14 August 2011

வர்ண ஜாலமிதப்புகள்

பக்கவாட்டில் தடவிப்பார்த்துத் தவில் என்பது தட்டையாக இருக்கும் என்று சொல்வதை உண்மையில்லை என்று சொல்லிவிட முடியுமா? அல்லது கோபப்படத்தான் முடியுமா? பார்த்தவன் சொன்னதென்ன ஆராய்ச்சி முடிவா?  ’பார்வை’யற்றவன் என்று பரிதாபம்தான் படவேண்டும். ஆனால் அதுகூட திராவிட நிறக் கண்னாடிப் பார்வையில் மேட்டிமை ஜாதீய வெளிப்பாடாகிவிடக்கூடும்.

பாத்திரத்தின் மனவோட்டத்தை ஆசிரியனோடு தெளிவாகக் குழப்பிக்கொள்ளுதல் காலாகால வெகுஜன வாசிப்பு அளித்த கொடை. முதிர்வினமை. ஆசிரியனின் ஒரு கதை மட்டுமல்ல, பொதுவான அடிச்சரடும் முக்கியம். அரைகுறைகளுக்கு இது அதீத பாரம்.

எஸ்.ஆர்.எஸ்ஸுக்கு இழவெடுத்த அறச்சீற்றமெல்லாம் எங்கிருந்து வந்தது ?குடி கும்மாளம் நீடிக்க நீடிக்க மனதிற்குள் பாயை நீவிவிட்டுக்கொள்ளலாம் என்பதால் கொண்டாட்டம் இன்னும் நீடிக்காதா என்றல்லவா எதிர்பார்க்கிறான்.  அவனுக்குப் பெண்ணிடம் உண்டாகும் நெருக்கம் ரயில் சிநேக ஈர்ப்பல்லவா? யதார்த்த நீட்சிக்குக் கூட சாத்தியமற்ற வெற்று கிளுகிளுப்பு மட்டுமே அல்லவா? தனக்கு ஒரு பெண்ணிடம் கிடைக்கிற முக்கியத்துவம் குறித்த கிளுகிளுப்பு. முந்தாநாள்வரை, இலக்கியப் பேராசான் என்று போற்றித் துதித்துக் கொண்டிருந்த பின்நவீனத்துவ பீடம் சாட்டில் பெண்ணைத் தடவியதற்கு இணையான கிளுகிளுப்பு.

நிகழ்ச்சிகளால் தொகுக்கப்பட்டதுதான் வாழ்வு. அதில் நிகழ்வுகள் மட்டுமே ஆழமாய்ப் பதிகின்றன. அவற்றிலிருந்து தன்னைத் தள்ளி வைத்து பல்வேறு விஷயங்களோடு தொடர்புபடுத்தி அனுபவத் தாக்கங்களைக் கொண்டு,கதாபாத்திரங்களை உருவாக்குகிறான் எழுத்தாளன். கற்பனைக்காற்றாடியைக் காற்றடிக்கும் பக்கம் ஜிம்பும் வெகுஜன கடைபரப்பலுக்கும் இலக்கியத்திற்கும் இருக்கும் உண்மையான வித்தியாசம் இதுதான். வெறும் வாசக எண்ணிக்கையோ புத்தக விற்பனையோ அன்று.

நீர்மேல் மண்ணெண்ணையாய் வர்ண ஜாலம் காட்டும் இணைய மிதப்புகளுக்கு இதெல்லாம் ரொமபவே அதிகம் என்று தெரிந்தாலும், விதியற்றவனுக்கு வேறு என்னதான் கதி? பின்னே இந்தக் கதையை அனுப்பி வைத்தால் மட்டும் எந்தப் பத்திரிகை பிரசுரித்துவிடப்போகிறது.

