற்று என்று இந்தியக்குடிமகன் எவனும் RTIயின் கீழ் 10ரூபாய் செலவில் கேள்வ் இ கேட்கலாம். புகாரைக் கண்னால் கண்டதும், அடுத்து RTIயில் கேள்வி வந்துவிடுமோ என்கிற பிதிறலிலேயே - குறைந்தபட்சம் மத்திய அரசு அலுவலகத்தைப் பொறுத்தமட்டிலாவது துரிதமாய் வேலை நடக்கும் காலம் இது. 

புகார் எவனோ சம்பந்தப்பட்டது. அதைப் பார்த்ததும், அதிலும் ’வாங்கிக்கொண்டு’ மெத்தனமாய்க்கூட இருந்துவிடுவது சாத்தியம்தான். ஆனால் RTI வந்தால் சும்மா இருந்தவனும் சேர்த்து சுக்கு கஷாயம் சாப்பிட வேண்டும்.

காசு வாங்கிக்கொண்டு கொடுக்கப்படும் போஸ்டிங்கில் எழுதப்படாத கெளரவப் புரிதல் காசு வந்தால் எனக்கும் பங்கு, கம்ப்ளெய்ண்ட் வந்தால் நீ மட்டும் தொங்கு. லட்டு நமக்கு லவடா உனக்கு.

எந்தக் காரியமுமே இருமுனைத் தொடர்பு கொண்டது என்பது அடிப்படை விஷயம் அல்லவா? அப்படி இருக்கையில் ஊழல் என்பது எப்படி ஒரு பக்க விஷயமாக மட்டுமே இருக்க முடியும்?

பெரும்பாலான அரசு அதிகாரிகள் காசு வாங்குகிறார்கள் எனில் ஊழல் இரு பக்கங்களிலும் ஜகஜ்ஜோதியாய் பிரகாசிக்கிறது என்றல்லவா பொருள். கொடுக்கிறவன் ஏன் சும்மா கொடுக்கப்போகிறான். அதைப் புரிந்துகொள்ள ஆர்டிஓ ஆபீஸ் 100 ரூபாய் ஊழல் ரேஷன் கார்டு ஆபீஸ் 50 ரூபாய் என்று ஊழல் என்று குமுட்டி அடுப்பை ஊதிக்கொண்டிருந்தால் போதாது. 

அரசு ஊழியர்களில் 30% என்ன செய்தாலும் மோசடியில் ஈடுபட்டே தீருவர். 30%  எவ்வளவு ஆசைகாட்டினாலும் மோசடிக்குப் போகமாட்டார்கள். நடுவில் இருக்கும் 40% தான் மதில்மேல் பூனைகள். மோசடி செய்து மாட்டிக் கொள்ளாமல் நன்றாக இருப்பவனைப் பார்த்தால் சப்புகொட்டிக்கொண்டு அந்தப்பக்கம் சாயும். 

மோசடி செய்து மாட்டிக்கொண்டு சிலமாத காலத்திற்குப் பணிநீக்கம் செய்யப்பட்டு பாதி வீட்டுப்படி மட்டுமே வாங்கிக்கொண்டு சார்ஜ்ஷீட் தாக்கல் செய்யத் தாமதமாகிற பட்சத்தில் முக்கால் வீட்டுப்படி வாங்கிப் பின் ரசீதில்லாத வக்கீல் ஃபீஸ் கொடுத்து, நீதிமன்றத்தில் முறையீடு செய்து இடைக்காலத்தடை வாங்கி அதன் பிறகு மேல்முறையீடாக உயர்நீதிமன்றம் சென்று பிறத்தியாரைவிட அதிகமாக வருமான வரி கட்டுபவரான ஜெத்மலானி போன்ற வக்கீல் உபயத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டால் மட்டுமே அவருக்குப் பழையபாக்கியுடன் திரும்ப வேலை கிடைக்கும். இப்போதெல்லாம் சிபிஐ கேஸ் என்றால் சிபிஐயின் சிறப்பு நீதிமன்றத்திலேயே நடக்கிறது என்பதால் வக்கீல் செலவெல்லாம் பெரிதாக வைக்காமல் சிலவருடங்களிலேயே வேலை நீக்கத்தில் முடிந்துவிடுகிறது.

