21 August 2011

வட்டச் சிதைவுகள் - ஹோர்ஹ் லூயிஸ் போர்ஹே தமிழில் பிரமிள்

அந்த ஏகோபித்த இரவில் அவன் தரையிலிறங்கியதை யாரும் காணவில்லை. அவனது மூங்கில் படகு அங்கே அப்புனிதச் சேற்றில் புதைந்ததையும் யாரும் காணவில்லை. ஆனால் ஒரு சில நாட்களில், பேச்சு வார்த்தைக்கு இடம் கொடுக்காத இந்த மனிதன் தெற்கிலிருந்து வந்திருக்கிறான் என்பதையோ, நதி வரும் வழியில், மேலே, மலையின் பிளந்த பகுதியில் கிரீக் மொழியினால் ஜென்ட் மொழி பாதிப்படையாமலும் குஷ்டரோகம் அடிக்கடி வராமலும் உள்ள எண்ணற்ற கிராமங்களுள் ஒன்று அவனது ஊர் என்பதையோ அறியாதவர் யாருமில்லை.

அந்தப் புகைநிற மனிதன் குனிந்து சேற்றை முத்தமிட்டான் என்பதும், தசையைக் கிழிக்கும் கூரிய இலைகளை (உணராததால் என) ஒதுக்காமலே கரையேறினான் என்பதும், அருவருப்புடனும் ரத்தக் கறையுடனும் தவழ்ந்தபடி எப்போதோ அக்னி நிறமாயிருந்து இப்போது சாம்பல் நிறமாகிவிட்ட ஒரு புலியினதோ குதிரையினதோ சிலை கிரீடமாக நிற்கும் ஒரு வட்ட அடைப்பை நோக்கி ஏறினான் என்பதும் தான் மிக நிச்சயமானது. புராதன அக்னி ஒன்றினால் விழுங்கப்பட்டு, விஷப்புகை போன்ற கானகத்தினால் புனிதத்துவத்தை இழந்து, அதன் கடவுளும் மனித வழிபாட்டை இழந்துவிட்ட ஒரு கோவில்தான் இந்த வட்டம்.

அவன் சிலையின் பீடத்தடியில் உடலை நீட்டிப் படுத்துக் கொண்டான். உச்சிச் சூரியன் அவனை விழிப்படையச் செய்தது. தனது காயங்கள் ஆறிவிட்டதில் அவன் வியப்புறவில்லை. சோகை படிந்த கண்களை மூடி அவன் துயின்றான். - உடலின் பலவீனத்தால் அல்ல, மனசின் தீர்மானத்தால். இந்தக் கோயில்தான் தனது மாற்ற முடியாத தீர்மானத்திற்குத் தகுந்த இடம் என்று அவனுக்குத் தெரியும். கீழ் நதிப்புறத்தில் இப்போது எரிந்து இறந்துவிட்ட கடவுள்களின் இன்னொரு ஆலயம் ஓயாது வளரும் மரங்களினால் மூழ்கடிக்கப்படாமல் தப்பித்து இருக்கிறது என்று அவனுக்குத் தெரியும்.

காலையளவில் ஒரு பறவையின் ஆறுதல்படுத்த முடியாத அலறலில் அவன் கண் விழித்தான். பாதரட்சையற்ற காற் சுவடுகளும், உணவுக்கு சில ஃபிக் இலைகளும், ஒரு கூஜாவும், அவனிடமிருந்து பாதுகாப்பை வேண்டியோ, அவனது மந்திர சக்திக்கு அஞ்சியோ, அந்தப் பிரதேசத்து மனிதர்கள் அவனது நித்திரையை ஒற்றுப் பார்த்திருக்கிறார்களென எச்சரித்தன. பயத்தின் குளிரில் அவன் கல்லறை போன்ற ஒரு வெடிப்பை அங்கே சிதைந்த ஒரு சுவரில் தேடிப் பழக்கமில்லாத இலைகளினுள்ளே மறைந்து கொண்டான். 

