07 July 2011

மூட்டம் ஓட்டம் கண்ணாடி

மூட்டம்

கவிந்திருக்கும் அழுக்குத்துணியை
கைகாலுதைத்து விலக்கத்துடிக்கும்
குழந்தையின் கிலேசத்தைக்
காய்ந்த நிலத்தின்மேல்
தவித்தபடிக் கிறுக்கிக்கொண்டிருக்கிறது
இளஞ்சூரியன்.

ஓட்டம்

தீட்டும்போது தவறி விழுந்த
வண்னத் திப்பியைத் துடைக்கப்போய்
தீற்றலாக்கிவிடும் பள்ளிச்சிறுவனாய்
தொலைதூர மலைத்தொடரின்
தாறுமாறுகளை
சாலையோர மரங்களால் 
நீவியபடி
காற்றில் அளைந்த புழுதிக் கறைகளுடன்
ஓடிக்கொண்டிருக்கிறது 
புறநகர் மின்வண்டி.

கண்ணாடி


தந்தியாய் முட்டிய
இயற்கையின் அழைப்பிற்காய்
தாயிடம் பள்ளிப்பையைக்
கழற்றித் தந்து
வெட்கம் பிடுங்க
அசட்டுச் சிரிப்புடன்
அலமுறுந்து பார்த்தபடி
வெட்டவெளி நடைமேடையின் நடுவில்
முளைவிட்டுக் கொண்டிருந்த
இரும்புத் தூண் அருகில்
எந்தப்புறத்திலும் ரயில் வருமுன்
ஜட்டி கழற்றி உட்கார நேர்ந்த
முன்பல் உதிர்ந்த
பெண்குழந்தையின் தவிப்பு

செய்வதற்கு ஏதுமற்றுக்
காத்திருக்கும் தருணங்களில்
பூத்திருக்கும் அழகை
நோட்டம் தெரியாமல் பார்த்திருக்க
அணிந்திருந்த லஜ்ஜையற்ற
கருப்புக் கண்ணாடிக்கு
இங்கிதம் கற்பித்தது.