10 July 2011

கட்டி தங்கம் வெட்டி எடுத்து...

எப்போது ஜெயமோகனின் தளத்தைத் திறந்தாலும் பத்மநாபஸ்வாமி ஆலையம்போல் தங்கமாகக் கிடைக்கிறது. சுயபுத்தி உள்ள எவனேனும் தனக்குப் பிடித்த கவிதைகளைத் தன் கவிதைகள் என்று சொல்லிக் கொள்வானா? ஜெயமோகன் பிரபஞ்சத்திற்கு வெளியில் இருக்கும் ஆன்மீகப் பிரஜை அல்லவா கேவலமான மனிதப்பிறவிகளுக்கான விதிகள் கடவுளைக் கட்டுப்படுத்தமுடியுமா என்ன?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களின் விமர்சனப் பார்வையில் குறிப்பிடத்தக்கவையாகக் கருதும் நவீன கவிதைகளைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டதன் விளைவு,கீழ்க்கண்ட எளிய வலைப்பூ. முடிந்தவரை தொகுக்கப் பார்க்கிறேன். நன்றி!

அன்புடன்,
கு.மாரிமுத்து

அன்புள்ள மாரிமுத்து,

ஆச்சரியமாக இருக்கிறது. நான் பல்வேறு கட்டங்களில் பல்வேறு கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் கவிதைகளை இப்படி ஒரே இடத்தில் பார்க்கும்போது என்னையே கண்ணாடியில் பார்ப்பது போலிருந்தது. இதன் பின் உள்ள உழைப்பு ஆச்சரியமளிக்கிறது

வாழ்த்துக்கள்

ஜெ

*****

சரி பிழைத்தது போய் தொலையட்டும் குறைந்தபட்சம் அவரது ரசனை எப்படியானது என்று தெரிந்துகொள்ளவேனும் முயற்சிக்கலாம் என்று பக்கவாட்டில் இருக்கும் பெயர்களைப் பார்த்துக் கொண்டே வந்ததில், பட்டியலில் விக்ரமாதித்த்யன் பெயரைப் பார்த்ததும் ஆச்சரியம் மேலிட்டது. சரி என்னென்ன கவிதைகள் ஜெயமோகனுக்குப் பிடித்தவை என்கிற ஆவலில் விக்ரமாதித்யன் பெயரை அழுத்த முதல் கவிதையே தூக்கி அடித்தது. ’தக்ஷ்ணாமூர்த்தியான’ என்கிற இந்தக் கவிதையை எண்பதுகளில் படித்ததாக நினைவு. 

ஜெயமோகன் 90களில் எழுதப்போகிற கதையின் விஷயத்தை அப்பட்டமாக அப்படியே நகலெடுத்தாற்போல் 80களில் எழுதியிருக்கும் விக்ரமாதித்யனுக்கு என்ன ஒரு நெஞ்சழுத்தம் இருக்கவேண்டும்.எப்படியும் இன்று இரண்டிலொன்று பார்த்துவிடுவது என்கிற முடிவோடு நம்பிராஜனை அலைபேசியில் அழைத்தேன். அவர் மனைவிதான் எடுத்தார். 

மாமல்லன் என்பேரு நம்பியோட ஃப்ரெண்டு.

மாமல்லன்னு சொன்னா போதாதா உங்க பேரு நரசிம்மன்தானே அப்பப்பப் பேசிக்கிடுவோமில்ல, ரெண்டு மாசம் முன்னாடிக்கூடப் பேசினீங்கன்னு சொன்னாரு என்று கூறி நெகிழவைத்தார். அநேகமாய் அவரைப் பார்த்து எப்படியும் 25 வருடங்களுக்குக் குறையாது. இயற்பெயரான நரசிம்மன் கூட இனையத்தைப் படிக்காமலேயே நம்பியின் துணைவியாருக்கு நினைவில் இருப்பது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.

