12 July 2011

கன்னத்தில் விழுந்த அறை (கதைகதையாம் காரணமாம்)

சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா - கன்னத்தில் விழுந்த அறை!

1981ல் புறநகர் ரயில் செண்ட்ரலை நோக்கி வந்துகொண்டு இருந்தது. மாநகரின் வடக்கு எல்லையைத் தாண்டிய சிற்றூரில் நிகழ்ச்சியை நடத்திவிட்டு திரும்பிக் கொண்டிருந்தது நவீன நாடகக்குழு. இலக்கியக் கலகக்காரன், சினிமாப் பிரவேசி, அரசுக் கல்லூரி ஆசிரியன், அரசு / வங்கி / அச்சக ஊழியர்கள், சினிமா இயக்குநர் ஆகக் கனவு மட்டுமே கண்டுகொண்டிருந்தவன், சுதந்திர பத்திரிகையாளன் எனக் கலப்படமான நபர்களால் ஆன நாடகக் குழு. காவல் நிலைய கற்பழிப்புகளை அம்பலப்படுத்தும் நாடகம். குழுவுடன் கெளரவ அங்கத்தினராய் ஜன்னலோரம் நாடக ஆசிரியரும் பட்டும்படாமல் அமர்ந்து வந்து கொண்டிருந்ததார்.

என்னதான் கலை இலக்கிய சமூகப் பிரக்ஞையுள்ள நாடகக் குழு என்றாலும் ரயில் பயணத்தில் எத்துனை நேரம்தான் ராமா கிருஷ்ணா கோவிந்தா என்று சதாசர்வ காலமும் பஜனை மட்டுமே செய்து கொண்டிருக்கும் பண்டார கோஷ்டி போல இலக்கிய சமூக அக்கரைகளையே பேசிக்கொண்டிருக்க இயலும்?

சினிமாக் கனவில் ஜீவித்துக் கொண்டிருந்த அதீத உணர்ச்சிகர இளைஞன் பிபிஎஸ்ஸின் மென்மையான கருப்பு வெள்ளை காலப் பாடல்களைப் பாடத் தொடங்கினான். ரசிக்கத் தொடங்கியது கூட்டம். பாடலின் சுலபமான இடங்கள் கோஷ்டிகானமும் ஆகத் தொடங்கின. கமர்சியல் சினிமாவில் நுழைய நவீன நாடகக்குழுவையும் நல்ல சந்தாக பாவித்த காரியார்த்த கிறுக்குக் குறும்பனொருவனால் பாடல்கள் மெல்ல மெல்ல நீர்க்கத் தொடங்கி, சுராங்கனியானது. நாடகக் கும்பலில் நட்டு போல்ட்டை டைட்டாக்கிக் கொள்ளாதவர்களும் சேர்ந்துகொள்ள இயல்பாய் உற்சாகம் பிய்த்துக் கொண்டது.

திடீரென்று அபஸ்வரமாய்க் கிறீச்சிட்டெழுந்தது ஒரு கீச்சுக் குரல். ஒடியக் கிடந்த தேகத்திடமிருந்து, கொட்டை தொண்டை மார்க்கமாய் வெளியில் வந்துவிடும்படியாக வெளிப்பட்டது குரல்.

நாங்கள் வெல்லுவோம்
நாங்கள் வெல்லுவோம் 
நாங்கள் வெல்லுவோம் 
ஓர் நாள்
ஓஹோ மனதில் நம்பிக்கை
பூரண நம்பிக்கை
நாங்கள் வெல்லுவோம் 
ஓர் நாள்

(ஹோங்கே கார்மியா
ஹோங்கே கார்மியா
ஹம் ஹோங்கெ கார்மியா
ஏக் தின்
ஓஹோ மன்மே ஹே விஸ்வாஸ்
பூரா ஹே விஸ்வாஸ்
ஹோங்கே கார்மியா
ஏக் தின்)

சட்டென்று முதல் கேட்பிற்கு, அலேலுயா கோஷ்டிகானம் போல் தோன்றினாலும் மார்ட்டின் லூதர் கிங்கின் வீ ஷேல் ஓவர் கம் என்கிற பாடலின் பாதல் சர்க்கார் வழித் தமிழாக்கம். பாதல் சர்க்காரின் மிச்சில் (வங்காளம்) / ஜூலுஸ் (ஹிந்தி) நாடகத்தின் தமிழ்வடிவமான ஊர்வலம் நாடகத்தில் வரும் பாடல்.

