26 July 2011

கடவுளும் மனிதனும்

சட்டமிட்ட ஜன்னலில்
சித்திரங்களை மாயாஜாலமாய்
வரைந்துகொண்டிருந்தார் கடவுள்

’வரைபவர் கடவுள் 
ரசிப்பவன் மனிதன்’
என்று வகுக்கப்பட்டிருந்தது சட்டம்

கடவுளாக,
கனவுகண்ட மனிதன்
சட்டத்தை விஸ்தரிக்க
ஜன்னலைப் பிரித்தான்.
காணாமல் போயிற்று வரைதுணி.

தன்னம்பிக்கையுடன்
ஓவியத்தை மனத்திரையில்
வரையத் தலைப்பட்டான்.

இல்லாத சட்டகத்தில்
தொடங்குவது எங்கு?
முடிப்பது எப்படி?

எதற்கும் இருக்கட்டுமென 
எழுதி வைத்தான் கடவுள் என்று.

’வரைபவர் கடவுள் 
அவரை வரைந்தவன் மனிதன்’
என்று வகுக்கப்பட்டது சட்டம்.