ஏனெனில், இணையத்தில் எல்லாவற்றையும் துறந்தது போன்ற தோற்றத்தில் உருத்துற நாய் ஒன்று, பின்புறத்தை முசுமுசுவென்று முகர்ந்தபடி, நரசிம்மன் என்கிற பெயரை நாளைக்கு எட்டுதரம் குலைத்துத் துறத்தி முக்தியடைய மூர்க்கமாக முயற்சித்துக் கொண்டிருப்பது நினைவில் வந்துபோய் இதழை விரிய வைத்தது. 

இதைப் போய் அந்த அம்மாவிடம் சொல்ல முடியுமா என்ன? மீறிச் சொன்னால் ஏன் அவுகளுக்கு என்ன ஆச்சு? நல்லாத்தானே இருந்தாவுக, யார் யாரு எப்பெப்ப மெண்டலாவுறாங்கன்னு ஆருக்கு தெரியுது என்று நொந்து புலம்பவும்கூடுமல்லவா எனவே சுத்துப்பட்டு விஷயங்களைப் பேசி, நம்பி வெளியில் சென்றிருக்கிறாரோ எனக்கேட்டேன். சங்கர ராம சுப்பிரமணியம் வந்திருந்தான், அவனோட நேத்துச் சாயந்திரம் போனாங்க என்றார். 

சங்கர ராம சுப்பிரமணியத்தின் கைபேசி நம்பர் இல்லை. C.மோகனைத் தொடர்பு கொண்டேன், வெளியில் இருந்தார் குறுஞ்செய்தி அனுப்புவதாகக் கூறினார். என்ன இருந்தாலும், அறச்சீற்ற ஜெயமோகனுக்கு சோறு போட்டு, சம்பளத்திற்கு உரிய வேலை செய்தே ஆகவேண்டும் என்று இம்சிக்காமல், இலக்கியத்தைக் காய்ந்துபோகாது காப்பாற்றிய பிஎஸ்என்எல் நம்பர் ஆயிற்றே C.மோகனுடையது. இப்போது அந்த நிறுவனத்தில் ஏகப்பட்ட ஜெயமோகன்கள் இலக்கியத்திற்காக உழைக்கிறார்கள் போலும், இதனால்தான் பிஎஸ்என்எல் குறுஞ்செய்திகள்,இருமிக்கொண்டிருப்பவன் கடைசி மூச்சை இழுத்துவிடுகையில் கட்டாயம் வந்து சேர்ந்துவிடும் என்கிற பெரும்புகழ்படைத்தவையாக இருக்கின்றன.

சுகுமாரனைத் தொடர்புகொண்டு தக்ஷ்ணாமூர்த்தி கவிதை எந்தத் தொகுதி எனக்கேட்டேன். விக்கிரமாதித்யனின் மொத்த தொகுப்புதான் கைவசம் இருப்பாதாய்க் கூறி, எடுத்துப் பார்த்துவிட்டு பன்னிரண்டாம் பக்கத்தில் இருக்கிறது, எனவே அவரது முதல் தொகுதியான ஆகாசம் நீலநிறத்தில் இருக்கக்கூடும் என்று கூறி, என்ன விஷயம் என்று கேட்டான். அப்புறம் சொல்கிறேன் என்று சொல்லி, சங்கர ராம சுப்பிரமணியம் நம்பர் கேட்டேன். இல்லை என்றான். 

சமயவேலைத் தொடர்பு கொண்டு தக்ஷ்ணாமூர்த்தி கவிதை விக்ரமாதித்யனால் எப்போது எழுதப்பட்டது என்றேன். 

என்ன, ஏதேனும் கலகமா? 

இல்லை சும்மா ஒரு ஸ்கூப் அடிக்கலாம் என்றுதான்... 

