09 July 2011

மாதக்கூலி (கதையாகவும் கொள்ளலாம்)

சொல்லவா கதை சொல்லவா நடந்தகதை சொல்லவா! - மாதக்கூலி

மாலை கரைந்து இருளத் தொடங்கியிருந்தது எனினும் ஷெட்டோடு ஒடுங்கி உள்ளே நுழைந்த வாயிலில் இருந்து நேராகத் தெரிந்த குஷன்வைத்தப் பெரிய  பழுப்புநிற நாற்காலியே பெரும்பாலும் பெரியமனிதரின் பிறப்பிடம் என்பதுபோல் மயக்க வைத்த தோற்றம்.


விவாகரத்தில் பிரிந்திருந்த நேரம். அலுவலகத்தை அடுத்திருந்த அறையே வீடாகிவிட்டிருந்தது. பொதுவாகவே சிநேகிதத்தின் ஆதார மையமாய் அமைகிற அம்சம் குடி. குடிக்கு அவசியம் இடம். பெண்ணில்லா வீடோ இடமோ பெரும்பாலும் சத்திரம் போல் சுதந்திரமானது. திறந்துகிடக்கும் பொட்டலத்தைத் தேடிவர ஈக்கள் இருப்பதாலேயே மமதையில் மல்லாந்து கிடக்கும் தின்பண்டம்.

கலையார்வம் தலை தெரிக்க நவீன நாடகம் போட்டு அறிவுஜீவி பட்டையம் கிட்டாதா என்று அலைந்த வெள்ளை ஜிப்பா, ஜில்பாதலை, தெற்றுப்பல் மறைக்க தாடிப்புதருக்குள் ஒட்டவைத்த இளிப்பு. 

நவீன நாடகம் பற்றிய எந்தவித போதமும் இன்றி, நாவலை நாடகமாக்குகிறேன் பேர்வழி என்கிற பெயரில் மனோரூபக் கதையை எடுத்துக் கொண்டு நாவலும் இல்லாமல் நாடகமும் இல்லாமல் இயக்கியவனுக்கும் எழுதியவருக்கும் மட்டுமே புளகத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த வெற்று சபா. நடித்தவர்களில் பெரும்பாலோருக்கு பிரசாத மண்டபம் கொண்ட திவ்விய தீர்த்த ஸ்தலம். 

மானசீகக் கதை, மண்டையின் மயிர் முனையைக் கூட ஸ்பரிசிக்க இயலாத மகோன்னதக் கதாநாயகி, அதில் நடிக்கவந்து படைத்த சாதனை, பல பிட்டுகளில் இருப்பதைக் காட்டி எதிர்காலத்தில் இறவாப்புகழ் அடைந்தது மட்டுமே.

எதிலும் பட்டுக் கொள்ளாமல் அவ்வப்போது எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கும் எதைப்பற்றிய கவலையுமற்ற இளம் எழுத்தாளன் அணிந்திருந்த முரட்டுக் கதர் குர்த்தாவிற்குள் மெலிந்திருந்த உடலையும் ஒரு உருவமாய்க் காட்ட ஒட்டிக் கொண்டு இருந்தது கருந்தாடி.  தாடிக்குள் இருந்த முகத்துவாரம் திறந்தால் அமிலவீச்சில் எவன் முகமும் வெந்துபடும் என்பது எவருக்கும் தெரிந்த விஷயம். சிம்மநக விளாறலில் கதுப்பு கிழிபட்டு ரத்தம் ஊறிப் பரவுவதை வேடிக்கை பார்க்க ரம்மியமாகவே இருக்கும் - கன்னம் தம்முடையதாக இல்லாதிருக்கையில். அமிலவீச்சின் மெய்மறப்பில் அகன்று சிரிக்க முண்டிய கூட்டத்தில் பெருசும் ஒன்று.

ஜிப்பாவுக்கும் குர்த்தாவிற்கும் வயது வித்தியாசம் ஐந்துதான் என்றாலும் ஜிப்பாவின் தாடிக்கருப்பு வெளிரத்தொடங்கி பெரிய படிப்பு சார்ந்த தொழில் காரணமாய் சமூகத்தில் பெரிய மனிதனாகி இருந்தான் சிநேகிதன். 

பார்வைக்காய் உட்கார்ந்திருக்கும் அறையில் பல்புகள் எல்லாம் சுவருக்கும் தளத்திற்குமாய்த் திரும்பி, மங்கிய வெளிச்சத்தில் அமர்ந்திருப்பவனை  ஆசனாதிபதி ஆக்கிக் கொண்டிருந்தன. வருபவன் மயக்க கிறக்கத்திலாழ்கையிலேயே மனம் மண்டியிடும் என்பது மடாதிபதிகளின் பாரம்பரிய உத்தி. சனத்தின் பிரமிப்பு எப்போதும் ஆசனத்தின் விஸ்தீரணம் சார்ந்ததுதானே?பார்வைக்குப் பட்டும் படாமல் இன்னதென்று பிடிபடாதிருக்கையில் இருட்டுவெளிச்சம் உருவத்தைப் பேருருவமாக்குகின்றன். இதெல்லாம் அறிந்தவனுக்கு அதிர்ச்சி ஏது?

மாதக் கடைசி சம்பள தினத்தின் மாலை, இருளில் கரைந்த தருணத்தில் அடித்துவிட்டு வந்த பீர்களில் தளும்பியவண்ணம் உள்ளே வந்தன இரண்டு உருவங்கள். அதிலொன்று பாலக்காட்டு அச்சுப்பிச்சு அதிகாரி. மற்றது அதீத பைத்தியம். 

ஹெஹ்ஹெ எப்படி இருக்கேங்க மாமல்லன்?

என்னது!கூலிக்காரனாட்டம்,மாசக்கூலி வாங்கின ஒடனே நேரா ஒயின்ஷாப்பா?

எடுத்ததுமே இந்த விளாறல் விளாறினால், அச்சுபிச்சுதான் என்றாலும் அடிக்கக் கை ஓங்காதா என்ன?

இடிப்பதுவா இல்லை இடம் தந்து, உருளையான உருவத்தை சாராயத்தில் உருட்டி விளையாடிப் பார்ப்பதுவா எது உண்மையான நட்பு?