12 August 2011

இருமை - ஒரு கடிதம்


Pushparaj to me
show details 5:59 AM (5 hours ago)
தாங்கள் இணையத்தில் செயல்படத் தொடங்கியது முதல் தங்களின் எழுத்து செயல்பாடுகளையும் ஆக்கங்களையும் பின்தொடர்ந்து வருகிறேன். அதற்கு முன் இலக்கியச் சிந்தனை தொகுப்பில் இருந்த ‘உயிர்த்தெழுதல்’ என்னும் சிறுகதை மட்டுமே(அதன் முடிவு பற்றிய என் கருத்து விமர்சனப்பூர்வமானது) தங்கள் எழுத்தாக நான் வாசித்திருந்தது. 

இணைய செல்பாடுகளை பொறுத்தளவில் சுய, இலக்கிய வம்புகள் தவிர்த்த தங்களின் அனைத்து எழுத்துக்களும் மிக நுணுக்கமான அவதானிப்புகளாக என்னை கவர்ந்துள்ளன. புத்தாண்டு சமயத்தில் சவக்காரங்களை மேற்கோள் காட்டி தாங்கள் எழுதியிருந்த கட்டுரையை நான் என் நண்பர்களுக்கு சிபாரிசு செய்து அனுப்பிய அளவுக்கு என்னை பாதித்திருந்தது. உங்கள் எழுத்துக்களில் இருக்கும் மேல்பூச்சுகள் இல்லாத வெளிப்படை தன்மை தான் என்னை உங்களின் வாசகனாக மாற்றியது என்று சொல்லலாம். 

தங்களின் ‘வியர்த்தம்’ கவிதையை ராஜன்குறை முகநூலில் பெரிதும் சிலாகித்து மொழிபெயர்ப்பை முன்வைத்து எழுதியிருந்ததை கவனித்து மகிழ்ந்தேன். காரணம் என்னை மிகவும் கவர்ந்த கவிதை அது. கால வர்த்தமானங்களை கடந்த ஒரு அறிவியல் உண்மையை இரு பொருத்தமான உவமைகளில் அனாயசமாகச் சொல்லிச் சென்ற ஆக்கம். 

அப்போதே உங்களுக்கு எழுத வேண்டும் என்று நினைத்தேன். விட்டுப்போனது. இன்று தங்களின் ‘இருமை’ கவிதையைப் படித்ததும் உடனே இரண்டு வரியாவது எழுதிப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியதால் எழுதுகிறேன். 

‘சந்தோசப்பட வாய்ப்பு கிடைப்பது சாதாரண விஷயமில்லை’ என்று தொடங்குவதில் இருந்து அதுச் சொல்லிச் செல்லும் யதார்த்தங்களை உள்வாங்கி ரசிப்பதும் யதார்த்தங்களுக்குள் பொதிந்துள்ள நடைமுறை உண்மைகளை சிந்திப்பதுமாக இந்தக் காலை வேளை உவப்பாக துவங்கியுள்ளது.

”தட்டுத்தடுமாறித்தான் 
தெரிந்துகொள்ள முடிகிறது 
ஒளி, உள்ளேதான் இருக்கிறதென்று”

”கிட்டிய பிறகு 
எதுவும் பெரிய விஷயமில்லை 
என்பது சுலபம்”

போன்றவைகள்தான் எவ்வளவு உண்மை!

அன்புடன்,

புஷ்பராஜ்,
நாமக்கல்.

அன்பான புஷ்பராஜ்,

நன்றி. 
சில்லுண்டித்தனமாக சீரழியவே தயாராயிருப்பவனை, எப்போதேனும் வரும் இது போன்ற கடிதங்களே எச்சரிக்கின்றன. இதற்காக இன்னொரு நன்றி.