கல்லூரி வாத்தியும் ”அக்கினியின் புத்திரன்கள் / அத்தனையும் சாம்பல்” என்று பிரமிளின் திருவாயால் பாடல் பெற்றதுமான கோமாளி, ஏதோ புரட்சி விரல் நுனியில் சிலிர்த்துக் கொண்டிருப்பதான கிளர்ச்சியில் கோஷக்குரலுடன் பாட்டில் கலந்து கொண்டது. ரஷ்யப் பேழையில் பள்ளிகொண்டிருக்கும் லெனினுக்கே பீதியில் பேதி வந்துவிடும்படியாகக் கட்டைக் குரலில் கமறிக் கொட்டத் தொடங்கிற்று. சுராங்கனிக்குப் போய்விட்ட குழுவின் சரிவைத் தடுத்து ஆட்கொள்ள வேண்டிய பொறுப்பில் இருந்த குழுத் தலைவரும் கோஷ்டி கானத்தில் கட்டைக் குரல் கபாலியாய் இணைந்துகொண்டார். ஆக, சுராங்கனியை ஒருவழியாக நாங்கள் வெல்லுவோம் கத்தல் வென்றெடுத்தது. வெற்றிக் களிப்பில், அதுவரை வீறிட்ட நரம்பு, ரயில் பெட்டியின் மஞ்சள் பலகையில் மரவட்டையாய் சுருண்டு அடங்கியது.

சாட்டையை நாக்காய்க் கொண்ட இலக்கிய கலகக்காரன் நக்கலாய்ச் சொன்னான்:

புரட்சி பண்ணிக் களச்சிப் போயி சுருண்டு தூங்கவே ஆரம்பிச்சிட்டான்யா!

விருட்டென்று எழுந்த ஆசிரியச் சாம்பல், ஓங்கி அறைந்தது. 

ரத்தமும் வியர்வையும் சிந்தி நாங்கள் வளர்த்த குழு இது தெரியுமா? 

என்று வீர வசனம் பேசிற்று. நாடகத்தில் நடிக்கையில் வசனம் மறந்து தத்துபித்தெனும் அசமந்தத்தின் ஆவேச நடிப்பு.

புரச்சி, லேசான கிண்டலுக்கு உள்ளானாலும், புண் நாக்குகளுக்கு எந்நாளும், சுண்ணி முனையில் சுண்ணாம்பு பட்டது போல சுர்ரென்று பற்றிக் கொள்ளும்.

அறைந்தவன் பலமுறை இளித்தபடி ஈஷிக் கொள்ள முயன்றாலும் கலகம் முகம் சுளித்தபடி கடந்ததற்குக் காரணம் வலியில்லை வருத்தமில்லை கிடக்கிறான் சுண்ணம் என்கிற கர்வம். 

இருபதில் உண்டான சுய கணிப்பின்பாற்பட்ட கர்வம், இல்லாமற்போன ஆண்டுகளின் இடைவெளியின் காரணமாய் ஐம்பதில் காணாமற் போய்விடாது என்கிற உண்மை, பொச்சு முகரவே புரட்டித் திரியும் கிழப்பண்ணாடைக்குப் புரியக்கூடுமா என்ன? 

உண்மையில் நடந்தது இதுதானா என, தற்கொலை செய்துகொண்ட அதீத உணர்ச்சிகரன் தவிர்த்து, இன்னமும் உயிரோடிருக்கும் அத்துனைப் பாத்திரங்களிடமும் எவரும் குறுக்கு விசாரித்துக் கொள்ளலாம். புரட்சிக் களைத்த மரவட்டைகூட அதே ஓணான் முகத்துடன் கிழத்திற்குக் கீழ்த்தாங்கியாய் ஃபேஸ்புக்கில் கிடக்கிறது.