04 July 2011

நான் பிறந்தது தீர்ப்பு சொல்வதற்காக அல்ல நேசிக்க - சுகுமாரன்

பெருங்கவிஞனின் இயல்புகளாக மூன்று அம்சங்களைக் குறிப்பிடுகிறார் டி.எஸ்.இலியட். அவை: எண்ணிக்கைப் பெருக்கம்,வித்தியாசம், சீரான படைப்புத்திறன். பாப்லோ நெரூதாவை விட இலியட்டின் மதிப்பீட்டுக்குப் பொருத்தமான வேறொரு நவீன கவிஞர் இருப்பதற்கான வாய்ப்பில்லை. இந்த நோக்கில்தான் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் தனது நேர்காணலொன்றில் 'இருபதாம் நூற்றாண்டில் எந்த மொழியிலும் மகத்தான கவிஞர் நெரூதாதான்' என்று குறிப்பிட்டார்.

பதின்மூன்றாம் வயது தொடங்கி அறுபத்தொன்பதாம் வயதில் மறையும்வரை கவிதையின் பேரூற்றாக இயங்கியவர். தூதர், அரசியல்வாதி, மக்கள் உரிமைக்காகப் போராடிய போராளி என பிற ஈடுபாடுகளுடன் செயல்பட்டவர்.எனினும் அவரது முதன்மையும் முழுமையுமான அக்கறை கவிதையாகவே இருந்தது.கவிதையைத் தனது செயல்பாடாக நம்பினார். வாழ்க்கையின் எல்லாத் தருணங்களையும் உயிரின் எல்லா சலனங்களையும் இயற்கையின் எல்லா வியப்புகளையும் வரலாற்றின் எல்லா நிகழ்வுகளையும் கவிதையால் எதிர்கொண்டார்.'மொழியில் மைதாஸ் அரசனைப்போன்றவர் பாப்லோ நெரூதா. அவர் தொட்ட எல்லாமும் கவிதையாக மாறியது' என்று கார்லோஸ் ஃபுவான்டிஸ் கூறுவதில் பெருமிதம் சார்ந்த மிகையிருக்கிறது.பொய்யில்லை. தனது சமகாலத் தலைமுறையைப் பாதித்தது போலவே மறைந்து முப்பதுக்கு மேற்பட்ட ஆண்டுகளான பின்னும் புதிய தலைமுறையினாரால் வாசிக்கவும் போற்றவும்படுகிறார் என்பதில் பெருமிதம் கொள்ள வாய்ப்பில்லாமலில்லை. 