அவனை வழி நடத்திய நோக்கம் இயற்கையை மீறிய ஒன்றாயினும் சாதிக்க முடியாததல்ல. ஒரு மனிதனைக் கனவு கொள்ள அவன் விரும்பினான். அம்மனிதனை அவனது சிறு சிறு நுட்பங்களில் பரிபூரணமாகக் கனவு கண்டு அவனை நிதர்சன உலகிலே எழச் செய்ய அவன் விரும்பினான். இந்த மாந்திரீக முயற்சி அவனது மனப்பரப்பு முழுவதையும் வரளச் செய்து விட்டது. யாராவது அவனது பெயரை அல்லது அவனது முன் வாழ்வில் ஒரு நிகழ்ச்சியைப் பற்றிக் கேட்டிருந்தால் அவனால் பதில் தந்திருக்க முடியாது.

இந்த சிதைந்த கானகக் கோயில் அவனது தேவைக்குப் பொருந்தியிருந்தது. ஏனெனில் அவனது குறைந்தபட்ச அளவு காட்சியுலகு அது. தொழிலாளர்கள் சமீபத்திருப்பதுகூட அவனுக்குப் பொருந்தியிருந்தது. ஏனெனில் அவனது எளிய தேவைகளை நிரப்ப அவர்கள் தாங்களே பொறுப்பெடுத்துக் கொண்டார்கள். அவர்கள் அவனுக்குக் கொண்டு வந்த அரிசி உணவும் பழமும் நித்திரைக் கனவு என்ற ஒரே முயற்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்த அவனது சரீரத்துக்குப் போதுமானதாக இருந்தது.

ஆரம்பத்தில் அவனது கனவுகள் ஒரே குழப்பமயமாயிருந்தன. பிறகு ஒரு சிறு கால அளவில், அவை ஒன்றை ஒன்று மறுத்து பின் இவ்விரு எதிரிடைகளும் இணங்கி வருவதான நியதி கொண்டன. இந்த வேற்றூர் மனிதன், வட்டவடிவமாய், ஓரளவில் இந்த எரிந்த கோயிலேயான ஒரு போட்டி அரங்கத்தின் மையத்திலே தான் இருப்பதாகக் கனவு கண்டான்.

உறவு கொள்ள மறுக்கும் மாணவர்கள், தொங்கும் பலகை ஆசனங்களில் முகிற்கூட்டங்கள் போல் நிரம்பியிருந்தனர். அதி தூரத்து மாணவர்களின் முகங்கள், தாரகைகளின் உயரத்தில் பல நூற்றாண்டுகளின் தூரத்தில் தொங்கின ஆனால் அவர்களது முகங்கள் ஸ்பஷ்டமாகத் தெரிந்தன. இந்த மனிதன் தனது மாணவர்களுக்கு உடற்கூறு, பிரபஞ்சவியல், மாந்திரீகம் என்ற துறைகளில் உரை நிகழ்த்தினான். தங்களது வெற்று மாயை நிலையிலிருந்து தங்களில் ஒருவனை ரட்சித்து நிதர்சன உலகினுள் மாறி நுழைய வைக்கக் கூடியது இப்பரீட்சை என இதன் முக்கியத்தை ஊகித்தறிந்தவை போல அம்முகங்கள் ஆவல் அவசத்தோடு இவன் உரைக்குக் காது கொடுத்துக் கேட்டு புரிந்து கொண்ட வகையாகப் பதிலிறுக்க முயன்றன. விழிப்பிலும் சரி தூக்கத்திலும் சரி இம் மனிதன் தனது ஆவிகளின் பதில்களை ஆராய்ந்தான். போலிகளினால் தான் ஏமாந்து போய்விடாமல் பார்த்துக் கொண்டான். அதோடு, சில சிக்கல்களின்போது வளர்ந்து கொண்டிருக்கும் அறிவு ஒன்றை அவன் உணர்ந்தான். இவ்வகையாக, பிரபஞ்சத்தில் பங்கு கொள்வதற்குத் தகுதியான உயிர் ஒன்றை அவன் தேடிக் கொண்டிருந்தான்.

