03 August 2011

இணைய வாசகர்களும் எழுத்தும்

ஃபேஸ்புக் ஜனத்திற்கு ஃபேஸ் மட்டும்தான் முக்கியம். 

நான்குவரிக்குமேல் எழுதியிருந்தால் நாக்கு தள்ளிவிடும். யார் எவன் என்பதெல்லாம் அவசியமே இல்லை. ஆன்லைனில் இருந்தால் போதும். 
ஹாய். 
ஹவ் ஆர் யூ சார். 
வேர் ஆர் யூ ஃப்ரம் 
எங்கே இருக்கிறீர்கள்

கேள்வித்தாள்போலக் கேட்டுக்கொண்டே போவார்கள்.வேலை மெனக்கெட்டு, பதில் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். 

எங்கே இருக்கிறோம் என்பது, மெய்நிகர் உலகில் ரொம்ப அவசியமா என்று கேட்டால், என்ன நாகரிகமே இல்லாமல் இருக்கிறீர்கள் என்று கோவம். யோவ் எனக்கு முட்டுகிறது என்று சொல்லவா முடியும். அதற்கு வேறு அர்த்தம்வேறு கற்பிக்கப்பட்டால் கதி என்னாவது? கோவணத்தை இருக்கிக் கொண்டு இன்முகத்தோடு இவர்களிடம் ஆற அமர உரையாட வேண்டும்.

இதைப் பார்க்கையில்தான் ஏனடா இனையத்திற்கு வந்தோம் என்று ஆகிவிடுகிறது.எழுதுவதைக் கொஞ்சம் படிக்கிறவர்கள் போல் தோற்றமளிப்பவர்கள், ஆ ஊ அட்டகாசம் ஆனால் பதிவை சுருக்கி ஸ்டேடஸாகப் போடலாமே என்று கொஞ்சுகிறார்கள்.. 

சுருங்கிய வடிவம் விரிவான வடிவம் என்றெல்லாம் எனக்கு எழுதத் தெரியாது. எதுவாக இருந்தாலும், இந்த பதில் உட்பட, திரும்பத் திரும்ப எழுதி திருத்தி மனதிற்கு நிறைவாக, இறுதி நிலையை எய்தி இருப்பதாகத் தோன்றிய பிறகே வெளியிடுகிறேன். சுருக்க முடியும் என்றால் அந்த வடிவத்திலேயே அது வெளியிடப்பட்டிருக்கும்.

என்கிற பதிலில் எவ்வளவு புரிந்ததோ ஆண்டவனுக்கெ வெளிச்சம். ஆனால் அந்த பதிலுக்கும் மூன்று லைக்குகள்.

புதிதாய்ப் பிறந்த மூஞ்சூருகள் அடிக்கும் கொட்டம் வார்த்தையில் அடங்காது. என்ன புரிகிறதென்றே தெரியாது. நான் திட்டினாலும் லைக். என்னைத் திட்டுபவனுக்கும் ஒரு லைக். 

நம்ப செட் இவர் எனவே இவர் எழுதினதுக்கெல்லாம் லைக்.

எழுத்தைப் பார்த்து அர்த்தபூர்வமாய் இருப்பதைக் கண்டால் எழுதியவனின் பெயரில் என்னென்ன இருக்கிறது எனத் தேடித்தேடிப் படிப்பவனே வாசகன். அவன் ரசனை,தேர்ச்சிபெற்றால் இலக்கிய வாசகனாய் கூட்டுப்புழு பருவத்திலிருந்து பட்டுப்பூச்சியாக வாய்ப்பிருக்கிறது. பூச்சியாகும் முன்னமே புத்தனாகிவிட்டதாகப் பூரித்து விம்மும் பூதகனங்கள்.

உண்மையில் சொல்லப்போனால் ஓஸியில் கிடைக்கிறது என்கிற ஒரே காரணத்தாலேயே நேரடியாக இணையத்தில் எழுதும் எழுத்திற்கு எந்த மரியாதையும் இல்லை. 

இதனாலேயே இணைய எழுத்தாளர்கள் படைப்பையும் எழுதி, அது எப்படியெல்லாம் மகோந்நதமானது, என்னென்ன விருதெல்லாம் அடைய அது தகுதியுடையது என்று விதந்தோதி அவர்களே எப்படியெல்லாம் வாசகன் இதைப் பாராட்ட வேண்டும் என்று உரையும் எழுதி, தலையை மாலைக்காய்த் தாழ்த்தி தவழவும் தயாராய் நிற்கிறார்கள்.

அச்சில் வருபவை அபத்தங்களாக இருந்தாலும், கோட்டு சூட்டு போட்டிருக்கும் நோஞ்சானும் வஸ்தாதாய்த் தெரிவது போல் இருட்டுப் பறவையின் குருட்டுப் பார்வைக்கு சோலைக்கொல்லை பொம்மையின் மிரட்சிகெளரவம் கிடைத்து விடுகிறது. 

ஆர்வக் குறுகுறுப்போடு யார் என்ன என்று தேடிப்பார்த்து பின் பேசவரும் குறைந்தபட்ச முனைப்புகூட ஃபேஸ்புக்கில் இல்லை என்றே படுகிறது. ட்விட்டர் பஸ்ஸ் இரண்டையும்விட ஆகக் கேடுகெட்டது ஃபேஸ்புக் என்றே சொல்லத் தோன்றுகிறது. மொக்கைகள் கொத்துகொத்தாய் தலைகீழாய்த் தொங்கிக்கொண்டிருப்பது போன்ற பிரமையே கனவிலும் துரத்துகிறது. 

எழுத்தாளனாய் இணையத்தில் எழுதுவதற்கு பதில் கையஞ்சு வாய்பத்து என்று அடித்தொண்டையில் முனகியபடி முக்கிய சாலைகளில் நின்றால் குறைந்தபட்சம் கண்ணகி சிலைவரை உயர்ரக கார் சவாரியேனும் கிடைக்கும். 

பொய்புகல் உலகில் துட்டைக்கொடுத்து வியாதியை வாங்கத் தயாராயிருக்கும் துரைமார்களின் எண்ணிகையே அதிகம் என்பதுதான் யதார்த்தம். மெய்நிகர் உலகிலும் அதுவே என்பது துரதிஷ்டம். 

வந்து போகும் கும்பலில் வடிகட்டி எஞ்சுவது சிறுபத்திரிகையின் வாசக எண்ணிக்கையைவிடவும் சிறியது. 

வாழ்நாள் துணையைத் தேடுவோரைத் தேடுமிடம் இதுவல்ல. 

எத்துனைப் பேர் படிக்கிறார்கள் அவர்களில் எத்துனைப்பேருக்குப் புரிகிறது என்பதையெல்லாம் தாண்டி, பிரசுரத்திற்காக எந்த முட்டாப்பயலிடமும் முண்டி இளிக்கத் தேவையில்லை என்கிற ஒரு காரணம் மட்டுமே இணையத்தில் பொதுக்கழிப்பிட சுவர்கிறுக்கும் சுதந்திரத்துடன் எழுத வைக்கிறது.