14 July 2011

ழார் பத்தாயின் குதிரை [கதை] - பார்த்தசாரதி ஜெயபாலன்

மெலிந்த இடையும் அகன்ற இடுப்பும் கொண்ட அந்தப் பெண்ணைப் புணருவதற்கு முன்னரோ, புணரும்போதோ இல்லை புணர்ந்த பின்னோ பாப்லோ நெரூதாவுக்கு அந்த எண்ணம் தோன்றியிருக்கக் கூடும் என்று நினைக்கிறேன். 

தந்தி அலுவலகத்துக்கு சென்றார்.

'எங்கிருந்தாலும் உடனடியாக என் வீட்டுக்கு வரவும்'

தந்தி கொடுத்தார். உலக இலக்கியவாதிகள் அனைவருக்கும். 

அன்ன கரீனினாவுடன் படுக்கையில் இருந்த தொல்ஸ்தோய் அரை நிஜாருடன் வந்து சேர்ந்தார்.

நாடகக்காரியுடன் படுக்கையில் இருந்த செகாவ், தனது கரமசோவ் சகோதரர்களை பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த தஸ்தாவெஸ்கி(உச்சரிப்பு சரி என்றே நினைக்கிறேன்), தனது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வீட்டைப் பற்றி உள்ளூர் போலீசாரிடம் புகார் கொடுக்கச் சென்று கொண்டிருந்த கொத்தஸார்,போர்ஹே,காப்கா,புதுமைப்பித்தன் என்று எல்லோரும் வந்தார்கள். 

வந்தவுடன் அவர்கள் கேட்ட முதல் கேள்வி. 

'எதற்கு அழைத்தீர்?" 

'நாம் எல்லோரும் உலக இலக்கியவாதிகள் என்று அறியப்படுகிறோம் அல்லவா?"

'ஆம்.அதிலென்ன சந்தேகம்"

'அதில் சந்தேகம் ஒன்றுமில்லை.நாம் எல்லோரும் உலகத்தின் பல மூலைகளில் சிதறிக் கிடக்கிறோம்.

நாளை நாம் இல்லாமல் போகலாம். நாம் வருங்கால சந்ததியினரால் மறக்கப் படக்கூடும்"

'அதெப்படி.நாம் வண்டி வண்டியாக, மரங்களுக்குக் கேடாக எழுதி வைத்த புத்தகங்கள் இருக்கிறதே.

அதெப்படி அவ்வளவு சீக்கிரம் மறந்து விடுவார்கள். பார்த்து விடலாம்'

என்று ஆளுக்கொரு திசையில் பிரிந்து , பேனாவைத் திறந்து எழுத ஆரம்பித்தார்கள். 

நெரூதா அவர்களை சமாதானப் படுத்தினார்.

'நான் சொல்ல வந்தது அதுவல்ல. நமக்காக ஒரு தேர் செய்யலாம். இதுவரை யாருமே அந்த மாதிரி பார்த்திருக்கக்கூடாது. காலத்தால் நிலைத்து நிற்கக் கூடிய தேர்'

'தங்கத்தாலும் பொன்னாலும் இழைக்கச் சொல்கிறாயா?"

'இல்லை. நமது புத்தகங்களால்' 

மார்க்கேசுக்கு மயக்கம் வருவது மாதிரி இருந்தது.

'புத்தகங்களாலா?"

'ஆம்'

'ஸரி'

ஆரம்பித்து விட்டார்கள்.

உலமெங்கும் உள்ள சனாதாநிகள் கவலை கொண்டார்கள். 

தனித் தனியாக இருந்தாலே இவர்களை சமாளிப்பது கடினம்.இப்போது ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.

என்ன செய்யலாம்? என்று பல ரகசியக் கூட்டங்கள் நடத்தினார்கள். 

தீவிரவாதக் கூட்டம் ஒன்று அவர்கள் ஒன்று கூடி இருக்கும் போது குண்டு வீசலாம் என்று முடிவு செய்தது.

பின்னர் அது கைவிடப்பட்டதாக தகவல் வந்தது. 

ஒரே மாதத்தில் அந்தத் தேர் செய்யப்பட்டது. எல்லோரும் குதிரைகளைக் கொண்டு வந்து கட்டினார்கள்.