***

தனது சிந்தாந்தத்தைப் பேச்சு மூச்சற்று ஏற்றுக் கொள்பவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாதெனவும், ஆனால் அவ்வப்போது தன்னை எதிர்க்க முனைந்தவர்களிடமிருந்துதான் எதையும் எதிர்பார்க்கலாம் எனவும் ஒன்பது பத்து இரவுகளின் பின் அவன் ஒருவித கசப்போடு புரிந்துகொண்டான். இவர்களுள் முதல் ரகத்தினர் அன்புக்கும் ஆதரவுக்கும் உரியவர்களானாலும், தனிமனிதர்களென உயர முடியவில்லை. இரண்டாவது ரகத்தினரோ முன்னவர்களைவிட ஒரு சிறிது உந்நதமானவர்களாக ஏற்கனவே வாழ்வு பெற்றிருந்தனர். ஒரு முன் மாலைப் போது (இப்போது முன் மாலைகளும் துயிலுக்கு அளிக்கப்பட்டிருந்தன. இப்போது சூர்யோதயத்தில் ஒரு சில மணி நேரங்கள்தான் அவன் விழித்திருந்தான்) அவன் ஒரேயொரு மாணவனை வைத்துக்கொண்டு, மீதியிருந்த பிரமாண்டமான மாயாரூப சீடர் குழு முழுவதையும் அப்படியே நீக்கிவிட்டான். மீந்திருந்தவன் உறவு கொள்ளக் கடினமான, சில வேளை அடங்க மறுக்கிற ஒரு சிறுவன். அவன் முகவெட்டு அவனைக் கனவு கொண்டிருந்தவனுடைய முகவெட்டை ஒத்திருந்தது. தன்னுடைய சகமாணவர்களை அப்படி அநாயசமாகத் துடைத்து அழித்து விட்டது பற்றி அவன் வெகு நாள் நிச்சலனப்படவில்லை. ஒரு சில தனி வகுப்புகளோடு, அவனது முன்னேற்றம் ஆசிரியரைத் திகைக்க வைக்கப் போதுமானதாக இருந்தது. இருந்தும் ஒரு எதிர்பாராத விபத்து நேர்ந்துவிட்டது.

ஒரு நாள் அவன் ஒரு பிசுபிசுத்த பாலைவனத்திலிருந்து புறப்பட்டாற்போல் தனது நித்திரையிலிருந்து விழித்தவன், உபயோகமற்றுக் கிடந்த முன் மாலை ஒளியைக் கண்டு அதை விடிகாலை என்று குழம்பினான். அதோடு தான் அன்று கனவு காணவில்லை என்பதைத் திடீரென உணர்ந்தான். அன்றிரவு முழுவதும், பகல் முழுவதும் துயிலின்மையின் தாங்கொண்ணாத் தெளிவு அவனைப் பீடித்தது. தன் பலத்தை இழந்து களைப்புறுவதற்காகக் கானகத்துள் அலைந்து ஆராய முயன்றான். நச்சுத் தாவரங்களிடையே உபயோகமற்ற ஆரம்ப தர்சன வீச்சுக்களின் நாளங்கள் ஓடிய துயில் கணங்கள் சில அவனுக்குக் கை வந்தன. அந்த மாணவ சரீரத்தை அவன் சேர்த்தெடுக்க முயன்றும், ஒரு சில உற்சாக மந்திரங்களை அவன் உச்சரித்து முடிக்கு முன்பே அவ்வுடல் ஊனமாகி மறைந்தது. ஓரளவுக்கு ஓய்வற்றதென்ற இத்தபஸினால் அவனது கிழக் கண்களில் கோபக் கண்ணீர் எரிந்தது.