ஆகவே 30% மோசமான கேசில் ஆக மோசத்தைத் தட்டினால் 40% இந்தப்பக்கம் சாய சமூகம் கொஞ்சமேனும் சட்டத்தின் கட்டுக்குள் இருக்கும் என்பதுதான் சிபிஐ ஏண்ட்டி கரப்ஷன் விங்கின் அடிப்படை சித்தாந்தம் - குறைந்தபட்சம் அரசு அதிகாரிகளைப் பொறுத்தமட்டிலேனும். 

30% 30% 40% என்பது 80களின் கணிப்பு. தற்போது வெகுவாக மாறிவிட்டிருக்கிறது. அதற்கு இன்னுமொரு முக்கியமான காரணம் உலகமயமாதலும் தொழில்விரிவாக்கமும். 1975ல் பத்து கிராம் தங்கம் 540 ருபாய் 2011ல் 25000. லஞ்சம் மட்டும் பஞ்சப்படி இல்லாமல் பட்டினி கிடக்குமா?

அரிசிவிலை
பருப்புவிலை
ஏறிவிட்டது
ஓட்டுக்கும் கொஞ்சம் 
ரேட்டைக் கூட்டுங்கள் சார்

(இறுதி 70களில் படித்த நினைவிலிருந்து எழுதியது தவறிருப்பின் மன்னித்துத் திருத்தவும். அநேகமாய் இதுவும் நீலமணி என்றே நினைவு) 

மேற்கண்ட சிபிஐ சித்தாந்தம் 89-90 வாக்கில் (ஒரு அதிகாரியைப் பிடிக்க) பெளடர் தடவிய நோட்டுகளின் எண்களைக் கைப்பட எழுதச்சொல்லி, கையெழுத்து வாங்கிக்கொண்டு, பணத்தைக் கையில் கொடுத்து, பிடிக்கும் முன்னும் பின்னும் என்னென்ன சமிக்ஞைகள் கொடுக்கவேண்டும் எப்படி செயல்படவேண்டும் என்று விவரமாக விளக்கிய சிபிஐ அதிகாரி, ’ஐயோ பாவம் எவரோ ஒருவரின் வாழ்க்கையைக் கெடுக்கப்போகிறோமே’ என்கிற குற்றவுணர்வு கொள்ளவேண்டாம், இந்த ஆள் அவன் வேலை பார்க்கும் துறையால் ஏற்கெனவே இரண்டு இன்க்கிரிமெண்ட் துண்டிக்கப்பட்டும் சில மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டும் திருந்தாத திமிர் பிடித்த கேஸ் ஆகவேதான் அவனது துறையே ஃபைலை எங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. எனவேதான் நாங்கள் இறங்கி இருக்கிறோம் என்று ’கொடுத்துப் பிடிக்க’ முனைப்புத் தூண்டலாய் தெரிவித்தது. ’எல்லோருமே வாங்கறான் என்பதால்’ இப்போதெல்லாம் குறிப்பாகப் புகாரின் பேரில் மட்டுமே செயல்பாடு.

இனையத்து பஸ்ஸில் கொடுக்கப்படும் செய்தியையேனும் முழுமையாய்க் கொடுக்கப்படுகிறதா? நிஜத்தில் நடந்தது என்ன அல்லது சிபிஐ சொல்வதுதான் என்ன? அரையும் குறையுமாய் ரெண்டு லைன் போடப்படும். அந்த செய்திக்கான ஆதாரம் என்ன? அதன் மூலம் எது? அதில் என்ன் சொல்லி இருக்கிறது? இதெல்லாம் யாருக்கும் தேவையில்லை. தந்தனத்தோம் என்று சொல்லியே ஆமா என்று ஆளாளுக்கும் ஜல்லி ஜால்ரா அடிக்க வில்லுப்பாட்டு அதிரத்தொடங்கிவிடும். 