புதுமைப்பித்தனின் குதிரை சற்று உயரமாக இருந்தபடியால் அது முன்னாலே நிறுத்தப்பட்டது.

மற்ற குதிரைகள் இரண்டு வரிசைகளாக தேரில் பிணைக்கப் பட்டன.

ழார் பத்தாயின் குதிரை இரண்டு வரிசைகளுக்கு நடுவில் நிறுத்தப்பட்டது. 

ஆனால் அவர்கள் அஞ்சியது போல் ஆபத்து சனாதாநிகள் மூலமாக வரவில்லை. வேறொரு வடிவில் வந்தது.

************************************************* 

அந்தப் பிராந்தியம் எங்கும் ஒரே ரணகளம். அடிதடி. புகை மண்டலம். 

பெரிய தலை கொண்ட நிறைய மனிதர்கள் அந்தச் சண்டையில் கலந்து கொண்டிருந்தார்கள்.

அவர்களைப் பார்த்தால் எழுத்தாளர்கள் என்று தெரிந்து கொள்ளலாம். 

எல்லோரும் சமாதானம் செய்தும் அவர்கள் சண்டையை நிறுத்துவதாகத் தெரியவில்லை.

கடைசியில் காம்யூ எல்லோரையும் ஒரு உதைபந்தாட்ட உதை விட்ட பிறகுதான் நிறுத்தினார்கள். 

'இப்போது என்ன. இந்தத் தேரில் நீங்கள் பயணம் செய்ய வேண்டு அவ்வளவுதானே"

'ஆம்" 

"நான் ஒரு உபாயம் சொல்கிறேன். எல்லோரும் பயணம் செய்யலாம்"

'அதெப்படி எல்லோரும் பயணம் செய்ய முடியும். ஒருவருக்கு மேல் ஏறினாலே இந்தத் தேர் தாங்காது போலிருக்கிறதே'

'உங்களுடைய ஆக்ரோஷத்தைப் பார்த்தால் ஒருவர் ஏறினாலே தாங்காது போலிருக்கிறது.பொறுமையாக வரிசையில் நில்லுங்கள். ஒவ்வொருவராகப் பயணம் செய்யலாம்" 

முதலில் ஒருவர் ஏறினார். கையில் சாட்டை ஒன்று தரப்பட்டது.

'சுளீர்' என்று ஒரு வீசு வீசினார். குதிரைகள் புயல் வேகத்தில் பறந்தன.

மணலும், காற்றும் மட்டுமே உள்ள ஒரு கட்டற்ற பெருவெளியில் பாய்ந்தோடிய அக்குதிரைகள் ஒரு புளிய மரத்தைக் கண்டதும் நின்று விட்டன. அதற்கு மேல் நகரவில்லை. அவ்வளவுதான். அவர் இறக்கி விடப்பட்டார். 

இரண்டாமவர். குஸ்தி வாத்தியாரோ எனும்படியான தோற்றம் கொண்டிருந்தார்.

கையில் சாட்டையை வாங்கிய மறு கணமே குதிரைகள் கிளம்பி விட்டன. இப்போது அக்குதிரைகள் சென்ற வழியெல்லாம் இலைகள் நிரம்பியிருந்தன.சீரான வேகத்தில் சென்ற அக்குதிரைகள் சிறிது ஒய்வெடுத்து விட்டு மறுபடியும் ஏவுகணைகள் போன்று சீறின. ஒரு இடத்தில் முட்டையும், பழைய பேப்பரும் விற்பனை செய்யும் கடையைக் கண்டதும் அவை நின்று விட்டன. அவர் இறக்கி விடப்பட்டார். 

மூன்றாமவர். மோட்சம் அளிப்பதற்காகவே வானத்திலிருந்து இறங்கி வந்தவர் போல் காணப்பட்டார்.

முதல் இருவரும் தேரை ஓட்டும் போது வாயைத் திறக்கவில்லை. ஆனால் இவர் ஓயாது சொற்பொழிவாற்றிய வண்ணம் வந்தார். அவர் செய்த உபதேசத்திற்கு குதிரைகள் தான் தூங்கியிருக்க வேண்டும். ஆனால் அவர் தூங்கியபடியே உபன்யாசம் செய்து வந்தார். வாய் எதையோ பிதற்றியபடியே இருந்தது.