ஒன்று - வாழ்க்கை

பாப்லோ நெரூதா என்ற ரிக்கார்டோ எலிஸெர் நெஃப்தாலி ரேயஸ் பஸ்வால்தோ சிலியின் மத்தியப் பகுதி நகரமான பர்ராலில் பிறந்தார். பிறந்த நாள் 12 ஜூலை 1904. தகப்பனார் ஜோஸ் தெல் கார்மன் ரேயஸ் மொரலேஸ் ஒரு ரயில்வே பணியாளர். தாய் ரோஸா நெஃப்தாலி பஸ்வால்தோ ஒபாஸோ பள்ளி ஆசிரியை. நெஃப்தாலி பிறந்த சில நாட்களிலேயே காசநோயின் தீவிரத்தால் ரோஸா மரணமடைந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு கார்மன் ரேயஸ் மறுமணம் செய்துகொண்டார். குடும்பத்துடன் தெமுகோ நகரத்துக்குக்
குடியேறினார். நெஃப்தாலியின் பிள்ளைப்பருவமும் இளமைப்பருவமும் தெமூகோவில்தான் கழிந்தது. உள்ளூர் பெண்கள் பள்ளியின் தலைமையாசிரியையாக இருந்த கவிஞர் காப்ரியேலா மிஸ்ட்ரால் பையன் நெஃப்தாலியின் இலக்கிய ஆர்வத்துக்கும் எழுத்து முயற்சிகளுக்கும் தூண்டுதலாக இருந்தார். பதின்மூன்றாம் வயதிலேயே நெஃப்தாலி உள்ளூர் நாளிதழான 'லா மனானா' ( காலை) வில் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தான். அதே பத்திரிகையில் தான் முதல் கவிதையும் வெளிவந்தது. 1920 வாக்கில் 'செல்வா ஆஸ்த்ரால்' என்ற பிரசித்தி பெற்ற இலக்கிய ஏட்டில் நெஃப்தாலி தொடர்ந்து கவிதைகளை எழுதினான். கலைஞர்கள், கவிஞர்களெல்லாம் சமூகத் திரிபுகள், உதவாக்கரைகள் என்று கறாராக நம்பிய தந்தையின் கண்டனத்திலிருந்து தப்புவதற்காக நெஃப்தாலி வைத்துக்கொண்ட புனைபெயர் பாப்லோ நெரூதா. செக்கோஸ்லாவியக் கவிஞரான யான் நெரூதாவின் நினைவாக வரித்துக்கொண்ட பெயர். இந்தப் புனைபெயரில்தான் முதலாவது கவிதைத்தொகுப்பான 'அந்தி வெளிச்சம்' (கிரெபஸ்குலாரியோ) வெளியானது. அச்சுக்கூலிக்காக வீட்டுச் சாமான்கள் சிலவற்றையும் அப்பா வாங்கிக்கொடுத்திருந்த கடிகாரத்தையும் விற்றான். 'கவிஞன் என்று பொது அரங்கில் அறிமுகப்படுத்தப்படும்போது போட்டுக்கொள்வதற்காக வைத்திருந்த கோட்டையும் கவிதைக்காக விற்கவேண்டிவந்தது.'

1924ஆம் ஆண்டு வெளியான 'இருபது காதல் கவிதைகளும் ஒரு நிராசைப்பாடலும்' தொகுப்பு பாப்லோ நெரூதா என்ற கவிஞனை உலகத்துக்கு அறிமுகப்படுத்தியது. அந்த அறிமுகம் மாபெரும் புகழுக்கு இலக்காக்கியது. இன்றும் நெரூதாவின் அதிகம் சிலாகிக்கப்படுவதும் அதிகப் பதிப்புகள் வெளியானதும் அதிகமான மொழிகளில் பெயர்க்கப் படுவதுமான நூல் அவரது இந்தப் இருபதாம் வயதுப் படைப்புத்தான். 

இக்காலப் பகுதியில் நெரூதா சாந்தியாகோவிலுள்ள சிலி பல்கலைக்கழகத்தில் 
பிரெஞ்சுமொழியையும் ஆசிரியப் பயிற்சிக்கல்வியையும் கற்றுக்கொண்டிருந்தார். இருபத்து மூன்றாம் வயதில் சிலி அரசால் பர்மா நாட்டின் ( இன்றைய மியான்மர்) தூதராக நியமிக்கப்பட்டார். கௌரவமான பதவி. ஆனால் பொருளாதாரரீதியில் ஆதாயமற்ற வேலையாக இருந்தது. 'எப்போதுமே தன்னை ஒரு ஆதரவற்ற அநாதையாகக் கருதி வந்த நெரூதா'வுக்கு அயல் நாட்டு வாசம் தனிமையுணர்வை அதிகமாக்கியது. 1927 முதல் 35 வரையிலான எட்டாண்டுக்காலம் இலங்கை, ஜாவா, சிங்கப்பூர் போன்ற கீழை நாடுகளிலும் ப்யூனஸ் அயர்ஸ், பார்ஸிலோனா, மாட்ரிட் ஆகிய நகரங்களிலும் பணியாற்றினார்.