சிரித்துக் கொண்டே சொன்னான். 1982ல் அன்னம் வெளியிட்டது. நம்பியின் முதல் தொகுதி, ஆகாசம் நீல நிறம் என்கிற தலைப்பே,தான் தேர்ந்தெடுத்ததுதான் என்றான். இந்தக் கவிதை மட்டுமல்ல நம்பிராஜனிடமும் நெருங்கிப் பழக ஆரம்பித்திருந்த நேரம்தான் 82. நான் நம்பி சமயவேல் கொஞ்சம் அப்புறமாய் துரை (வெள்ளைத் துரை என்கிற வித்யா ஷங்கர் என்கிற இப்போதைய துரை பாரதி. நான் விட்டபின் தருமுவைப் பார்த்துக் கொண்டிருந்த தோஷம் போலும் பெயர் நிலைகொள்ளாது மாறித் தவித்தலைகிறது) ஒன்றாகத் திரிந்த காலம். 

எனது முதல் வாகனமான, சிவப்புநிற BSA SLR சைக்கிளில் டபுள்ஸ் வந்த இலக்கியங்களின் பட்டியல் ஏராளம். குறைந்த தொலைவிற்கு காற்றை ஏற்றிக் கொண்ட கனத்தில் அசோகமித்திரன்கூட வந்திருக்கிறார். ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியின் பாண்டிபஜார் மதிற்சுவரை ஒட்டி இருந்த டீக்கடையில் ப்ளெய்ன் கோல்ட் ஃப்ளேக்கை அவருடன் புகைத்த பின்மதியத்தின் வெயில்கூட நினைவிலிருக்கிறது. 

தராசு முள் போல இருந்தவன் மிதிக்க அரை நெல்லிக்காய் மூட்டைபோல் இருந்த ஜெயகாந்தன் கேரியரின் இருபுறமும் கால் போட்டுக் கொண்டு துரைசாமி சுரங்கப்பதையில் நள்ளிரவில் கரை ஏற்றிய பயிற்சியே மூன்று வருடம் கழித்து பாரதம் சுற்றும் துணிவைத் தந்தது. 

கொதார்தின் ப்ரெத்லெஸ் பார்க்க சைதாப்பேட்டையில் இருந்து சைக்கிள் மிதித்து திருவல்லிக்கேணிக்குப் பறக்கையில் பைக்ராஃப்ட்ஸ் சாலையில் எதிரில் வந்த சைக்கிள்காரன் மோத பின்னால் ஒருபுறமாய் அமர்ந்திருந்த சமயவேலின் கனமான கருப்பு ஃப்ரேம் போட்டக் கண்ணாடி எகிறிற்று எனினும் உடையாமல் தப்பித்ததால் படம் பார்க்க முடிந்தது. வெங்கட்ரங்கம் பிள்ளைத் தெருவின் வடக்குத் தெப்பக்குளத் தெரு இடைவெட்டும் இடத்திற்கு அருகில் இருந்த கொட்டகைக்குப் போக நேர்வழி பீட்டர்ஸ் ரோடுதான் என்றாலும் மீர்சாகிப்பேட்டையின் மாலை நேர நெரிசலைத் தவிர்க்கவேண்டி ராயப்பேட்டை மருத்துவமனையில் பீச்சாங்கையில் திரும்பி பிஆர்ஆர் சன்ஸ் மணிக்கூண்டருகில் சோத்துக் கைக்காய் வலித்து கோஷா ஆஸ்பித்திரிக்கு முன்பாக வெங்கட்ரங்கம் பிள்ளைத் தெரிவில் நுழைகிற திட்டத்துடன் போகையில்தான் சைக்கிள் கேரியரில் ஒருபுறமாய் சரிந்து முகம் நீட்டி வந்த சமயவேலுக்கு சரியான அடிபட்டது. ப்ரெத்லெஸ் படம் பார்த்த அனுபவம் வலியை மறக்கடித்துவிட்டிருக்க வேண்டும். 25 வருடம் கழித்து சிலமாதம் முன்பாக பேசுகையில் அவன் ப்ரெத்லெஸ்ஸையும் நான் விபத்தையும் நினைவுபடுத்திக் கொண்டது நினைவிருக்கிறது. நினைவுகள் எவ்வளவுதான் துல்லியமாக இருப்பினும் தரவுகளாக செல்லுமா? நினைவுகள் வெற்றுத் தகவல்கள் அல்ல, அவை உணர்ச்சிகரமானவை; சார்புகள் கொண்டவை. கவித்துவமானவையாகக்கூட இருக்கலாம் எனினும், நினைவுகள் குற்ற நிரூபணத்திற்காகக்  கூண்டிலேற்றத் தகுதியற்றவை. ஆதாரங்கள் எவ்வளவுதான் உயர்ந்தவை எனினும் கடவுள் போல் முடிவற்ற தர்க்கத்திற்கு இடம்கொடுக்கும் எனில் அவற்றால் என்ன பயன்? வாதப்பிரதிவாத புதைமணலில் கற்சிலையின் பிரதிஷ்டை எப்படி சாத்தியம்? 