மனவோட்டம் ஏதுமின்றி வெற்று நிகழ்ச்சித் தொகுப்பாய் வெள்ளை Vs கருப்பு என்று எழுதியிருந்தால் ’காண்ட்ராவர்ஷியல் என்று ‘பார்ப்பணப் பத்திரிகை’ எதிலேனும் பிரசுரமாகியிருக்கக்கூடும்.

டண்டணக்கா கண்டணக் கூப்பாட்டுடன் அடிக்கோடிட்டு கருப்பு Vs வெள்ளை என்று எழுதி இருந்தால் முற்போக்குப் பட்டாபிஷேகம் நடத்தப்பட்டிருக்கும்.

2004 ஆகஸ்டில் தாய்மாமன் மகனது, வெள்ளிக் கிழமை திருமணத்திற்காக ரயிலில் வியாழக்கிழமை இரவுப் பயணம். அம்மாவுக்குத் துணையாக மனைவி முன்தினமே சென்றுவிட்ட காரணத்தால் கோவைக்கு தனித்து செல்லவேண்டிவந்த ரயில் பயணத்தின்போது சரக்கடித் திருவிழாவை சாதாரணமாய் தட்டிக்கேட்கப்போனதற்கு நிறத்தின் அடையாளம் காரணமாய் கிடைத்த நிஜத்தாக்குதல்.

குஷ்புவின் செக்ஸ் பேச்சின் எதிரொலியாய் எழுத்த தமிழ்க்கலாச்சாரத்தைக் காப்பாற்றும் போராட்டதின் விளைவுகள் பற்றிய என்.டி.டி.வி விவாதத்தில் தில்லி வாசியான பிராமணத் தமிழச்சி ஆங்கிலத்தில்,

எதிர்ப்பு அல்லது எதிரான கருத்து என எதையுமே என்னால் இங்கே சொல்வது போல் சென்னையில் சொல்ல முடியாது. மீறி சொன்னால் என் வீடு அடித்து நொறுக்கப்படும். என் மகள் மொலாஸ்ட் செய்யப்படுவாள் 

என்கிற ரீதியில் பிராமணர்களுக்குத் தமிழகத்தில் இன்று ஸ்பேஸே கிடையாது என்று பேசக்கேட்டது.

ஓராண்டிற்கு முன்னால் இணையம் வந்த புதிதில், நட்பாயிருந்து எதிரியான சிநேகிதரின் மனைவி எழுதியிருந்ததில் இருந்த சுட்டி மூலமாய்ப் படிக்கக்கிடைத்த அசோகமித்திரனின் அவுட்லுக் பிராமண / யூத ஒப்பீடு உருவாக்கிய - பிராமணர்கள் ஏதோ நாஜி கொலை முகாமில் வசிப்பது போன்ற தோற்றம் - http://www.outlookindia.com/article.aspx?227027 என பலவும் சேர்ந்த கலவையால் உண்டானதே நிறம் [சிறுகதை]

ரயிலின் ரிசர்வ்டு கம்ப்பார்ட்மெண்டிற்குள் சக்கையாக்கித் தள்ளப்படுவதில் தொடங்கும் கதை, முழுக்கவும் பெட்டிக்குள்ளேயே இறுக்கமாக நடந்து முடிவதற்கு என்ன காரணம்?

வெறும் மனவோட்டமாய் மட்டுமே கதை நகர்வதில், வெளியுலகில் இடத்தை நெருக்கினாலும் இல்லாமல் செய்தாலும் மனவெளியில் நீ என்னை என்ன செய்ய முடியும் என்கிற உள்குரலின் கிசுகிசுப்பு கேட்கவில்லையா?

உடலைத்தான் உன் சட்டம் கட்டுப்படுத்தும் மனதிற்குள் நீ என்ன செய்ய முடியும் என்கிற வரட்டுச் சவால் நிறங்களுக்குள் குழூக்குறியாய் கொண்டாடிக் கொள்ளப்ப்டுவதைக் காட்டவும் காணவும்தான் இலக்கியக் கண் வேண்டும்.