'தனிமைத் துயரங்களின் காலம்' என்று நெரூதா கசந்துகொள்ளும் இந்த கட்டத்தில்தான் 'பூமியில் வசிப்பிடம்' கவிதைகள் உருவாக்கப்பட்டன. இறுக்கமும் சர்ரியலிசத்தன்மையும் கொண்ட இந்தக் கவிதைகள் நெரூதாவின் இலக்கிய முயற்சிகளின் திருப்புமுனைச் சாதனையாகவும் குறிப்பிடப்பட்டன. ஏறத்தாழ இந்தக் கால அளவில்தான் ஃபெடரிகோ கார்சியா லோர்க்கா, மிகயில் ஹெர்னாண்டஸ், ரஃபேல் ஆல்பர்ட்டி முதலான பலரோடு நெரூதாவுக்கு தோழமையும் நெருக்கமும் உருவாயிற்று. உற்சாகமும் படைப்பூக்கமும் ஜொலித்து நின்ற அந்த நாட்கள் வெகு விரைவில் இருண்டன.

1936 இல் ஸ்பானிய உள்நாட்டுப் போர் வெடித்தது. லோர்க்கா படுகொலை செய்யப்பட்டார். பாசிச அராஜகங்கள் பொதுமக்கள்வாழ்க்கையை அவலமாக்கின. தன்னுணர்வும் சர்ரியலிச அணுகுமுறையும் மையமாகவிருந்த நெரூதாவின் படைப்பு மனம் மாற்றம் கண்டது. அதுவரை அரசியல் சார்ந்த நிலைப்பாடு மேற்கொள்ளாமலிருந்தவர் குடியரசு இயக்கத்தின் ஆதரவாளரானார். அதன் காரணமாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதே காலப்பகுதியில் எழுதி வெளியான 'என் இதயத்தில் ஸ்பெயின்' கவிதைத் தொகுப்பு நெரூதாவின் பார்வை மாற்றத்துக்குத் துலக்கமான உதாரணம். அரசியல் சார்பும் சமூகப் பிரச்சனைகள் குறித்த அக்கறைகளும் கவிதைப் பொருளாயிருந்தன. யுத்தத்தால் அடைக்கப் பட்டிருந்த குடிமக்களின் நாவில் நெரூதாவின் கவிதைகள் மொழியாயின.

1939 இல் ஸ்பானியத் தூதராக பாரீஸிலும் குறுகிய நாட்களுக்குப் பின்பு பதவி உயர்வு பெற்று மெக்ஸிகோவிலும் பணியமர்த்தப்பட்டார் நெரூதா. 'சிலியின் பொதுப் பாடல்' (காண்டோ ஜெனரல் ஆஃப் சிலி) என்ற பெயரில் எழுதித் தொகுத்து வைத்திருந்த கவிதைப் படைப்பை அவர் விரிவாக்கம் செய்யத் தொடங்கியது மெக்ஸிக வாழ்க்கையின் பின்னணியில்தான். சிலியின் பொதுக்காண்டமாக இருந்த படைப்பு தென் அமெரிக்கக் கண்டத்தின் பொதுக்காண்டமாகப் பரந்தது. ஒரு மொத்தநிலப் பரப்பின் இயற்கை, அதன் மக்கள், அதன் வரலாற்று விதி ஆகியவற்றை காவியப் பார்வையில் நிறுவிச்செல்லும் முயற்சி. 'பொதுக் காண்டம்' (காண்டோ ஜெனரல்) நீண்ட காலத் திருத்தங்களுக்கும் அவ்வப்போதான சேர்க்கைகளுக்கும் பின்னர் 1950 இல் வெளியிடப்பட்டது. மெக்ஸிகோ உட்படப் பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில் வரவேற்புக்கு உள்ளான இந்நூல் நெரூதாவின் சொந்த நாடான சிலியில் தடை செய்யப்பட்டது. 