இந்தாப் பிடி, இதைப்படி அதைப்படி, இரண்டின் வருஷத்தையும் பார். அப்புறம் பேசு என்பதற்குப் பெயர்தான் ஆப்பு. சரியான ஆப்பு எனில், அசைத்தால் கொட்டை குஞ்சு மட்டுமல்ல குறுமயிர் கூடத் தப்பக்கூடாது.

படைப்போடு வருடங்கள் போடுவது எத்துனை அவசியம். படைப்பு என்பது காலத்தின் பதிவு. பதிப்பகத்தார் படைப்பின் காலத்தைக் குறிப்பிடுவதில் அக்கறை காட்டுவதில்லை என்பது கண்டிக்கத்தக்க விஷயம். காலத்தைக் கடந்து வாழ்கிற விருட்சத்தின் பெருமை உறைந்திருப்பது விஸ்தீரணத்திலா இல்லை அதன் தொன்மையிலா? தொன்மை, விதையின் காலக்குறிப்பில் அல்லவா இருக்கிறது? மரங்களின் உடலில் மாலையாகி நிற்பது நீள அகலமா? வயதல்லவோ? 

ஜோய்வ்ராம் சுந்தரைக் கேட்டேன். கையில் கிடைத்த நா.விச்வநாதனின் தொகுப்பெடுத்து நவகவிதை வரிசை என்கிற அன்னம் வெளியிட்ட 82ன் பட்டியலையே வாசித்தார். பட்டியலில் இருக்கிறது ஆகாசம் நீல நிறம். ஆகாசம் நீல நிறத்தில் இருக்கிறதா தக்ஷ்ணாமூர்த்தி? அதுவல்லவா முக்கியம். ரவுண்டு கட்டி அடிப்பது என்பது வட்டத்தின் விளிம்பை அடிப்பதல்லவே? மையம் வசப்பட மறுத்து நிழல்பிடி விளையாட்டாய் அல்லவா தவிக்க வைத்துக் கொண்டு இருக்கிறது.

அச்சில் இல்லாத புத்தகங்களை சேமித்து நூலகமாக்கும் ஆர்வமுள்ள சாருவின் வாசகர் பாஸ்கர் ராஜாவைக் கேட்டேன்.

சேகரத்தில் ஆகாசம் நீல நிறம் இருக்கிறதா?

அறைக்குப்போய்தான் பார்க்க வேண்டும் சார். விக்ரமாதித்யனின் இரண்டு தொகுப்புகள் உள்ளன. இது இருக்கிறதா என்று தெரியவில்லை.

C.மோகனைத் திரும்பவும் தொடர்பு கொண்டேன்.

மாமல்லன் பெஸண்ட்நகர்லதான் இருக்கேன் ஸ்பேஸஸ்ல முருகபூபதியோட சூர்ப்பணங்கு நாடகத்துக்காக வந்துருக்கேன் அங்க வாங்களேன்.

இல்லை மோகன் எழுதிகிட்டு இருக்கேன்.

அட்றா சக்கை

கதை இல்லை மோகன். ஜெயமோகன் பத்தி....

மாமல்லன் வேஸ்ட் பண்றீங்க உங்க எனர்ஜிய. 