இங்கு குறிப்பிடப்படும் நிகழ்வில், எவருக்கும் புகாரே இல்லை. இரண்டு பார்ட்டிகளும் அதிகாரியும் நிறுவன அதிபரும் சேர்ந்து வரிப்பணத்தை ஏய்த்து இன்புற்றிருந்த நிலையில் ‘விஷயம் கசிந்து வெளியேற’ மோப்பம் பிடித்து சிபிஐ மேற்கொண்ட நடவடிக்கைதான் இது. ஆனால் பத்திரிகையைப் பார்த்து விட்ட இரண்டு பஸ்களும் என்ன சொல்லின? 

சுந்தரின் பஸ்ஸ்
<இன்று காலை செய்தித்தாள்களில் பார்த்திருப்பீக்ரள். ரவீந்தர் என்ற வருவாமன வரி கூடுதல் ஆணையர் 50 லட்சம் ரூபாய் (அதுவும் ஒரே டிரான்ஸாக்‌ஷனில்) லஞ்சமாக வாங்கி பிடிபட்டிருக்கிறார்.>

பத்ரியின் பஸ்ஸ்
<நேற்று சிபிஐ பொறி வைத்துப் பிடித்த ஒரு வழக்கு செய்திகளில் வெளியாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்தஎவெரான் என்ற கார்பொரேட் நிறுவனம், கல்வித் துறையில் ஈடுபட்டுவருகிறது. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளது என்பதை ஒரு வருமான வரி அதிகாரி கண்டுபிடிக்கிறார். உடனே அவர் என்ன செய்யவேண்டும்? அந்த நிறுவன அதிகாரியைக் கம்பி எண்ண வைத்துவிட்டு, நிறுவனச் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, வரியைக் கட்டுமாறு செய்திருக்கவேண்டும். ஆனால், மாறாக என்ன செய்கிறார்? ஓர் இடைத்தரகரை வைத்து (அவர் ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட்!) பேரம் பேசி, 50 லட்ச ரூபாய் பணமாகப் பெற்றுக்கொண்டு, வரியைக் குறைக்கிறார். அப்போதுதான் சிபிஐ அவரைக் கையும் களவுமாகப் பிடிக்கிறது.>

பத்திரிகைகளுக்கு அளிக்கப்பட்டிருக்கும் செய்தியின் மூல வடிவம் சிபிஐ தளத்தில் இருக்கிறது. 
Press Release
New Delhi , 30-08-2011

The Central Bureau of Investigation has arrested an Additional Commissioner of Income Tax (IRS 1991 Batch), Chennai; Managing Director of Chennai-based private educational firm and a private person in a bribery case of Rs.50 lakh. The accused public servant was posted in Company Range-I, Chennai and was also holding additional charge of Company Range-III since.2010.

It was alleged that on 04.08.2011, the Additional Commissioner organized search and survey proceedings under Income Tax Act in the premises of Chennai-based private educational firm. The educational firm provides in-school education through internet and V-SAT. While conducting the search and survey proceedings, he also visited the premises of firm. The search and survey proceedings revealed that the Managing Director of the firm had concealed taxable income to the tune of Rs.116 crores. After the detection of huge taxable income, the Managing Director of firm contacted the Additional Commissioner through a Chartered Accountant to reduce the income tax liability. After holding negotiations, he requested the Additional Commissioner to suppress Rs.60 crores of taxable income out of Rs.116 crores detected by the search and survey.

The negotiations reached a final settlement that the Managing Director of firm should give Rs.50 lakh as bribe to Additional Commissioner of Income Tax for concealing the taxable income and reducing his tax liability. The Additional Commissioner reportedly told the Managing Director of firm to handover bribe money at his house. Accordingly, the Managing Director of firm brought the bribe amount of Rs.50 lakh in a card board box used for packing fans and handed it over at the house of Additional Commissioner. The Additional Commissioner wanted to transport the bribe amount from his residence to some unknown place through a private person. At this point of time, on a tip off, CBI apprehended the Additional Commissioner and the private person when they were trying to remove Rs.50 lakh from his house to some unknown place. The bribe money was seized. The Managing Director of private educational firm was also arrested.

Searches are being conducted at Mumbai; Hyderabad; Vizag; Bangalore and Chennai. Searches have resulted in seizure of Rs.48 lakh from the residence of private person and Rs.10 lakh from other places. The bribe amount of Rs.50 lakh and the gold jewellery weighing 1.8 kgs were seized from the residence of Additional Commissioner.