ஒரு இடத்தில் குதிரைகள் வளைவைக் கடக்கும் போது தூங்கிக் கொண்டிருந்தவர் புரண்டு படுத்தார். குதிரைகள் நின்று விட்டன. 

நான்காமவர். இவர் முகம் மிகவும் சாந்தமாகக் காணப்பட்டது. அத்தனை குதிரைகளையும் அன்போடு தடவிக் கொடுத்தார்.

குதிரைகள் நெகிழ்ந்தன. தேரில் ஏறியவர் குதிரைகளை சாட்டையால் விளாசவில்லை.வலது காலை எடுத்து இடது கால் மேல் போட்டுக் கொண்டு இன்னும் ஒரு நூற்றாண்டுக்குப் பின் பிரபலமாகப் போகும் பப்புவா நாட்டைச் சேர்ந்த ஒரு எழுத்தாளரின் நூலைப் படித்தபடி வந்தார். குதிரைகள் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருந்தன. ஒரு இடம் வந்தது. அந்த இடத்தில் வெயில் தவிர வேறு எதுவும் இல்லை. பாறைகளில் வெயில். கள்ளிச் செடிகளில் வெயில். வெயில் அந்தப் பிரதேசக் கிண்ணத்தில் வழிந்து வழிந்து நிரம்பிக் கொண்டிருந்தது.

குதிரைகள் நிற்கவில்லை. இவராகவே குதித்து விட்டார். 

ஐந்தாமவர். இவரைக் கண்டதும் அத்தனை குதிரைகளின் முகத்திலும் இனம் புரியாத பீதி (இந்த "இனம் புரியாத பீதி" எனும் வார்த்தைப் பிரவாகம் ஆரம்ப நிலை எழுத்தாளர்களால் மட்டுமே பயன்படுத்தப் படக் கூடியது என்று ஒரு பெரிய எழுத்தாளர் சொல்லியிருக்கிறார்.ஆகவே "இனம் புரியாத பீதி").

சாட்டையைக் கம்பீரமாக வாங்கிக் கொண்டார். சுற்றி ஒரு முறை பார்த்தார். ஆசனத்தில் அமர்ந்து 'ஹொய்" என்ற பலத்த சத்தத்துடன் சாட்டையை வீசினார். அவ்வளவுதான். குதிரைகள் தேரிலிருந்து பிய்த்துக் கொண்டு திசைக்கொன்றாகப் பறந்தன. காற்றினும் கடிய வேகத்தில் அவை மறைந்தன. ஒரே ஒரு குதிரையைத் தவிர. அது ழார் பத்தாயின் குதிரை. தேருடன் பலமாகப் பிணைத்து விட்டார்களோ என்னவோ. பரிதாபமாக அசைய முடியாமல் அப்படியே நின்றது.

ஐந்தாமவர் விடுவதாக இல்லை. 'ஹொய்' என்று மறுபடியும் சாட்டையை வீசினார்.

முன் இரண்டு கால்களையும் சட்டென்று மடித்து தரையில் சாய்ந்து விட்டது.

இப்போது வரை அவர் 'ஹொய்' என்று சாட்டையை வீசிக் கொண்டே இருக்கிறார்.

ழார் பத்தாயின் குதிரை மட்டும் எழுந்த பாட்டைக் காணோம். 

***************

இவருடன் இதுவரை நடந்த மின்னஞ்சல் பரிமாற்றங்கள்.

from Parthasarathi Jayabalan parthasarathij89@gmail.com
to madrasdada@gmail.com
date Fri, Feb 18, 2011 at 9:33 AM
subject Hi Sir
mailed-by gmail.com
signed-by gmail.com

dear maamallan - i am reading your website everyday. Just now I bought "sozhigal".
As para said " you are really a boxer".
I am a kid in both reading and writing.
Please read if you have time.
thanks 
jp


from parthasarathi.jayabalan@*****
to madrasdada@gmail.com
date Sun, Apr 17, 2011 at 1:48 PM
subject ???????? ??? ???????????,
mailed-by ****

மாமல்லன்ஐயா அவர்களுக்குஉங்க்ளைசந்திக்க வேண்டும் என்று மிகுந்த ஆவலாக உள்ளது. நான்திருவான்மியூர். நீங்கள் பெசண்ட் நகர். உங்கள்நேரம் கொஞ்சத்தை எனக்காக ஒதுக்க முடியுமா..ப்ப்ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