தலீவா உடல் மண்ணுக்கு உயிர் உனக்கு என்கிற உணர்ச்சிகர கட்சிக்கொடி தூக்கல்களுக்கு எவ்வளவு எம்பினாலும் எட்டாத கிட்டாத தொலைவில்தான் உண்மையான எழுத்து என்றும் இருக்கும்.

எதிர் நிறப்பெண்ணின் மீது உள்ளூர ஏற்படுவதாகக் கதையில் சொல்லப்படுவது வெறும் காம ஈர்ப்பா? 50 - 60 வருடங்க்ளுக்கு முன்னால் வரை சமூகத்தில் வெள்ளை, கருப்பை பொதுவெளியில் இணையாக நடத்தாவிட்டாலும் தேக சாந்திக்கு பக்கவாட்டில் வைத்துக் கொண்டிருந்த நிலபிரபுத்துவ மனோநிலையின் நீட்சியைக் காட்டவில்லையா? பார்க்க நுட்ப பொறிகள் இல்லையா?

கண்டணம் என்பது கல்லடித்தல் மட்டும்தானா? தோலுரிப்பு அதில் சேராதோ?

கதையைத் தப்பும்தவறுமாய்ப் புரிந்து கொண்டு,எவன் டவுசரை அவிழ்க்கிறோம் என்பதுகூட அறியாமல் அவிழ்த்துவிட்டதாய் பெருமிதம்.  அதற்கு சுற்றி நிற்கும் மெளடீக கும்பலின் குலவைக் கூச்சல். ஐயோ பாவம் அரை நொடிக்குக் குனிந்து பார்த்துக் கொண்டால் அம்மணப்பட்டிருக்கும் இடம் அப்பட்டமாய்த் தெரியும்.

இணையத்தில் நடந்த கருவறை விவாத முரண் முற்றி தனிநபர் தாக்குதலாகி, வாதத்திற்கு முகம் கொடுக்க இயலாத நக்ஸலைட் குஞ்சு, அலுவலகத்திற்கு ஆறுமாத விடுப்பில் இருந்ததை இடைக்காலப் பணி நீக்கத்தில் இருப்பதாய் அவதூறு பரப்பியது நினைவிருக்கலாம்.

தவறு சுட்டிக் காட்டப்படுகையில் சுவருக்குத் தள்ளப்படுகையில் சராசரிகளின் உடனடி எதிர்வினை, குடுமி வைத்துப் பூணூல் போடவில்லை என்றாலும் உன் ரத்த நிறம் மாறிவிடுமா? என்பதுதான். இதைச் சொல்வதற்கு மார்க்ஸ் பெரியார் அம்பேத்கர் போன்றோரின் ஈயங்களைக் காய்த்துத் தலையில் ஊற்றிக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏதும் உண்டா? குருட்டுத்தனமாய் எறிய இயற்கை அளித்திருக்கும் கையும் இலவசமாய் கிடைக்கும் கல்லும் போதாதா? குறி பார்க்கத்தானே கூர்மையான மூளை வேண்டும்.

’ஆயிரம் ரிசர்வேஷன் குடுக்கட்டும் அதுகள்லாம் அவ்ளதான்’ என்று மறைவாக தமக்குள்ளே பழங்கதைகள் பேசிக் குதூகலித்துக் கொள்வது ஆரிய ஜாதீயம்.

எடுத்ததற்கெல்லாம் என்ன இருந்தாலும் நீ அவாள்தானே என்கிறக் கிளைத் தாவல் திராவிட ஜாதீயம்.

அதுவே கதையின் முடிவில் வெளிப்படுகிறது.

அன்றாடம் அலுவலகம் இணையம் என பொதுவெளியில் தென்படும் அறைகுறைகளிடமும் எதிர்கொள்ளவேண்டி இருக்கிறது.ஆளையோ எழுத்தையோ நெருங்கியவர்களுக்கு எங்கும் எந்தக் குழப்பமும் ஏற்படுவதில்லை.