The CBI registered a case U/s 120-B IPC r/w Sec.7 of PC Act and Sec.13(2) r/w 13(1)(d) of PC Act, 1988 and Sec.12 of PC Act. Further investigation is continuing.

இலக்கிய மசுருக்குதான் கேட்க ஆளில்லை என்பதனால் எதையுமேப் படிக்காமல் எங்காளு உங்காளு என்று விசிலடிக்கலாம். எல்லாவற்றுக்கும் அதே கதைதானா?

நாட்டின் குருதியான பொருளாதாரத்தை உறிஞ்சிக்கொழுத்துக் கொண்டிருந்த மோசடித் தொழில் நிறுவனம் முதலில் ஏன் மோசடி செய்தது? 

- ஓ அது மட்டும் பிசினஸ்ல இதெல்லாம் சகஜமப்பாவா? 

அரசு அதிகாரிக்கு ஒன்றுமே ஆகாது என்று ஆரூடம் சொல்பவர்கள், நிறுவனத்தின் எம்டி என வருகையில் அவனுக்குப் பொருளாதார ரீதியிலான பெனால்ட்டி மட்டுமே என்பது மட்டும் சரியா? பேச்சுவார்த்தை பேரமே ஆடிட்டர் மூலம்தான் நடந்தது? அவரது தொழில் முடக்கப்படுமா? என்று கேள்விகளைக் கேட்டுக் கொள்வார்களா? மாட்டார்கள் ஏன் என்றால் ஆழமாய் சிந்திக்கப்போனால் அத்துவானக்காட்டில் சட்டையைக் கிழித்துக்கொண்டு திரிய நேரிடும். அங்கு நம் சாயலில் ஆயிரம் பேய்கள் நம்மைச் சுற்றி ஊளையிடும். மேலோடு இருக்கும் வருவலை மட்டும் விவாத சரக்கிற்கு சைட்டிஷாய் எடுத்துக்கொள் அடியில் போகப்போக உப்பு கரிக்கும்.

116 கோடி வரி ஏய்ப்பு. அதிகாரி லஞ்சம் கேட்டாரா இல்லை தொழில் நிறுவனம் சரிகட்டச் சொல்லி கேட்டதா? சிபிஐ செய்தி சொல்வது என்ன? 

<the Managing Director of firm contacted the Additional Commissioner through a Chartered Accountant to reduce the income tax liability. After holding negotiations, he requested the Additional Commissioner to suppress Rs.60 crores of taxable income out of Rs.116 crores detected by the search and survey.>

116 கோடி வருமானத்திற்கான வரி ஏய்ப்பு நடந்துள்ளது. அதில் 60 கோடியை குறைக்கச்சொல்லித்தான் ஊழலே. 60 கோடிக்கு எவ்வளவு வருமான வரி வரும்? 8 லட்சத்திற்குமேல் போனால் 30% வருமான வரி. அதாவது ஏய்க்க இருந்த வரி 18 கோடி. கேஸ் என்று ஆகிறபட்சத்தில் ஷோ காஸ் நோட்டீஸ் கொடுக்கப்பட்டால் பெனால்ட்டியாக குறைந்தப்ட்சம் ஏய்ப்புக்கு இணையான தொகையாக இன்னொரு 18 கோடி. ஆக அந்த நிறுவனம் அமுக்க நினைத்தது 36 கோடி. அதைத் தவிர்க்க ஆடிட்டர் மூலம் படிந்த பேரம் 50 லட்சம்.

36 கோடி ஊழலுக்குக் கொடுக்கப்பட்ட வாங்கப்பட்ட லஞ்சத்தின் சதவீதம் 1.38%.

ஆனால் ஆபீசர் 50 லட்சம் லஞ்சமாக ஒரே ட்ரான்ஸாக்‌ஷனில் வாங்கிப் பிடிபட்டார் என்று ஹைலைட் பண்ணி பஸ் விடுவதுதான் நேர்மையா?