அன்புடன்
பார்த்தசாரதிஜெயபாலன்

from விமலாதித்த மாமல்லன் madrasdada@gmail.com
to parthasarathi.jayabalan@****

date Sun, Apr 17, 2011 at 2:00 PM
subject Re: ???????? ??? ???????????,
mailed-by gmail.com

[என் மொபைல் நம்பர்] முதலில் பேசிப் பார்ப்போம். சந்திப்பு தேவையா இல்லையாவென பிறகு முடிவு செய்யலாம்.

from parthasarathi.jayabalan@*****
to madrasdada@gmail.com

date Thu, Apr 21, 2011 at 4:21 PM
subject RE: ???????? ??? ???????????,
மாமல்லன்சார்,
இத்துடன்இரண்டு சிறுகதைகளை இணைத்துள்ளேன். 
நேரமிருக்கும்போது படிச்சுப் பாருங்க..

அன்புடன்
பார்த்தசாரதி ஜெயபாலன்

from விமலாதித்த மாமல்லன் madrasdada@gmail.com
to parthasarathi.jayabalan@****

date Thu, Apr 21, 2011 at 5:36 PM
subject Re: ???????? ??? ???????????,
mailed-by gmail.com
சரி

from parthasarathi.jayabalan@****
to madrasdada@gmail.com

date Fri, Jul 8, 2011 at 1:29 PM
subject Paarvai - Short story
mailed-by *****
Maamallan Sir – I just read your ‘Paarvai’ short story.
Amazing sir. I don’t know how many years will take for me to write a story like this.
Hmmm…

Thanks
Partha J

from விமலாதித்த மாமல்லன் madrasdada@gmail.com
to parthasarathi.jayabalan@*****
date Sat, Jul 9, 2011 at 4:09 AM
subject Re: Paarvai - Short story
mailed-by gmail.com
நன்றி!

from parthasarathi.jayabalan@****
to madrasdada@gmail.com

date Wed, Jul 13, 2011 at 8:29 PM
subject ழார் பத்தாயின் குதிரை
mailed-by *****

மாமல்லன் சார் - ழார் பத்தாயின் குதிரைனு ஒரு கதை எழுதிருக்கேன். படிச்சுப் பாத்துட்டு சொல்லுங்க சார். நான் மொதல்ல அனுப்பின கதைகள் ரெண்டு திராபைனு நெனக்கிறேன்.

இது அந்த அளவுக்கு மோசமா இருக்காது.

அன்புடன்
பார்த்தசாரதி ஜெயபாலன்

from விமலாதித்த மாமல்லன் madrasdada@gmail.com
to parthasarathi.jayabalan@*****

date Wed, Jul 13, 2011 at 10:55 PM
subject Re: ழார் பத்தாயின் குதிரை
mailed-by gmail.com

நீங்கள் சம்மதித்தால் சிறு குறிப்புடன் என் வலைப்பூவில் இதைப் பிரசுரிக்க எண்ணம். இல்லை எனில் தாட்சண்யம் பார்க்காமல் தாராளமாய்ச் சொல்லுங்கள்.

from parthasarathi.jayabalan@*****
to madrasdada@gmail.com

date Wed, Jul 13, 2011 at 11:42 PM
subject RE: ???? ????????? ??????
mailed-by *****

Maamallan sir - I have no words to say..I am a little boy ..
I am so HONOURED sir...I feel so so HAPPY...
Please publish...thanks a lot sir..thank you so much...

***********
ஒரு நாள் அவர் அழைத்த தொலைபேசிக்கு, முகம் கொடுத்துப் பேசியது தவிர நான் செய்தது ஏதுமில்லை. மேலே இருக்கும் இவரது கதையை இவர்தான் எழுதி இருக்கிறார். 

உள்ளிருக்கும் சுடரை அணையவிடாது மனதார முட்டிக் கொண்டே இருங்கள். ஒரு நாள் இல்லையெனில் மற்றொருநாள் பிடிபடும்.