இல்ல மோகன் அப்பிடியே அபேஸ் பண்ணி எழுதி இருக்கறதை சும்மா விடச் சொல்றீங்களா?

இதனால எந்தப் பிரயோஜனமும் இல்லை மாமல்லன்.

பரவால்ல மோகன் இதைக் கண்டுபிடிச்சி எடுத்து எழுதறதே எவ்ளோ சந்தோஷமா இருக்குது தெரியுமா?

ஆ அதுல உங்குளுக்கு ஒரு குஷி! சரி அப்ப செய்ங்க.

ஒரு வேளை நா.முத்துக்குமாரிடம் ஆகாசம் நீல நிறம் இருக்கக்கூடும் என்பதற்காகவே இரண்டாம் முறையாக மோகனைத் தொடர்பு கொண்டது. கண்ணாடி கொண்டு வராததால் மோகனால் அவர் அலைபேசி எண்ணையும் கொடுக்க முடியவில்லை. 

இலக்கிய உலகத்தில் பெரும்பாலோரை விளக்கு வைத்தபின் தொடர்புகொண்டு தகவல் கேட்பது வீண். கவிதையைக் கேட்டால் கட்டுரை எனப் புரிந்துகொண்டு கதைத்தொகுப்பில் தேடிக்கொண்டிருப்பார்கள். அவ்ர்களைச் சொல்லிக் குற்றமில்லை. வாழ்க்கையைத் தெருவோடு போகவிட்டு குப்பிக்குள் துழாவிக்கொண்டிருப்பதை இலக்கிய போதமாய்ப் பெருமிதப்படும் மேதமைப் பேதைகள்.  

மாடன் மோட்சம் - சிகரமா தகரமா? பகுதி ஒன்று எழுத ஆரம்பிக்கும் முன்பாகவே கவிராஜன் சொன்னது:

ஒரு கவிதைய பேஸ்பண்னினதுங்க இந்த மாடன் மோட்சம் கதை.

எந்த கவிதை?

அதான் நெனவு வர மாட்டேங்குது. ந.பிச்சமூர்த்தி மாதிரி யாரோ எழுதின கவிதை அது.

பாவம் கவிராஜன்.விக்ரமாதித்தன் கவிதை பிச்சமூர்த்தியொடும் பிச்சமூர்த்தியின் படம் விக்ரமாதித்தனோடும் சரக்கில் ஐஸாய்க் கரைந்துவிட்டிருக்கிறது போலும். அட, அதுகூட விளக்கு வைத்த பிறகு நடந்த தொலைபேசி உரையாடல்தான். இந்த ஆளை, பண்டார சந்நிதியில் ஜெயமோகன் நடத்தும் ஏதாவதொரு இலக்கிய திவசத்தில் ஒருவராம் அடைத்து வைப்பது ஒன்றுதான் இதற்கான தண்டனை. 

நம்பி வீடு திரும்பியிருக்க வாய்ப்பு உண்டா?

மாமல்லன் பேசறேன். நம்பி வந்துட்டாரா...

இந்தா வந்துகிட்டே இருக்காரு திந்நவேலிலேந்து பஸ்ஸு பிடிக்கையில ஃபோன் பண்ணாரு நான் கோவில்ல இருந்தேன். வந்ததும் ஃபோன் பண்னறேன்.

காத்திருப்பது தவிர வேறு வழியில்லை. அதுவரை என்ன செய்யலாம்?

இப்போது மணி என்ன ஐயையோ வரியாய் ரொக்கத்தில் லட்சங்கங்களையும் வரவுக் கணக்கில் இருந்து பல கோடிகளையும் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு இரும்பு ராட்சதனிடம் நைச்சியமாய்ப் பேசி அவர்களின் கணினியில் இருந்து எடுத்துவந்த எக்ஸெல்லில் இருக்கும் ஐந்து வருடக் கணக்கை விடிவதற்குள் ஒற்றை ஷீட்டில் இணைத்துத் தோண்டிப்பார்க்க வேண்டும். 