சரி. நிறுவனம் 50 லட்சம் கொடுக்க முன்வந்தது ஏன் சும்மானச்சுக்குமா? நிறுவனத்திற்கு நிகர உ லாபம் 36  கோடி என்பதால்தானே? லட்சங்களில் லஞ்சம் வாங்கும் அதிகாரிக்கு கோடிகளில் ஏமாற்றும் நிறுவனங்கள் எந்த விதத்தில் ஒஸ்தி? ஆகா நிறுவனங்கள் நாட்டுக்காக உழைக்கின்றன. நம்புங்கள்.

ஓடோடி வருவார் ஒரு பரிசாரகர் பத்ரியின் பொங்கலையும் அவசரமாய் இங்கேயே பறிமாறி சமூகக்கடமை ஆற்றித் தன்வேலை பார்க்கப் போய்விடுவார். https://plus.google.com/113660628666717664764/posts/QGvSwg3JNt1

நிறுவனம் லஞ்சம் தர முன்வந்தது,கூகுள் பஸ்ஸுக்கு மட்டுமல்ல பத்திரிகைகளுக்கும் சுவாரசியமான செய்தி இல்லையே. தனி நபர் வம்பில்தான் இருக்கிறது சுவாரசியம். லஞ்சம் வாங்கினார் என்பதில் இருக்கும் சுவாரசியம் லஞ்சம் வாங்கத் தூண்டப்பட்டார் என்கிற உண்மையில் இல்லை அல்லவா? 

அடுத்த ஜம்ப்பு இந்த அதிகாரி கொஞ்சநாளில் திரும்ப வேலைக்கு வந்துவிடுவார் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தையும் சந்தேகிக்கும் ஜோசியம் வேறு. இப்படியே இதன் தர்க்க நீட்சியாய் ஜல்லியடித்தால் இன்னும் சுவாரசியமாய் இருக்கும். பஸ்ஸும் 200 300 பயணிகளைச் சுமக்கும்.

சிபிஐ கோர்ட்டால் தண்டிக்கப்பட்டால் மட்டும் என்ன அப்பீலுக்கு உயர்நீதிமன்றத்தில் பிரஷாந்த் பூஷன் போன்ற சிறந்த வக்கீல்களை வைத்து வாதாடினால் 50லட்சம் அதிகாரி அக்யூட்டே ஆகி வெளியில் வந்துவிடுவார். ஆனால் ஜன்லோக்பால் வந்தால் சுந்தரும் பத்ரியும் மரத்தடியில் உட்கார்ந்து தலைக்கு மேலேயே நீண்டிருக்கும் தாட்டியான கிளையில் லஞ்சம் வாங்கியவனைத் தூக்கில் தொங்கவிட்டு விடுவார்கள். நிறுவனத்து எம்டிக்கு அதான் இருக்கவே இருக்கே பெனால்ட்டி. 

இப்போதிருக்கும் சட்டத்தின்படியே கொடுத்தவன் வாங்கியவன் இருவரும் கைதாகியிருப்பதைக் கவனிக்கவும். 

நிகழ்வின் முழுமையை வாங்கிக்கொள்ளாமல் உளறுவது அல்லது நடந்ததைத் திரிப்பது இல்லையேல் மூனறாம் கையாக ஒரு செய்தியைதூக்கிக் காட்டுவது, அதற்கு வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று குலவை இடுவது. இதுதான் இணையத்தின் அறச்சீற்ற நேர்மை. இதையெல்லாம் பார்க்கையில் என்ன மசுத்துக்கு எழுதவேண்டும் அதுவும் இந்த இணைய கருமாந்திரத்தில் என்று தோன்றுகிறது. என்றைக்கோ வரப்போகும் எவனோ ஒருத்தனுக்காய் எழுதுவதாய் புதுமைப்பித்தன் காலத்திலிருந்தே தேற்றிக்கொள்வதுதான் சிறந்த வழியாய் தெரிகிறது.