முழுமை எனச்சொல்ல இயலாவிட்டாலும் நல்ல முயற்சி; நூல்முனை பிடிபட்டிருக்கிறது. நெரூதா பதிவிலிருந்து இன்றைய மாலையின் பஸ்ஸ் விவாதம் வரையில் பிடித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. https://plus.google.com/110744683177357188353/posts/JCyTVVrkWXX அப்படி இல்லாமல் இது எனது அதீத ஊகமாகவும் இருக்கலாம். ஆனால் நிழல்ஜாடைகள் நிறைய தற்காலிக முகம் காட்டுகின்றன - குறிப்பாக பின்பாதியில்.

இந்தத் ’தற்காலிகத்தை’ காலவரையரைக்குள் கட்டுப்படுத்தாது, மேலெழ வைத்து,நிரந்தரமாக்குவதில்தான் மறைந்திருக்கிறது, படைப்பு ’கலை’, ஆவதன் சூட்சுமம். அது எப்படி என்பதை எவரும் சொல்ல முடியாது. இது எப்படி சாத்தியப்பட்டதோ அதுவும் அப்படியே சாத்தியப்படக்கூடும்.

இடை - இடுப்பு? 


இடுப்பு http://bit.ly/qHlaIk

முதல் வரியில் தடுமாற்றம். சொல்ல வருவது என்னவென்று புரிந்துகொள்ள முடிகிறது என்பது, சொல்லி இருப்பதன் சொதப்பலை நியாயப்படுத்துமா? துல்லியத்தில் கவனம் தேவை. இழுத்துக் கட்டிய நாணாக இருக்க வேண்டும் வாக்கியங்கள். குறைந்தபட்சம் முதலாவது வரி.

<பிரவாகம்> பிரயோகம்தான் கூற நினைத்ததாய் இருக்க வேண்டும்.

<இப்போது வரை அவர் 'ஹொய்' என்று சாட்டையை வீசிக் கொண்டே இருக்கிறார்.>

இறந்த காலத்தில் போய்க்கொண்டிருந்த கதை சொல்லல் நிகழ்காலமாய் மாறுகிறது.

திரும்பவும், <ழார் பத்தாயின் குதிரை மட்டும் எழுந்த பாட்டைக் காணோம். > என்று இறந்தகாலத்திற்குச் சென்று முடிகிறது.

நீண்ட நேரம் / நெடு நேரம் அவர் 'ஹொய்' என்று சாட்டையை வீசிக் கொண்டே இருந்தார். என்று எழுதுவதால் கூறவந்ததில் ஏதும் பெரிய பொருள் மாற்றம் வந்துவிடுகிறதா?

காலக்குழப்பங்களை எழுத்தாளன் கொண்டுவரலாம். ஒரே நிபந்தனை, அது அதியாவசியம் காரணமான அறிந்த மீறலாய் இருக்க வேண்டும் என்பதுதான். ’காலம்’ பற்றிய தெளிவின்மை காரணமாகவோ, தட்டச்சுத் தெரியாததாலோ வந்த பிழை போலத் தடுமாற்றத்தில் உண்டான தத்துபித்து மீறலாய் இருந்துவிடக்கூடாது.

பளிச்சென்று தோன்றிய வேகத்தில் எழுதத் தொடங்கிப் பின், பாதியில் நிற்கும் கதைகள் என் கணக்கில் பத்தைத் தாண்டிக் கொண்டிருக்கின்றன. மனதில் உருண்டுகொண்டு இருப்பவை ஏழெட்டு இருக்கும். வரும்போது எழுதவரும். எழுத வரட்டும். எந்த ராஜ்ஜியத்தைப் பிடிக்க என்ன அவசரம்? புத்தகக் கண்காட்சிக்குப் புதிய புத்தகம் இல்லாது போனால் ஜீவன் மரித்துவிடுமோ?

ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஒன்றும் இல்லை. நிற்பதுவும் கம்பீரம்தான். நின்றுகொண்டிருக்கையிலும் கூன் போடாமல் நிற்கிறதா என்பதல்லவா முக்கியம். 

குதிரை தன்னிச்சையானது. விரட்டி, எதைக் காட்டியும் எதன் பொருட்டும் அதை மண்டியிட வைத்துவிடாதீர்கள்.

பி.கு: அநாவசியச் சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு, அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் பெயர் ***ஆக மறைக்கப்பட்டிருக்கிறது.