27 July 2011

சூ·பி இயக்கம் – பிரமிள் (ஆபிதீனுக்கு நன்றி)


ஜூன் 10, 2008 இல் 2:12 மாலை (ஆன்மீகம், கட்டுரை, பிரமிள்

திரு. கால சுப்ரமணியம் தொகுத்த பிரமிளின் ‘பாதையில்லாப் பயணம்’ நூலிருந்து…

***

சூ·பி என்று ஆங்கிலப்படுத்தப்படும் பதம், தஸவு·ப் என்ற அராபியப் பதமாகும். பதனிடப்படாத செம்மறி ஆட்டுத் தோலை அணிந்த ஞானநெறியாளர்களுக்கு ஏற்பட்ட காரணப்பெயர் இது. ஆனால், இந்தப் பெயர், கிருஸ்து சகாப்தம் 800க்குப் பிறகுதான் ஏற்படுகிறது. இதில் விசித்திரம் என்னவென்றால் , மேற்படி ஆடைகூட அற்ற பிறந்தமேனியாளாக அலைந்த ராபியா-அல்-அதாவியா என்ற மாஜி அடிமைப்பெண் ஒருத்தியிடமிருந்தே , 800-ல் இந்தப் பெயர் பிறக்கிறது.

சூ·பி நூல்களுக்கும் இயக்கத்துக்கும் அரபியை விட பார்ஸிதான் முக்கிய கேந்திரம். மேலை நாட்டினரின் குறிப்புகளில் , சூ·பிஸம் ஒரு இஸ்லாமிய உட்குழு என்றும் இதில் மேலைத்தேய கீழைத்தேய பாதிப்புகள் உள்ளன என்றும் காணலாம். சூ·பி பார்வைகள்தாம் மேலைத்தேய மத சமூகப் பிரச்சனைகளை உருவாகியுள்ளன என்பது, சூ·பிஸத்தை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரிய வரும். சூ·பிஸம் ஒரு இஸ்லாமிய உட்குழு அல்ல. இஸ்லாம், யூதாயிஸம், கிருஸ்தவம், ஹிந்துத்துவம், பௌத்தம் முதலிய எல்லா மதங்களும் சூ·பிஸத்தின் உட்குழுக்கள் என்று உணர்வதே, இதன் ரகஸ்யமான சரித்திர ஓட்டத்தை நமக்கு உணர்த்தும். பம்பாயைச் சேர்ந்த இத்ரீஸ் ஷா, ‘சூ·பிஸாத்தின் ஊற்று மனித இனம்தான்’ என்கிறார். இந்த அளவுக்கு மதவரம்புகளையும் நம்பிக்கைகளையும் மீறுபவனே சூ·பி.

இப்படி நம்மிடையே வாழ்ந்து பிரவசனித்து மறைந்த ஜே. கிருஸ்ணமூர்த்தியை நாம் சூ·பி என்று கொண்டால் , அதன் பெயரால் நடத்தப்படும் குழுரீதியான இயக்கங்களை சுட்டி காட்டித் தம்மை சூ·பி அல்ல என்றே அவர் கொள்வார். இப்படித் தன்னை எந்த வரன்முறைக்கும் உட்படுத்தாத மனோநிலையும் இதன் வெளிவீச்சான சொல்லும் செயலும்தான், உண்மையான சூ·பிகளின் அடையாளங்கள்.

உண்மையான சூ·பிஸம் என்றால் என்ன என்பதை ·புஸாஞ்சி என்ற மகான், கிருஸ்து சகாப்தம் 900 அளவில் – அதாவது சூ·பிஸம் என்ற பெயர் பிறந்து 100 வருடங்களுக்குப் பின்பு - இப்படிக் கூறியிருக்கிறார்: ‘சூ·பிஸம் என்பது, ஆதியில் பெயரற்ற உண்மையாக இருந்தது. இன்று, அது உண்மையற்ற பெயராகி விட்டது’. அவர் காலத்திலேயே, போலி சூ·பிக்கள் தோன்றியதின் விளைவு இக்கூற்று. இதற்கு முன்பும் மகத்தான மகான்கள் பலர் தோன்றி இருக்கின்றன்ர். சூ·பி என்ற பதம் பிறப்பதற்கு முன்பே கி.பி 500 அளவில் தோன்றிய முகம்மது நபியும் இவருக்கு 500 வருஷங்கள் முந்திய யேசு கிருஸ்துவும் அவருக்கு 500 வருஷங்கள் முந்திய கௌதம புத்தரும் அவருக்கு முந்திய பல்வேறு ரிஷிகளும் சூ·பிகள்தான். இந்திய மெய்மைத் தேடல், ஹிந்துத்துவம் என்று இப்போது தெரிய வருகிற மத வரம்புக்குரிய உட்குழுவாக எப்படி இனம் காட்டப்படுகிறதோ, அவ்விதமே சூ·பி இயக்கமும் பின்னாடி இஸ்லாமின் உட்குழுவாகக் காட்டப்படுகிறது. இதனை, கிருஸ்துவின் மூலச்செய்தி, புத்தரின் மூலச்செய்தி ஆகியவற்றுக்கும்கூடப் பொருத்திப் பார்க்கலாம். மூலச்செய்திகளை உணரத்தக்க தீட்சண்யம் உள்ளவர்களுக்கே இது சாத்யம்.