கதையைக் கதையாகக்கூட பொருட்படுத்தி கவனமாய்ப் படிக்க இயலாதவர்களுக்கெல்லாம் எழுதி என்ன பயன் என்றெண்ணிப் புலம்புவதால் என்னப் பிரயோஜனம்? ”என்றைக்கோ வரப்போகிற ஒற்றை வாசகனுக்காக எழுதுவதாய்” மனதைத் தேற்றிக் கொண்டு வெட்டி விவாதத்தில் இறங்காமல் கடந்து செல்வதே விவேகம்.

விடுமுறை எனினும் நேற்று காலையில் இருந்து மாலைவரை அலுவலகத்தில் மாதாந்தர புள்ளிவிவரங்களை அனுப்பவேண்டி செங்கபட்டில் இருப்பு. இருட்டிய பின்மாலையில் திரும்புகையில் தாம்பரம் ரயில்நிலையம் சற்றுத் தொலைவில் தெரிய கேட்டு மூடப்பட்ட கிராஸிங் கூப்பிடி தூரத்தில் இருக்க அத்துவான இருட்டில் ரயில் நின்றுவிட்டது. ஏதோ விரைவு வண்டி கடப்பதற்கான சமிக்ஞை பிரச்சனைபோலும் எனப்பார்த்து சும்மா இருக்க நேர்ந்தது. சற்றுமுன் கடந்த எதிர் வண்டியில் அடிபட்டு உயிர்போன உடலும் தனியான காலும் முந்தைய பெட்டியில் ஏற்றப்பட்டிருப்பதாய் எட்டிப்பார்த்துக் கூறியவர் நிலையம் வந்ததும் ஐயையோ அதைப்போய் எவன் பார்ப்பது என்று தன் வழி பார்க்க நடந்தார்.

இறங்கிப்போய் பார்த்தால் பெட்டியின் வாயிலருகில் ரத்தம் தோய்ந்த துணிமட்டும் இருந்த கீழ்ப்பகுதியை தலை தூக்கிப் பார்ப்பதைக் கண்டதும் பதறிப்போய் வெள்ளைச் சீருடைகளிடம் பிளாட்பாரத்தில் நின்றபடி, அடிபட்ட இடத்திற்கு அருகில் இருந்த சாலைக்கு 108 வருவதற்குள் வண்டி ஏன் எடுக்கப்பட்டது என்று போட்டக் கூச்சலுடன் பல்வேறு நிறக் குரல்களும் சேர்ந்துகொண்டன. இரண்டாவது நடைமேடையில் இருந்த வண்டி உடனடியாகப் புறப்படும் என அவசரமாய் வந்தது அறிவிப்பு. உடலிருந்த வண்டி தாம்பரத்துடன் நிறுத்தப்பட்டதற்கு மனசாட்சி தூண்டப்பட்டதும் ஒரு காரணமாய் இருந்திருக்கலாம்.   அதற்குப்பின் நடந்தது ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

எவன் பாராட்டிற்காகவும் உஞ்சவிருத்தி எடுப்பவனின் முகவரி இதுவல்ல.

சுஜாதாவை ஆதர்சமாய்க் கொண்டு அவர்போல பிரலமாகிவிடத்துடிக்கும் திராவிட அம்பிகள் ஸ்நானப் பிராப்திகூட இல்லாத அவரையும் என்னையும் நாபிக்கொடியால் முடிச்சிடுவதுதான் அபத்த அரசியல்.

அகில உலகத்திற்குமான சரியான அரசியல் பேசுகிற பாவனையில் அரசியல் சரிகளைப் பேசுவதற்கு வேறு ஆளைப் பார்க்கவும்.

காற்றில் கரையமறுக்கும் சாம்பல் கறை
வரலாற்றின் சுவரில் கைரேகை.


நிறம் [சிறுகதை]