மகத்தானதும் கீழ்மையானதுமான ஒரு முறைமையின் எல்லாப் புதிர்களையும் அவன் ஊடுருவ வேண்டுமாயினும் ஒன்றுக்கொன்று வரிசைக் கிரமமற்று, அசைவு மயமாகவே இருக்கும் கனவுப் பதார்த்தங்களை கொண்டு உருச் சமைப்பதென்பதுதான் எவனும் செய்யக்கூடிய கடினமான காரியம் என அவன் உணர்ந்தான். இது மணலைக் கயிறாகத் திரிப்பதைவிட, முகமற்ற காற்றை நாணயங்களாகப் பதிப்பதைவிடக் கடினமானது. தன்னை வழி தடுமாற்றிய பிரம்மாண்ட மயக்கத்தை மறப்பதென சபதமெடுத்துக் கொண்டு அவன் வேறொரு வேலை முறையைத் தொடரந்தான். அம்முறையைத் தொழிற்படுத்து முன்னால் தனது மயக்கத்தின்மூலம் இழந்த பலத்தைத் திரும்பப் பெறுவதற்காக ஒரு மாதத்தைச் செலவிட்டான். கனவு காணவேண்டுமென்ற முன்னேற்பாட்டை முதலில் கைவிட்டான். உடனேயே என ஒவ்வொரு நாளும் ஒரு கணிசமான வேளை நித்திரை அவனுக்குக் கை வந்தது. இந்தக் காலகட்டத்தில், கனவு கண்ட ஒரு சில வேளைகளை அவன் அலட்சியப் படுத்திவிட்டான். தனது பெரு முயற்சியை ஆரம்பிப்பதற்கு, சந்திரவட்டம் பூரணமாகும்வரை காத்திருந்தான். பிறகு முன் மாலைப் போது நதி நீரில் தன்னைப் புனிதமாக்கிக் கொண்டபின், ஒரு மகத்தான நாமத்தின் தேர்ந்தெடுத்த அசைகளை உச்சரித்துவிட்டுத் துயிலில் ஆழ்ந்தான். உடனேயே ஹ்ருதயம் துடிதுடிக்கக் கனவு காணத் துவங்கி விட்டான்.

இன்னும் ஆணோ பெண்ணோவெனத் தெரியாத ஒரு மனித உடலின் அரையிருளினுள் அது கதகதப்பாக, மர்மமாக, ஒரு முஷ்டி அளவினதாய் கரு ரத்த நிறத்தில் அமைந்திருப்பதாக அவன் கனவு கண்டான். ஒரு தீட்சண்யமான அன்புடன் பதினான்கு தெளிந்த இரவுகளாக அவன் அதைப்பற்றிக் கனவு கண்டான். அதை அவன் தீண்டவில்லை. அதற்கு தன்னை சாட்சியாக நிற்க, அதை அவதானிக்க, அடிக்கடி அதைத் தனது பார்வையினாலேயே திருத்தியமைக்க மட்டுமே அவன் தன்னை அனுமதித்துக் கொண்டான். ஒவ்வொரு கோணத்திலும், ஒவ்வொரு தூரத்திலுமிருந்து அதை நோக்கினான். அதன் மயமாகவே தான் மாறி அதைக் கவனித்தான். பதினான்காவது இரவு அவன் சுவாச கோளத்துக்குச் செல்லும் அதன் ரத்த நாளத்தை தனது ஆள்காட்டி விரலினால் மென்மையாகத் தீண்டினான். அதன் பிறகு முழு ஹ்ருதயத்தையும், அதன் உள்ளையும் புறத்தையும். இச் சோதனை அவனுக்குத் திருப்தியளித்துவிட்டது. ஒரு இரவு வேண்டுமென்றே அவன் கனவு காணவில்லை. அதன்பிறகு ஹ்ருதயத்தை மீண்டும் கவனத்துக்கு எடுத்தான். ஒரு கிரகத்தின் நாமத்தை உச்சரித்து வேறொரு உறுப்பின் கனவுருவை மேற்கொண்டான்.

ஒரு வருஷத்திற்குள் அவன் எலும்புக்கூட்டுக்கும் கண்ணிமைக்கும் வந்துவிட்டான். அளவற்ற தலை மயிர்கள்தான் மிகக் கடுமையான வேலை தரும்போல தோன்றின. அவன் முழுமையில் ஒரு மனிதனைக் கனவு கண்டான். ஒரு இளம் மனிதன். ஆனால் எழுந்து உட்காராத, பேசாத, கண்ணிமைகளைத் திறக்க மாட்டாத மனிதன் இவன். இரவு மாறி இரவு தோறும் இம் மனிதன் துயிலில் கிடப்பதாகவே அவன் கனவு கண்டான்.