பாப்லோ நெரூதா 1943 இல் நாடு திரும்பினார். இரண்டாண்டுகளுக்குப் பிறகு குடியரசுக் கட்சியின் செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிலி கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினருமானார்.1947 இல் அப்போதைய சிலி அதிபர் கோன்சாலஸ் விடேலா, சுரங்கத் தொழிலாளர்களுக்கு எதிராக மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கையைக் கடுமையாக விமரிசித்தார். விளைவு? சொந்த மண்ணிலேயே இரண்டாண்டுகள் தலைமறைவு வாழ்க்கை. தொடர்ந்து நாட்டைவிட்டு ரகசியமாக வெளியேறினார். (இந்த அனுபவத்தை தனது நோபல் உரையில் விரிவாகப் பேசுகிறார் நெரூதா). விடேலா எதிர்ப்பு அணியின் வெற்றிக்குப் பின்னர் 1952 இல், வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த நெரூதா தாயகம் திரும்பினார். இந்தத் தலைமறைவுப் பருவத்தில் அவர் எழுதியவற்றில் அரசியல் செயல்பாட்டாளர் என்ற அடையாளமும் பதிந்திருந்தது. 'திராட்சையும் காற்றும்' (1954) தொகுப்பு நெரூதாவின் தலைமறைவுக் கால நாட்குறிப்பு என்றே குறிப்பிடப்படுகிறது. 1953 இல் நெரூதாவுக்கு 'ஸ்டாலின் விருது' வழங்கப்பட்டது.

'எக்ஸ்ட்ராவகாரியோ' (1958) தொகுப்பு பாப்லோ நெரூதாவின் இன்னொரு பரிமாணத்தை முன்வைத்தது. சார்புநிலை அரசியலால் மனங்கசந்து போன கவிஞனின் துக்கச் சாயலையும் பொதுவான பாடுபொருள்களில் அடைக்கலம் தேடுகிற சுபாவத்தையும் வெளிப்படுத்தியது.' இப்போது என்னைச் சும்மா விடுங்கள். இப்போது நானில்லாமல் செயல்படக் கற்றுக்கொள்ளுங்கள்' என்ற இறைஞ்சுதல் அதிலிருந்தது. அன்றாட நடப்புகள் சார்ந்தவையும் தனது நம்பிக்கைகளை மறு விசாரணைக்கு உட்படுத்துபவையுமான கவிதைகளை வாசகனிடம் பகிர்ந்து கொண்ட தொகுப்பாக இருந்தது இந்நூல். காதல் கவிதைகளுக்குப் பிறகு சாதாரண வாசகர்களிடம் நெரூதாவை நெருங்கச் செய்த தொகுப்பும் இதுதான். 

தொடர்ந்து வந்த ஆண்டுகளில் பாப்லோ நெரூதா விரிவாகப் பயணம் செய்தார்.
அதிகமாக எழுதினார். சிலியின் பசிபிக் கடற்கரைப் பிரதேசமான ஐலா நீக்ராவில் குடியமர்ந்தார். நீண்ட கால அரசியல் குழப்பங்களுக்குப் பின்பு சிலியில் மக்கள் ஆதரவுடன் ஓர் ஆட்சியமைப்பு உருவாகும் காலநிலை தோன்றியிருந்தது. சிலிநாட்டுத் தொழிலாளர்களும் ஜனநாயக விசுவாசிகளும் அதிபர் தேர்தலில் போட்டியிடுமாறு தங்கள் கவிஞரை வற்புறுத்தினர். நண்பரும் தோழருமான சால்வதோர் அலெண்டேவுக்குப் போட்டியாளராக விரும்பாத நெரூதா அந்தப் பொது வலியுறுத்தலை ஏற்றுக்கொள்ள மறுத்தார். 1970 தேர்தலில் அலெண்டே தலைமையில் ஆட்சியமைந்தது. சிலியின் தூதுவராக நியமனம் பெற்ற நெரூதா பாரீஸ் வாழ்க்கைக்குத் திரும்பினார். 1971 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு 'ஒரு கண்டத்தின் விதியையும் மக்களின் கனவுகளையும்' கவிதைகளில் நிரந்தரமாக்கிய பாப்லோ நெரூதாவுக்கு வழங்கப்பட்டது. 

