23 July 2011

தவிப்பு

பால்கனிக்குப் போகும்போதெல்லாம்
தாழப்பறந்து விரட்டத் தொடங்கிற்று

அண்டையிலிருக்கும் கிளை அதன் பால்கனி
என் வாசம் கான்க்ரீட் நெடுமரத்து பொந்து

எல்லா காகங்களும்
ஒரே மாதிரி கருப்பாக
ஒரே மாதிரி ஓரப்பார்வை பார்த்தபடி
ஒரே மாதிரி ஜலதோஷக்குரலுடன்
ஒரே மாதிரி குரூபியாய்
ஒரே மாதிரி இருக்கின்றன

பொந்துக்குள் இருந்தபடி
இருக்கிறதாவென
தலைமட்டும் நீட்டி
ஓரக்கண்ணால்
நோட்டம்விட்டேன்

தூரத்துக் கிளையொன்றில்
சுள்ளிக்கூடையாய்க் கட்டிக்கொண்ட
கூரையில்லாத கூட்டில்
குஞ்சுகளுக்கு ஊட்டிக் கொண்டிருந்தது
அங்குமிங்கும் நோட்டம்விட்டபடி