20 July 2011

தேடல்

கசிந்துருகிய மனிதன் கடவுளைக் கண்டான்.

கண்டவனைக் கண்டவனைக்
கண்டதாய்ச் சொன்னவர்களைக்
கண்டதாய்ச் சொன்னவர்களின்
காத்திர வார்த்தைகளில் பிரிந்து திரண்ட அணிகள்
மார்பறைந்து கூவத் தொடங்கின

”இதுதான்
இறைவனை அடைவதற்கான
உண்மையானதும் சரியானதுமானக் கடவுச் சொல்”

பதம் பிரித்து அருஞ்சொற் பொருளெழுத
கடவுச் சொற்கள் கடவுளாயின.

சொற்களின் மகத்துவம் நிறுவ
மனிதன் வடித்த ரத்தம்
சகதியாயிற்று.

கசிந்துருகிய வண்ணம் 
மனிதனைத் திறப்பதற்கான, 
கடவுச் சொல்லை 
யுத்தபூமியில்
தேடிக்கொண்டிருக்கிறது தெய்வம்