சில லட்சங்களில் வரி ஏய்ப்பு நடந்துகொண்டு இருந்தால். அதை சரிகட்ட அதிகாரிகளுக்குப் பல ஆயிரங்களில் லஞ்சம். தொழில் நிறுவனங்கள் ஏதேனும் ஒரு கொடியைக் கையில் பிடித்துக் கொண்டால் கேஸே ஆகாமல், அதிகாரிக்கு அஞ்சு பைசாக் கூட ‘தண்டம்’ அழாமல் நேர்மையாய்க் கோடிகளில் வரியை ஏய்க்கலாம்.அதிஉயர் அதிகாரியின் வாய்வழி ஆணையை மீறிக் கடமையாற்றத்துணியும் அபூர்வ அதிகாரிக்குக் கிடைப்பதோ நிர்வாக வசதிக்காக என்ற பெயரில் பல்செட்கூட இல்லாத பொக்கைவாய் போஸ்டிங். நொந்துபோன அந்த அதிகாரி ஏசுவே அவன் கண்னைக் குத்து மாரியாத்தா அவனைப் பாம்பைவுட்டுக் கொத்து என்று வேண்டிக்கொள்ளாமல் வேறு என்னையா செய்வான்? 

பழைய பதிவிலிருந்து:

இந்திய ஜனாதிபதி விருது வாங்கி, தன்னை டெரராகக் காட்டிக்கொள்ளும் ஒரு அதிகாரிக்கும் அரசியல் பின்பலம் கொண்ட சேவை வரி ஏய்ப்பாளர் ஒருவருக்கும் நடந்த சுவாரசியமான தொலைபேசி உரையாடல். (மறுமுனைப் பேச்சை டெரர் பாண்டியே புலம்பியதால் தெரியவந்து, இப்போது சேவை வரித்துறையின் சிறந்த ஜோக்காக ஆகிவிட்டது)

சார் வணக்கம் நாந்தான் அந்த.....
ஹலோ அப்படியா குட் ஆஃப்ட்டர் நூன் சொல்லுங்க.
நம்ம ஃபைலக் கொஞ்சம் மூடுங்க .
இது நான் போட்ட கேசு இல்லைங்க அக்கவுண்டெண்ட் ஜெனரல் ஆஃபீஸ்லேந்து எங்களுக்கு வந்த கேசு
அதனால என்னங்க?
இல்லைங்க நான் ஒன்னும் பண்ன முடியாது.
இல்லைங்க நீங்க ஃபைலை மூடலாம்?
என்னாங்க இது நாளைக்குக் கேள்விகேட்டா நானில்ல பதில் சொல்ணும்?
கேள்வியே வராம நா பாத்துக்கறேன். அங்க மூடறது என் பொறுப்பு. உங்க சைட்ல நீங்க மொதல்ல மூடுங்க.
என்னங்க இப்படிப் பேசினா எப்படிங்க?
எனக்கு சேவை வரியே வராதுங்க!
இல்லைங்க வருது
என்னா சார் ஒலகம் புரியாத ஆளா இருகீங்க. நாலு எம்பி தொகுதிக்கு செலவு செஞ்சிருக்கறவனுக்கு எப்படிங்க வரி வரும்?

கொஞ்ச நேரத்தில் ஃபோன் வந்தது அதிதலைமை அதிகாரியிடமிருந்து.


மாபெரும் ஊழல்களின் ஊற்றுக்கண்ணாய் இருக்கும் தொழில் நிறுவனங்களை சவுகரியமாய் ஜன்லோக்பால் தவிர்க்கிறது. இந்த போங்காட்டத்தைத்தான் அருந்ததி ராய் தோலுரித்தார்.

Now, by shouting louder than everyone else, by pushing a campaign that is hammering away at the theme of evil politicians and government corruption, they have very cleverly let themselves off the hook. Worse, by demonising only the Government they have built themselves a pulpit from which to call for the further withdrawal of the State from the public sphere and for a second round of reforms — more privatisation, more access to public infrastructure and India's natural resources. It may not be long before Corporate Corruption is made legal and renamed a Lobbying Fee.>

இதற்குப் பொருள் அல்லது இதை அம்பலப்படுத்துவோர் எல்லோரும் ஊழலின் ஆதரவாளர்கள் என்பதா? இது, உண்மையைதேட முயலாமல் வெறும் கட்சிகட்டி வழக்காடும் ஜெயமோகனீய சேறடிப்பு மட்டுமே அல்லவா?