***

இறை அறிவின் பிரபஞ்சத்துவத்திலே அரை உத்வேகங்கள் எழுந்து நிற்க முடியாத ஒரு செந்நிற ஆதாமை சமைக்கின்றன. தூசியில் பிறந்த, அரை குறையான, தாறுமாறான தாது நிலையிலுள்ள அதே ஆதாமைப் போன்றவன் தான் இந்த மாந்திரீகனது இரவு ஜ்வாலைகளில் காய்ச்சிச் சமைக்கப்பட்ட கனவுகளின் ஆதாமும். ஒரு முன் மாலையில் இவன் தன் சிருஷ்டியை ஒரேயடியாக அழிக்க எண்ணிப் பின் மனதை மாற்றி கொண்டான். (அவன் அதை அழித்திருந்தானென்றால் நல்லது.) பூமியிலுள்ள தெய்வங்கள் யாவற்றுக்கும் செய்த வழிபாடுகள் முழுவதும் வரண்டு போனதில், அவன், புலியோ குதிரையோ ஆன அங்கிருந்த விக்கிரகத்தின் பாதங்களில் வீழ்ந்து அதன் அமானுஷ்யமான உதவியை வேண்டிக் கெஞ்சினான். அன்று மாலைக் கருக்கலில் அவன் அவ்விக்கிரகத்தைக் கனவில் கண்டான். அக் கனவில் அது உயிரோடு துடிதுடித்துக் கொண்டிருந்தது. அது ஒரு புலிக்கும் குதிரைக்கும் பிறந்த அநாமத்தாக இருக்கவில்லை. ஆனால் அது இவ்விரு ஆக்ரோஷமான பிராணிகளாகவும் -ஒரு காளையாகவும் - ஒரு ரோஜாவாகவும் - ஒரு புயலாகவும் நின்றது. தனது பூவுலக நாமம் அக்னி எனவும் இந்த வட்டக் கோயிலில், (இது போன்ற வேறு கோயில்களில் போல) மனிதர்கள் தனக்குப் பலிகளிட்டு முன்னொரு கால் வழிபட்டார்களெனவும், அக்னியையும் கனவு காண்பவனையும் தவிர மற்றெல்லாரும் கனவில் கிடக்கும் ஆவியுருவை ரத்தமும் தசையுமான மனிதனென்றே நம்பும்படி தான் உயிர்ப்பித்துத் தருவதாகவும் அவனை அது உணரவைத்தது. இம் மனிதனுக்கு எல்லா பூஜை முறைகளிலும் போதனை ஆனவுடன் கோபுரங்கள் இன்றும் நிற்கும் அந்த அடுத்த கோயிலுக்கு இவன் குரலேனும் அந்தப் பாழ்க்கட்டிடத்தில் தன்னை வாழ்த்திப் புகழ அனுப்பிவிடும் படியும் கட்டளையிட்டது. கனவு கொண்டவனின் கனவில் கனவு காணப்பட்டவன் உயிர்த்தெழுந்தான்.

தனக்கு இடப்பட்ட கட்டளைகளை மாந்திரீகன் நிறைவேற்றினான். அவன் ஒரு குறிப்பிட்ட அளவு காலத்தை (முடிவில் இக் கால அளவு இரண்டு வருஷங்களென ஆயிற்று) அவனுக்குப் பிரபஞ்சத்தின் ரகசியங்களையும் அக்னிவழிபாட்டையும் கற்பிப்பதற்கு அர்ப்பணித்தான். மனதுக்குள் அவனிடமிருந்து தான் பிரிவடையவேண்டும் என்ற எண்ணத்தில் வேதனை கொண்டான். பாண்டியத்தியத் தேவை என்ற சாக்கில் ஒவ்வொரு நாளும் கனவு காணும் கால அளவை அதிகரித்துக் கொண்டான். கொஞ்சம் குறைபாடாயிருந்த வலது தோளையும் புதுப்பித்தான். சில வேளைகளில் இதெல்லாம் ஏற்கனவே நடந்திருக்கின்றன என்ற தோற்றம் அவனை சங்கடப் படுத்தியது.... பொதுவாகப் பார்த்தால், அவனது நாட்கள் மகிழ்ச்சியிலேயே கழிந்தன. கண்களை மூடியதும் அவன் நினைவு: இப்போது நான் என் மகனுடன் இருக்கப் போகிறேன். அல்லது வெறுமே: எனது காரணத்தில் வந்த என் மகன் எனக்காகக் காத்திருக்கிறான், நான் அவனிடம் போகாவிட்டால் அவனுக்கு இருப்பு இல்லை.