முகம்மது தோன்றிய காலத்தில், ஹூனா·பா (இது பன்மை. இதன் ஒருமை, ஹனூ·ப்) என்ற பெயரில் தெரியவந்தோர், ஏற்கனவே இருந்திருக்கின்றனர். ஹூனா·பா என்ற அரபிப்பதத்தின் பொருள், ‘திசை திரும்பியவர்கள்’. இஸ்லாமிய சரித்திராசிரியர்கள் சொல்வதின்படி பார்த்தால் , மெக்காவில் நடந்து கொண்டிருந்த வியாபாரார்த்தமான ‘உருவ வழிபாட்டிலிருந்து திசை திரும்பியவர்கள்’ என்றே, ஹூனா·பாக்களை அறியலாம். வெறும் சம்பிரதாயம் எதுவானாலும் அதிலிருந்து உண்மையைத் தானாக தேடி அடையும் உண்மை தேடியையே , உண்மையில் ‘திசை திரும்பியவன்’ எனலாம். அன்றைய உருவ வழிபாடுகளிருந்து திசை திரும்பிய இவர்கள் , தங்களை ஒரு குழுவாகக் கொள்பவர்களல்லர். மேலும், இவர்கள் ஒவ்வொருவரும் தாமே உண்மையைத் தேடி அடைய வேண்டும் என்றே உணர்ந்தோராவர். இவர்களுள் ஒருவரே, முகம்மது. ஆனால், மெக்காவின் உருவ வழிபாட்டை நிராகரிக்கும் இயக்கம் ஒன்றினை இவர் உருவாக்கி , பின்பு அது ஒரு மதமாக வரன்முறைப்படுத்தப்பட்ட பின்பு , ஹூனா·பா என்ற பெயரும் இந்த வரண்முறைக்குள் ஒடுக்கப்பட்டு விட்டது – எப்படி அன்றைய ரிஷிகள் , பிந்திய பிராமணிய ஹிந்துத்துவத்துக்குள் ஒடுக்கப்பட்டனரோ, அதேபோல். இந்நிலைக்குப் பிறகுதான் , பழைய ஹூனா·பா மெய்மைத்தேடல், சூ·பிஸம் என்று பெயர் பெறுகிறது. பிராமணீயமாக நசிவடைந்த ரிஷிகளின் பார்வை மதவடிவம் பெற்ற பிறகு, அதை விமர்சித்து இயங்கிய பௌத்த இயக்கமும் இத்தகையதுதான். எப்படி பௌத்தம், பிராமணீய இயக்கங்களினால் இங்கே நிர்மூலம் செய்யப்பட்டதோ, அதேபோல் சூ·பிகளும் இஸ்லாமிய மேலாதிக்கவாதிகளினால் அவ்வப்போது உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். எப்படி இங்கே வாய்வேதாந்தம் பேசும் மதாச்சரியர்களை விட, ஊர்பேர் தெரியாத மகான்களைச் சுற்றி மக்கள் கூடுகின்றனரோ, இதேபோல் சூ·பி மகான்களைத்தான் மக்கள் சூழ்கின்றனர்.

ரபியா-அல்-அதாவியா, தான் வைத்திருந்த குர்-ஆன் பிரதியில் உள்ள ‘ஷைத்தான்’ என்ற பதத்தை அடித்துவிட்டு , பதிலாக ‘அல்லாஹ்’ என்று எழுதி வைத்திருப்பாராம். இத்தகைய பல்வேறு பார்வைககளுக்கு, சூ·பிகள் செய்வதெல்லாம் ‘ஹராம்’ (நிராகரிக்கப்பட்டது) என்று இஸ்லாமிய மரபுவாதிகள் கொண்டிருந்தனர். குர் ஆனுக்கு ஏழு தளங்கள் உள்ளன என்பது சூ·பி கொள்கை. இதனை மரபுவாதிகள் உணராமைதான், உண்மையான பிரச்சனை என்று சொல்ல வேண்டும்.