பின்வந்த நாட்களில் வரவிருக்கும் இருண்ட காலத்தின் காலடியோசைகளைக்
கேட்டிருந்திருக்கிறார் நெரூதா. ஒன்று - சொந்த மரணத்தின் வருகை. இரண்டுமுறை உடல் நலம் சீர்குலைந்ததைத் தொடர்ந்து பரிசோதித்ததில் புற்றுநோயின் கால்கள் அவரது இரத்தத்தில் ஊரத் தொடங்கியிருப்பது புலனாயிற்று. இரண்டாவது - அலெண்டேவின் அரசைக் கவிழ்க்க நகரும் ராணுவத்தின் அணிவகுப்பு. 

1973 செப்டம்பர் 11. அலெண்டேயின் குடியரசு ராணுவத்தால் கவிழ்க்கப் பட்டது. அலெண்டே கொல்லப்பட்டார். ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலவரத்தில் கொல்லப்பட்டனர். நோய் முற்றிச் சிகிச்சையிலிருந்த நெரூதா இந்தத் தகவல்களால் சிதறுண்டுபோனார். அவருக்குரிமையான மூன்று வீடுகளும் சோதனை என்ற பெயரால் ராணுவத்தால் சூறையாடப்பட்டன. 'தேடுங்கள். உங்களுக்கு அபாயம் விளைவிக்கக் கூடிய ஒரு ஆயுதம் இங்கே இருக்கிறது. கவிதை' என்று அவர்களிடம் சீறினார் நெரூதா. உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து சாந்தியாகோவிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

செப்டம்பர் 23ஆம் தேதி. ஞாயிறு. இரவு பத்தரை மணி. மருத்துவமனைப் படுக்கையில் கிடந்த நெரூதாவின் உடல் நடுங்கியது. 'நான் போகிறேன்' என்ற வாசகத்துடன் உயிர் சலனமற்று அடங்கியது. நெரூதாவின் இறுதி ஊர்வலம் சிலியின் சர்வாதிகாரி அகஸ்டோ பினோஷேவுக்கு எதிரான மக்கள் எழுச்சியின் தொடக்கமாயிற்று. 

இரண்டு - கவிதை

'மனிதனுக்குள்ளிருந்து எழும் அக அழைப்பே கவிதை.அதிலிருந்தே பிரார்த்தனைகளும் துதிப்பாடல்களும் மதத்தின் உள்ளடக்கங்களும் உருவாயின' என்ற நம்பிக்கையை 'நினைவுக் குறிப்புகளி'ல் பதிவுசெய்கிறார் பாப்லோ நெரூதா. ஸ்பானியக் கவிதை மரபின் நாடியோட்டத்தின் துடிப்பாக இந்த வாசகத்தைக் கருதலாம்.கூடவே நெரூதாவின் கவிதைக்கான இடத்தை நிர்ணயிப்பதாகவும் கொள்ளலாம்.

லத்தீன் அமெரிக்கக் கவிதையில் 'நவீனத்துவ'த்தின் (மாட்ர்னிஸ்மோ) உச்ச கட்ட வேளையில் கவிஞனாக அறிமுகமாகிறார் நெரூதா. பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஸ்பானிய மொழி அதீத அலங்காரங்களின் கிடங்காக இருந்தது. சிம்பலிசத்தால் உந்துதல் பெற்ற ஸ்பானியக் கவிஞர்களான ரூபன் தாரியோ (நிகராகுவா) போன்றவர்கள் மொழியைத் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.ஓர் அர்த்தத்தில் இது 'தூய கவிதை' இயக்கம். நவீன ஆங்கிலக் கவிதைக்கு டி.எஸ்.இலியட் ஆன்மீகச் சாயலை வழங்கியதுபோல ரிக்கார்டோ மோலிநாரி (அர்ஜென்டீனா), அல்ஃபான்சோ ரேயஸ் (மெக்ஸிகோ) ஆகியோர் ஸ்பானியப் புதுக்கவிதையில் ஆன்மீகத்தன்மையை ஏற்றினார்கள். காலப் போக்கில் இது ஜப்பானியக் கவிதைவடிவங்களின் நகலாகவும் புத்த தத்துவச் சிந்தனையின் வியாக்கியானமாகவும் கிரேக்க, ஸ்கான்டிநேவிய புராணிகங்களின் சொல்லாடலாகவும் குறுகின.

