03 July 2011

பூ

இரண்டுநாள் கழித்து வா
நாளைக்கு வா
என்கிற
நாஸூக்கு வார்த்தைகளை
பால்கனிப் பாதுகாப்புத் தடுப்பில் 
மார்பழுந்த
நிலம் நோக்கி உதிர்க்கும்
மாடி வீட்டுப் பெண்களிடம்,

“ஏங்க்கா ஏற்கெனவே வாங்கிட்டியா?”
சாரு வரசொல்லவே 
வாங்கியாந்ட்டாங்களாக்கா?”
என அண்ணாந்து மல்லுகட்டி,
”ஒரு தடவை சொன்னா புரியாதா”வில்
தலைதட்டி
நமுட்டுச் சிரிப்புடன்
நாக்கு கடித்து
தினந்தோறும் நாணும்,
இருட்டியபின்
வந்து போகிற பூக்காரி,
உயர்ந்த மாடிகளுக்கு
லிஃப்டாக உபயோகப்படும்,
மணம் சுமந்த கூடைக்குக் கீழாகப் 
பள்ளிச் சீருடையில் 
ஓட்டமும் நடையுமாய்க் 
கூட வரும் மகனிடம்
சொல்லிக் கொண்டிருந்தாள்.

எந்த வீட்டிற்குப் போனாலும்
பேசுகிற பாசை என்னவெனக் கவனித்து
வார்த்தைகளை
மனதில் நிறுத்திக் கொள்ளப் பழக வேண்டும்
அப்போதுதான்
எந்த ஊருக்கும் போய்
பிழைத்துக் கொள்ள முடியும்

அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்கு வெளியில்
நியான் விளக்குகளால் 
நெடுந்தூரம் கூவி
புன்னகையுடன்
பிளாஸ்டிக் அட்டை தேய்த்து
பூவும் விற்கத் தொடங்கி இருந்தான்
சங்கிலித் தொடர் ராட்சதன்.