ஹாஸ்யத் துணுக்குகள் போலத் தோன்றும் கதைகள் மூலம் ஆழ்ந்த தர்சனங்களை வெளியிடும் முறை, சூ·பிஸத்தின் மூலம் ஒரு அபூர்வ இலக்கிய வடிவையே உருவாக்கியிருக்கிறது. ராபியாவிடம் ஆரம்பித்த முறை இது எனத் தோன்றினாலும் , இப்படி குட்டிக் கதைகளை யேசுவும், புத்தரும் கூட சொல்லியிருக்கின்றனர். ஆனால் இவற்றில் இல்லாத ஹாஸ்ய ரஸம், சூ·பி கதைகளிலே உண்டு. இக்கதைகள் பகுத்தறிவு சார்ந்த ஒரு தீவிரமான அகவிழிப்பு நிலையை உருவாக்கக்கூடியவை . முல்லா நஸ்ருத்தீன் என்ற கற்பனை பாத்திரம் ஒன்றை வைத்து , இத்தகைய கதைகளை ராபியாவுக்கு பின்னாடி உருவாக்கியுள்ளனர். இவை ஒவ்வொன்றும் மகான்களால் உருவாக்கப்பட்டவை என்றும் , தொடர்ந்து ஆறு முல்லா கதைகளை கேட்டால் ‘ஹல்’ என்கிற பரவசபோதை ஏற்படவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

‘லைலா மஜ்னு’ கதை போன்றவையும் உமர் கய்யாம், ஜலாலுத்தீன் ரூமி முதலியோரின் கவிதைகளும், சூ·பிக் குறியீடுகள் கொண்டவை. இவ்விதம் மறைமுகமாகத் தங்கள் செய்தியைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் , ராபியா காலத்திலும் முன்பின்னாகவும், சூ·பிகளுக்கு ஏற்பட்ட ஆபத்தான எதிர்ப்புகளின் விளைவாகலாம். மது என்பது பரவசநிலையையும் காதல் என்பது மெய்மைத் தேடலைத் தூண்டும் தாபமாகவும், சூ·பி இலக்கியங்களில் குறியீடு பெறும். இந்த அணுகுமுறையை உருவாக்கியவர், மாஜி அடிமையான ராபியா என்றே தெரிகிறது.

புகழேந்தியின் நளவெண்பாவில் உள்ளபடி பார்த்தால் , நள தமயந்தி கதை சூ·பி மரபை நூறு வீதம் சார்ந்திருக்கிறது. காதலர்களை இணைக்கும் அன்னப்பட்சி பரம்பொருளாகவும், பிரிக்கும் சனிபகவான் உலகுணர்வு சார்ந்த விதியாகவும் , சூ·பி மரபின் வழியாகக் கூட பொருள் பெறுகின்றன. முகம்மது என்ற அரபிப் பெயரின் பொருள், ‘புகழ் கொண்டோன்’. இது ‘புகழேந்தி’ பெயரில் எதிரொலிப்பது ஒரு தற்செயல் விஷயம்தானா என்று கேட்டுப் பார்ப்பது பலன் தரும்.

நமது மரபுகளில் உள்ள பரிபாஷை முறைகூட சூ·பிகளின் முறைதான். ஸஹாராவிலிருந்து இலங்கை உட்பட்ட சமூகம் வரை பரந்துபட்ட ஒரு மொழியூடகம், இன்று மொழியியலாளர்களால் உணரப்படுகிறது. இந்த மொழியூடகத்தின் தர்சன இயக்கம், மெய்மைத் தேடல்தான்.

அரபி பார்ஸி மொழிகளின் சில பதங்கள் தமிழிலும் எதிரொலிப்பது இதற்கு தடயமாகும். அறி·ப் : அறிவு, அறி·பின் : அறிஞன், முட்லாக் : முட்டாள் – இவை உதாரணங்கள். பரிபாஷை வடிவிலே அமைந்துள்ள திருவாதவூர் மாணிக்கவாசகரின் கதையில் நரியைப் பரியாக்குவதாகச் சொல்லப்படுவது , நரனைப் பரனாக்குதல் என்றே உட்பொருள் பெறும். நரி பரி இரண்டிற்கும் அடியில் ‘அறி’ என்ற ஒலியமைப்பை உணரலாம்.

