29 July 2011

ஜன்மபந்தம்

ப்ரணதார்த்தி ஹரன் என் அலுவலக நண்பன். நன்றாகப் பாடுவான். எஸ்ஐஇடி கல்லூரிச் சாலைக்கும் எல்ஆர் ஸ்வாமி கட்டிடத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் அண்ணாசாலை பிராக்கெட் ஆகும். அந்த வளைவில் இருக்கும் கட்டிடத் திட்டுகளில் சற்றே உள்ளொடுங்கிய ஒன்றில் இப்போது இருக்கும் சேவை வரிப் பிரிவுக்கு பதில், முழுக்கவும் கலால்துறை மட்டுமே இருந்த காலம் அது. அப்போது. அலுவலகத்தின் பின்புறம் கேண்டீன் என்கிற பெயரில் இருந்த ஒற்றை அழுக்கு மேசையில் வடைக்கும் டீக்கும் இடையில் ஹரனின் பாட்டு ஒலித்துக் கொண்டிருக்கும்.
ஜேசுதாசோடு ஆரம்பித்து ஜேசுதாசோடு முடிவடைந்துவிடும் ஹரனின் இசை உலகில் புதிதாக ஒரு பேய் புகுந்து ஆட்டத் தொடங்கியது. 

எப்பிட்றா எப்பிட்றா இப்புடிப் பாட்றான். !@#$%^&*() தாராள அர்ச்சனை. நேத்துலேந்து நானும் ட்ரை பண்ணிகிட்டே இருக்கேண்டா ஒக்காள ஓழி என்னமாப் பாடி வெச்சிருக்காண்டா. 

ஜன்மபந்தம் விட்டுப் போகுமோ.ஓ.ஓ.ஓ....எப்பிட்றா ஐயையோ

மச்சி ஹரி சாதாரண ஆள் இல்லே. தமிழா தமிழால்லாம் வரத்துக்கு முன்னாடியே, ஃப்ரெண்ட் வீட்ல கஜல்ஸ் கேட்டுருக்கேன். ஹரியும் ஜாஹிரும் சேந்து பண்ணின ஹஸிர் கேட்டுப் பாரு. எம்எல்வியோட கடைசி காலங்கள்ல என்னமாப் பாடறான் என்னமாப் பாடறான்னு பூரிச்சி, படுக்கைக்குப் பக்கத்துல டேப்ரெக்கார்டர்ல ஹரியோட கஸல்ஸ்தான் கேட்டுகிட்டு இருப்பாங்களாம். ஃப்ரெண்டோட அம்மா வாய்க்குவாய் சொல்லுவாங்க. அவங்க வீட்டு ஹால்ல எம்எல்வி கச்சேரி பண்ணி இருக்காங்க தெரியுமா? 

ஐயையோ அந்த ஹாலைப் பாக்கணுமே!

ஹரன் கடைசிவரை சங்கீதக்காரனாக ஆகவே இல்லை. ஆனால் சங்கீதக்காரர்களுக்கு இருக்கக்கூடிய சர்வ ’லக்ஷணங்களும்’ அதைவிடக்கூடவும் வந்துவிட்டிருந்தன.

நானே குடித்துக் கொண்டிருந்த காலங்களிலும் முகவரி கேட்பவன்தான் என்றாலும் குடித்துவிட்டுத் தள்ளாடியபடி கேட்டால் பதில் சொல்ல மாட்டேன். இதற்காக நம்பி கூடப் பலமுறை என்னை கலாட்டா செய்திருக்கிறார். 

மாமல்லன் குடிக்கிறதே ரிலாக்ஸ் பண்ணிக்க, குடிச்ச பிற்பாடும் ஸ்டெடியா இருக்கறதுக்கு என்ன மசுத்துக்குக் குடிக்கணும்? 

எக்காரணம் கொண்டும் சுயம் தாழ்ந்த தெருவோரப்புரளல் எனக்கு சாத்தியப்பட்டதே இல்லை. ஈடுபடும் எதிலும் எடுத்தவுடன் சுலபமாய் விளிம்பில்போய் நிற்பவன், போதையைத் தொடர்ந்திருந்தால் சாக்கடையில்தான் சம்சாரம் செய்துகொண்டிருப்பேன் என்பது நெருங்கிய நண்பர்களின் குடிநேரப் பரிகாசம்.

ஆனால் ஹரனை மட்டும் எவ்வளவு பரிகாசப்படுத்திக் கடிந்து கொண்டாலும் விரட்டவோ விட்டு விலகவோ இல்லை. இசைமேல் அவனுக்கு இருந்த வெறி கண்ட பரவசம் காரணமாய் இருக்க வேண்டும். ஹரனுக்கு ஒரு குட்டிப்பையன் இருந்தது தெரியும். அவனுக்காகவேனும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று நானும் ஷெல்லியும் பலமுறை சொல்லி இருப்போம். எல்லாம் வியர்த்தமானதுதான் மிச்சம். 

எதையும் பட்டவர்த்தனமாய் எழுதுதல் கதைக்கு மட்டுமே இருக்கும் கட்டற்ற வசதி. கட்டுரையாகப்போனதால் இதற்குமேல் இடமில்லை. ’எலிகளின் பந்தையம்’ ஹரன் இல்லாமலா?

97ல் அலுவலகம் சென்னையில் மூன்றாக விரிவாக்கப்பட்டபோது ஆளுக்கொரு மூலையாய் பிரிந்தோம். 2000-2002ல் திருச்சியில் இருந்த எனக்கு ஷெல்லி சொல்லிதான் சேதி தெரியவந்தது. அந்த கணத்தில் ஹரனின் முகமறியாப் பையனின் நினைவு நிழலாடியது.

சாய் சரண் ஏர்டெல் சூப்பர் சிங்கரில் ஒவ்வொருமுறை பாராட்டப்படும்போதும் ப்ரணதார்த்தி ஹரனின் முகம்தான் தெரிகிறது.

ஜன்மபந்தம் விட்டுப் போகுமோ.ஓ.ஓ.ஓ