எல்லோருக்கும் பருப்பு ஒரே இடத்தில் இருப்பதில்லை. பேலன்ஸ் ஷீட்டைக் கீழுதடாய்ப் பிரித்துப்பிரித்து ஷெட்யூல் மடிப்புகளுக்குள்ளிருக்கும் வார்த்தை ஒளிப்புகளைத் தடவிப்பார்த்தால் மட்டுமே தட்டுப்படும்படியாக பருப்புகளைப் பதுக்கி வைக்கவே ஆடிட்டிங் என்று அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொழிலே இருக்கிறது. அதைவிடக் கஷ்டமான தேர்வு வேறெதுவும் இருக்குமா என சந்தேகப்படுமளவிற்கு அதில்,முதன்முறையிலேயே தேர்ச்சி பெருவோரின் எண்ணிக்கை மிகக்குறைவு. அதைப் பற்றிக் கல்லூரிக்காலத்தில் சட்டக்கல்லூரியில் இருந்து பேச்சு/கவிதைப் போட்டிகளுக்கு வந்துகொண்டிருந்த, முதல் பீரைக் குடிக்கவைத்த நண்பனான, முன்ஜாக்கிரதையாக ஒருவேளை வக்கீல் தொழில் சரிப்பட்டுவரவில்லை எனில் கம்பெனி வேலைக்காவது போக,எதற்கும் இருக்கட்டுமென ஐசிடபிள்யூஏவும் படித்துக்கொண்டிருந்தவன் குறிப்பிட்ட நகைச்சுவைத் துணுக்கு,

"Jesus never fails"

"Let him appear for CA exam"

சரஸ்வதி கடாட்சமோ சாய்பாபா அனுக்கிரகமோ தெரியவில்லை, 79-80ல் இதைக் குறிப்பிட்டவனுக்கு ஆடிட்டர் அலுவலகப் படியிலோ அல்லது சட்ட ஆலோசகன் என்று எந்த நிறுவனத்தின் பிடியிலோ இருக்கவேண்டிய அவசியமே ஏற்படவில்லை. கருப்புநிற நீள்மேலங்கியுடன் நேராய்க் கோர்ட்டுப்படி ஏறியவன், தற்போதைய உயர்நீதிமன்றத்தில் நீதியரசராய் வீற்றிருக்கிறார்.

சத்தியம் நிறுவனத்தின் ஆடிட்டர்கள் சாதாரன ஆட்களோ அரசு அதிகாரிகளோ இல்லை.உலகப்பிரசித்தி பெற்ற ப்ரைஸ் வாட்டர்ஹவ்ஸ் கூப்பர் நிறுவனத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சத்தியம் கந்தர்கோளத்திற்குப் பிறகு, நிறுவனம் செய்யும் கணக்கு வழக்கு மோசடிகளுக்கு, உங்கள் பொறுப்பை சுலபமாய் உதறிவிடமுடியாது என்று அரசு அறிவித்ததும், நாற்று நட ஆலோசனை கூறியதே நாம்தான் என்பதை மறைக்க, பேலன்ஸ் ஷீட்டுகளில் - எங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட தகவல்களின்படி - என்று ஒரு வாக்கியம் உபரியாய் முளைக்கத் தொடங்கியது.

அங்கிகெனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறது என்கிற காரணத்தால் எல்லோருக்கும் பரம்பொருளின் சூட்சுமம் பிடிபட்டே தீரவேண்டும் என்பது என்ன கட்டாயமா?

ஒற்றைக்கண் தட்டைப் பார்வையில் மட்டுமே பார்க்கமுடிந்தவர்களுக்கு இலக்கியம் மட்டுமல்ல எந்த இழவையும் அதன் விஸ்தாரத்துடனும் நுட்பங்களுடன் புரிந்துகொள்ள முடியாது. சும்மா நுனிப்புல் மேயலாம். 

மேய்த்தலையே நிறுவனமயமாக்கினால் நுனிப்புற்களுக்குப் புத்தக வடிவம் கொடுத்துக் கட்டுக்கட்டாய் பணத்தை அறுவடை செய்யலாம். சமூகத்துக்கு புத்தி மழுங்கினால் நமக்கென்ன மசுராப் போச்சு.