அறிநிலையில் பரனும் மாற்றுநிலைகளைப் பெறுவது, மாணிக்கவாசகர் கதையின் உட்பொருள். மாணிக்கவாசகர் பாடகள் சூ·பி இயக்கத்தின் ஒரு முக்கிய அங்கமான பக்தியை வெளியிடுகின்றன. ‘ ஒரு நாமம் ஓருருவம் ஒன்றில்லார்க்கு ஆயிரம் திருநாமம் சொல்லி யாம்…’ என்ற வரியில் , உருவநிலைகளைத் தாண்டிய அகநிலையையே அவர் குறிப்பிடுகிறார். ‘இவர் வழிபட்டது சிவனையன்றோ?’ என்றால் இஸ்லாமியருக்கு தெய்வீகமான பிறை, சிவனின் ஜடையிலே சூடப்பட்டிருப்பதைக் காணவேண்டும். இது இவ்விரு மரபுகளின் அத்திவாரத் தொடர்பைக் காட்டுவது. முகம்மது நபி பெயரில் உள்ள ‘நபி’யும் நாராயணனின் நாபியிலிருந்து பிறந்த பிரமனும், நபி – விவேகம் – தீர்க்கதரிசனம் என்ற பொருள் வழியில் ஒன்று படுகின்றன. அரபியில் அம்மாவைக் குறிக்கும் உம்மா , பார்வதியின் பெயரான உமா – இரண்டிலும் இதே அடிப்படை புலனாகிறது. இந்தவிதமான அகழ்வாராய்வினைத் தொடர்ந்தால், இந்தச் சிறிய குறிப்புக் கட்டுரை போதாது.

பக்தி இயக்கம் சூ·பிகளுக்கும் இந்திய உண்மை தேடிகளுக்கும் பொதுவாக இருந்திருக்கிறது. மதவரம்புகளை மீறி இதயத்தை உருக்கும் ரஸவாதமாக , சூ·பி பாடல்களும் , நமது பக்திப் பாடல்களும் பிறந்திருக்கின்றன. அருள் சொல்லாடல்கள் மூலம் இவை , தத்துவ மறைபொருள் புதையல்களாகவும் உள்ளன. இவ்விதம் பார்த்தால் ஜலாலுத்தீன் பாடல்களும் மாணிக்கவாசகரின் பாடல்களும் இந்தவகை இலக்கியத்தின் சிகரங்களாகும். படிப்பவனின் எல்லாவிதமான அத்திவாரங்களையும் சிதறடிக்கும் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் ‘பாதை’ கூட இதேவகையான படைப்புத்தான்.

தமிழில் இன்று சூ·பிகள், இலக்கிய வடிவங்களை ஆண்டு தங்களை வெளியிடுகின்றனர். குணங்குடி மஸ்தானைப் பலரும் அறிவர். ஆனால் சமகாலத்தில் சூ·பி ஞானி , செய்யிது ஆசியா உம்மாவைப் பலர் அறியவில்லை. இவர் எழுதியுள்ள மெய்ஞ்ஞானப் பாடல்கள் எவ்விதமான போலித்தனமும் அற்ற சுயமுத்திரை கொண்ட எளிமையான உயிரோட்டத்தில் பிறந்தவை.

கீழக்கரையில் 1947ல் எண்பதாவது வயதில் காலமான செய்யிது ஆசியா உம்மாவின் பாடல்கள் , அரபுத் தமிழில் இயற்றப்பட்டவை. சூ·பி ஞானவான்கள் பலரது பெயரும் புகழுமே இவற்றின் கருப்பொருளாகும். சமஸ்கிருத மரபும் தமிழ் மரபும் இணைகிற மணிப்பிரவாள முறை போன்றது அரபுத்தமிழ் மரபு. மொழியூடகப் பிணைப்புகளின் காலம் காலமான இயக்கங்களுள் ஒன்று இது. தமிழில் சம்ஸ்கிருதத்தையும் , தமிழையும் காண்கிறதோடு நின்றுவிடாமல் அரபி-பார்ஸி-ஹீப்ரு மொழிகளுக்கும் தமிழுக்கும் இடையில் உள்ள தொடர்புகளையும் நாம் காண, இத்தைகய படைப்புகள் தூண்டுதல் தரவேண்டும்

- லயம் (அக்டோபர் 1995) -

நன்றி : கால சுப்ரமணியம்

***
பாதையில்லாப் பயணம் / பிரமிள்
( ஆன்மீக, மறைமுக ஞானப் படைப்புகள்)
வெளியீடு : வம்சி புக்ஸ்
19, டி.எம். சாரோன்
திருவண்ணாமலை – 606 601
செல் : 9443222997

விலை : ரூ 150/-