நவீனத்துவத்தின் இரண்டாம் கட்டம் 'புத்துலக இயக்கம்' (முண்டோ நோவிஸ்மோ). கலை, கலைக்காக என்ற வாதத்தைப் புறக்கணித்து கவிதையை அன்றாட வாழ்வின் செயலும் உந்துதலுமாகக் கண்ட கவிஞர்களான என்றிச் மார்டினெத் (மெக்ஸிகோ), ஹெட்டோ இ ரீஸிங் (உருகுவே), ஹோலே சாந்தோஸ் (பெரூ) ஆகியோர் இந்தப் போக்கை முன்னெடுத்துச் சென்றனர். இந்தப் புத்தியக்கம் புதுப்புது மரபுகளையும் தோற்றுவித்தது. எளிய நடைக்கு முக்கியத்துவம் கற்பித்த 'ஸென்டிலிஸ்மோ', ஓவியக்கலையின் பாதிப்பில் உருவான 'கியூபிஸ்மோ", மொழியியல் சோதனைகளை மேற்கொண்ட அதி நவீனம் (அல்ட்ராயிஸ்மோ), கரீபிய, பிரேஸில் பிரதேசங்களில் செல்வாக்குப் பெற்றிருந்த கறுப்பு இலக்கியம் (நெக்ரிஸ்மோ) எனப் பல்வேறு இயல்புகளின் பொதுக் கவிதைமொழி உருவானது. இந்த இரண்டாம் கட்டத்தின் உச்சத்தில் ஸ்பானியக் கவிதையில் கலகக் குரலாக ஊடுருவினார் பாப்லோ நெரூதா. 

புரியாத்தன்மையும் மேற்குடிச் சாயலுமுள்ள கவிதைப் போக்குகளுடன் அவரால் ஒருபோதும் உடன்பட முடியவில்லை. கவிதை வடிவத்தில் எளிமையையும் ஜனநாயகத்தன்மையையும் நிலை நிறுத்திய வால்ட் விட்மன்தான் அவருடைய முன்னோடியாக இருந்தார். ''ஸ்பானிய மொழியில் எழுதும் கவிஞனான நான் ஸெர்வான்டிசைவிட வால்ட் விட்மனிடமிருந்து அதிகமாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன்'' என்று அமெரிக்கப் பயணமொன்றின்போது நெரூதாவே குறிப்பிட்டார். எனினும் எல்லாவிதமான கவிதைப் போக்குகளையும் வடிவங்களையும் தனது படைப்பாக்கத்தில் ஈடுபடுத்தியிருக்கிறார். ஆரம்பகாலக் கவிதைகளில் சர்ரியலிசத்தன்மை. பின்பு தன்னுணர்வுப் பாடல்களின் கூறுகள். காவியத்தின் உருவம். விடுகதை. இசைப் பாடல்கள். உருவகக் கதைகள்.மேடைப்பேச்சு. கோஷங்கள். நேரடியான எளிய நடை. இவற்றில் எதையும் கவிதையாக்கத்திலிருந்து விலக்கி வைக்கவில்லை. இவை எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டிருந்த போதும் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் நடைமுறையாளரென்றோ, ஒரு பிரத்தியேகப் போக்கின் ஆதரவாளரென்றோ வகைப்படுத்த முடியாதபடி பன்முகத்தன்மையும் பல குரல்மொழியும் கொண்டிருந்தார். அவர் சில சமயம் பழைய வரிகளைச் செப்பனிட்டுப் புதுப்பித்தார். சில சமயம் சக கவிஞர்களுக்கு இணையாகச் சிந்தித்தார். சில சமயம் இன்னும் பிறக்காத கவிதையின் பேற்று நோவை அனுபவித்தார். 'எனது கவிதைகளுக்கு ஏதேனும் பண்பு உண்டென்றால் அது அவற்றின் உயிருள்ள தன்மைதான்' என்று ஒப்புதல் செய்துமிருக்கிறார்.