கொஞ்சம் கொஞ்சமாக அவனை அவன் நிதர்சனத்துக்கு பழக்கப்படுத்த ஆரம்பித்தான். ஒரு தடவை ஒரு தூரத்து நிலச்சிகரத்தில் ஒரு கொடியை நடும்படி அவனுக்குக் கட்டளையிட்டான். மறுநாள் அந்தக் கொடி அந்நிலச் சிகரத்தின் மேல் படபடத்துக் கொண்டிருந்தது. இதற்குச் சமமான வேறு பரிசோதனைகளையும் செய்து பார்த்தான் - ஒவ்வொரு தடவையு முந்தியதைவிடத் துணிகரமானதாக ஒருவிதக் கசப்போடு தன் மகன் பிறப்பதற்கு ஆத்திரப்படுமளவு தயாராகி விட்டான் என்பதை உணர்ந்தான். அன்றிரவு அவனை முதல் தடவையாக முத்தமிட்டு, ஒழுங்கற்று பலமைல்களுக்கு நீண்டு கிடக்கும் காட்டையும் சதுப்பு நிலங்களையும் தாண்டி, வெண்ணிறமாக மாறிக் கொண்டிருக்கும் சிதைவுகளுடன் கீழ் நதிப்புறத்தில் நிற்கும் அந்த மற்றக் கோயிலுக்கு அவனை அனுப்பினான். இதற்கு முன்பே (தனது மகன் தான் ஒரு ஆவியுரு என்பதை அறியாமல், தானும் பிறரைப் போன்ற ஒரு மனிதன் என்று நினைக்க வேண்டும் என) அவனது வாழ்வுத் தொழிலின் ஆரம்ப வருஷ ஞாபகங்கள் யாவற்றையும் அழித்து விட்டான்.

***

அவனது வெற்றியும் சாந்தியும் சலிப்பினால் மாசடைந்தன. காலை மாலை கருக்கல் வேளைகளில் இதே போன்ற பூஜாகிருத்தியங்களை தனது மாயாரூபக் குழந்தையும் கீழ் நதிப்புறத்தில் செய்து கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு போலும், அங்கிருந்த கற்சிலையின் முன்னால் இவன் சாஷ்டாங்கமாகக் கிடப்பான். இரவு வேளைகளில் அவன் பிறகு கனவு காணவில்லை. அல்லது மற்ற எந்த மனிதனையும் போலத்தான் கனவு கண்டான். பிரபஞ்ச சப்தங்களையும் உருக்களையும் பற்றி அவனது பார்வை ஓரளவு வெளிறிவிட்டது: தனது உயிரிலிருந்ஹ்டு பிரிந்த இவற்றினால், இங்கில்லாத அவனது மகன் போஷிக்கப்பட்டான். தனது வாழ்வின் நோக்கம் நிறைவேறிவிட்டது. அவன் ஒருவகைப் பரவசத்தில் ஆழ்ந்திருந்தான்.