இலக்கியத்தில் நடந்த திருட்டை அம்பலப்படுத்துவதால் மோகன் சொன்னது போல் சக்திதான் விரயம். சோற்றுக்குரைப்பு என்று நினைக்காது, முழுமூச்சாய் முனைந்தால் விளைவற்ற இலக்கிய விரயமல்ல செண்ட்ரல் எக்ஸைஸ். தவறுகளைக் கிடுக்கிப் பிடியாய் கச்சிதமாகப் பிடிக்கவும் முடியும், பிடித்தால் கம்பெனி வட்டியுடன் கட்டியே தீரவும் வேண்டும். முன் தீர்மானத்துடனான மோசடி எனில் இணையான தொகையாய் தண்டமும் கட்டியாகவேண்டும். இலக்கியம் போல் வழவழா கொழகொழா சால்ஜாப்பு சொல்லியோ அல்லது அடியில் தாங்கும் அடியாள் படையின் ஆதரவில் வேட்டியை மடியிறுக்கி மேடையேறி மொண்னையான பத்மநாபசாமி திப்பு விவகாரம் போல், எதிர் அடி விழாதபடிக்கு களரி ஆடிக்காட்டவெல்லாம் முடியாது. என்ன, அதிகார உச்சியின் குடுமியை ஆட்டி, இன்னொரு இடமாற்றத்திற்கு வேண்டுமானால் ஏற்பாடு செய்யலாம். 

மரித்தாலும் எழுவேன் என்கிற நம்பிக்கையுடன் நாளைய பயணத்தைத் தொடரவேண்டியதுதான் மனிதப்பிறவியின் ஒரே விதி.

எத்தித் திரியும் இலக்கியத்திற்கு எக்ஸைஸ் எவ்வளவோ மேல்.


மாமிசம் தின்னாமல்
சுருட்டுப் பிடிக்காமல்
பட்டை யடிக்காமல்
படையல் கேட்காமல்
உக்ரம் கொண்டு
சன்னதம் வந்தாடும்
துடியான கருப்பசாமி
இடையில் நெடுங்காலம்
கொடைவராதது பொறாமல்
பதினெட்டாம்படி விட்டிறங்கி
ஊர்ஊராகச் சுற்றியலைந்து
மனிதரும் வாழ்க்கையும்
உலகமும் கண்டு தேறி
அமைதி கவிய
திரும்பி வந்தமரும்
கடந்தகாலக் கைத்தநினைவுகள் வருத்தவும்
எதிர்கால நிச்சயமின்மை உறுத்தவும்

- விக்ரமாதித்யன்

புகழ்பெற்ற ஜெயமோகனின் புகழ்பெற்ற மாடன் மோட்சம் July 10th, 2000 கதையின் கடைசியில் உள்ள குறிப்பு: “1989 ல் எழுதப்பட்டது .முதல் பிரசுரம் – 1991 புதிய நம்பிக்கை மும்மாத இதழில் . திசைகளின் நடுவே தொகுப்பில் உள்ளது .[ கவிதாபதிப்பகம் மறுபிரசுரம் 2002 .]”

பின்குறிப்பு: விக்ரமாதித்யன் வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் அழைத்தார். மேற்கண்ட கவிதை 1982ல் அன்னம் பிரசுரித்த நவகவிதை வரிசையில் வெளியான ஆகாசம் நீல நிறம் தொகுப்பில் உள்ளது என்ப்தை உறுதிப்படுத்தினார். உபரியாக முன்றில் இதழில் மா.அரங்கநாதன் தமது பத்தி போன்ற சிறு குறிப்பொன்றில், தக்ஷ்ணாமூர்த்தி கவிதையையும் ஜெயமோகனின் மாடன் மோட்சத்தையும் ஒப்பிட்டு, ’போகிற போக்கில்’ எழுதிச் சென்றிருக்கிறார் என்பதையும் நம்பிராஜன் குறிப்பிட்டார்.