சில வரலாற்றுக்காரர் வருஷங்களாகவும் சிலர் பத்து வருஷப்பிரிவுகளாகவும் கணித்த ஒரு குறிப்பிட்ட காலம் சென்று இரண்டு துடுப்புக்காரர்கள் அவனை ஒரு நள்ளிரவில் எழுப்பினர். அவர்கள் முகத்தை அவனால் சரிவரக் காண முடியவில்லை. ஆனால் வடக்கில் ஒரு கோயிலில் எரிபடாமலே தீயினூடே நடக்கும் சக்திவாய்ந்த மந்திர வசப்பட்ட ஒரு மனிதனைப் பற்றி அவர்கள் பேசினர். மாந்திரீகனுக்கு அந்தக் கடவுளின் வார்த்தைகள் திடீரென நினைவுக்கு வந்தன. உலகில் நிரம்பியுள்ள எல்லாவகை ஜீவர்களினுள்ளும், அக்னி மட்டுமே தனது மகனை ஒரு ஆவியுரு என அறிந்திருந்தது என்பது நினைவுக்கு வந்தது. இந்த ஞாபகம் முதலில் அவனை ஆசுவாசப்படுத்தினாலும் முடிவில் அவனை வதைக்கத் தொடங்கிவிட்டது. தனது மகன் தனக்குள்ள இந்த அசாதாரண சலுகையைப்பற்றிச் சிந்திக்க ஆரம்பித்து ஏதேனும் ஒரு வகையில் தான் ஒரு வெறும் மனப்பிரதிமை என்பதைக் கண்டுபிடித்து விடக் கூடுமோ என அஞ்சினான். ஒரு மனிதனாக இல்லாதிருப்பது, இன்னொரு மனிதனது கனவின் வெளியுறுவாக வாழ்வது - என்ன ஒப்பற்ற அவமானம். பைத்தியக்காரத்தனம்! தனது வெறும் இன்பக் குழப்பத்தில் தான் ஜனிப்பித்த (அல்லது அனுமதித்த) தனது மக்களைப் பற்றி எந்தத் தந்தைக்கும் அக்கறை இருக்கத்தான் செய்யும். ஆயிரத்து ஒரு மர்ம இரவுகளில், அங்கம் அங்கமாகவும் ஒவ்வொரு உள்ளுறுபாகவும் நினைத்துச் சமைத்த தனது மகனைப் பற்றி அந்த மாந்திரீகன் அச்சம் கொண்டது இயல்புதான்.

அவனது மனக்குறைகள், சில குறிப்பிட்ட எச்சரிக்கைகளுடனேயே, திடீரென நின்றன. முதலாவதாக (ஒரு நீண்ட வரட்சியின் பிறகு) ஒரு தூரத்து முகில், ஒரு பறவை போல் கனமற்று ஒரு குன்றின் உச்சியில் தோன்றியது. பிறகு வடக்குப் புறமாக வானம் சிறுத்தையின் ஈறுகளைப் போன்ற ஒரு ரோஜா நிறமாயிற்று அதன் பிறகு இரவின் உலோகத் தகட்டை துருப்பிடித்தாற் போல, புகைமுகில் முகிலாக வந்தது. இவற்றையடுத்து வனமிருகங்கள் பீதி கொண்டு சிதறியோடின. எத்தனையோ நூற்றாண்டுகளின் முன்னால் நடந்ததே மீண்டும் திரும்ப நிகழ்ந்து கொண்டிருந்தது. அக்னிக் கடவுளினது புனித க்ருகத்தின் சிதைவு அக்னியினாலேயே அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பறவைகளற்ற ஒரு விடி காலையில் அக்னி வட்டம் சுவர்களை நக்கிக் கொண்டிருப்பதை அவன் கண்டான். ஒரு கணம் நீரினுள் ஒதுங்கித் தப்பித்துக் கொள்ள எண்ணினான். ஆனால் உடனேயே தனது வயோதிகத்துக்கும் உழைப்புக்கும் மரணம் முடி சூட்டுவதற்காக வந்திருக்கிறது என உணர்ந்தான். அவை அவனது தசையைக் கிழிக்கவில்லை. அவனைத் தழுவி, சூடோ எரிவோ இன்றி அவன் மேல் பெருகின. ஆசுவாசத்தோடு, அவமானத்தோடு, பயங்கரத்தோடு, தானும் ஒரு மாயாரூபம் என, தன்னையும் யாரோ கனவு கண்டு கொண்டிருக்கிறான் என அவன் உணர்ந்தான்.


The Circular Ruins by Jorge Luis Borges (மூலம்” ஸ்பானிஷ். ஆங்கில மொழிபெயர்ப்பைத் தமிழில் தருபவர்: தர்முஅரூப்சிவராம்)

தட்டச்சு: சென்ஷி.

ஆங்கிலத்தில் படிக்க