1935 இல் 'தூய்மையற்ற கவிதைக்காக' என்ற பெயரில் நெரூதா ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். அவரது கவிதையின் அழகியலாக இதை ஏற்பதில் தவறில்லை. ''அமிலத்தால் ஏற்பட்டதுபோல கைப்புழக்கத்தால் தேய்மானம் வந்த, வியர்வையும் புகையும் கறைப்படுத்திய, லில்லிப் பூவும் சிறுநீரும் மணக்கிற, சட்டத்துக்குட்பட்டும் விரோதமாகவும் நாம் செய்யும் செயல்களின் வித்தியாசங்கள் பதிந்த கவிதை, உணவுக்கறையும் அவமானமும் பற்றிக்கொண்டிருக்கும், ஒடுக்குகளும் கவனங்களும் கனவுகளும் உறக்கமின்மையும் ஆரூடங்களும் நட்பு-பகை அறிவிப்புகளும் மடத்தனங்களும் பதற்றங்களும் நாடோடித்தனங்களும் அரசியல் நம்பிக்கைகளும் எதிர்ப்புகளும் சந்தேகங்களும் நிச்சயப்படுத்தல்களும் புகழ்ச்சிகளும் ஒன்றிணைந்த உடல்போல, ஒரு பழந்துணிபோல, தூய்மையற்ற கவிதை'' - இவை அந்தப் பிரகடனத்தின் சில வரிகள். வரிகளின் எடுத்துக்காட்டுகளை நெரூதாவின் கவிதையுலகிலிருந்து தேர்ந்தெடுப்பது எளிது என்பது பிரகடனத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறது. நெரூதாவின் கவிதையியலை இலான் ஸ்டாவன்ஸ் மூன்று சொற்களில் வகுக்கிறார். எளிமை, நேர்மை, திடநம்பிக்கை. 

பாப்லோ நெரூதாவின் கவிதைப்பரப்பை பொருளடிப்படையில் ஆறு பகுதிகளாகப் பிரித்துவிடலாம். காதல்,தனிமை, இயற்கை, மரணம்,அரசியல், வரலாறு. இந்தப் பெரும் பிரிவுகளை மேலும் பகுத்து அவருடைய கவிதைப்பரப்பை அளந்தும்விடலாம். அப்படி ஒரு முயற்சி வெற்றி பெறுமானால் அது ஒரு மாபெரும் வாழ்க்கையை அளந்து முடித்ததற்கு ஒப்பாகும். கவிஞனாக அல்லாத வாழ்க்கையையும் வாழ்க்கை சாராத கவிதையையும் நெரூதா யோசித்ததுகூட இல்லை. 

மூன்று - அரசியல்

நெரூதா கவிதையின் உள்ளார்ந்த கூறுகளிலொன்று அரசியல். தன் கவிதைகளிலிருந்து அரசியலைப் பிரிக்க விரும்புகிறவர்கள் உண்மையில் கவிதையின் எதிரிகள் என்று கருதினார். அவரை மக்களின் கவிஞராக்கியதும் மட்டரகமான பிரச்சாரகர் என்ற தூற்றுதலுக்குள்ளாக்கியதும் அவரது அரசியல் ஈடுபாடுதான். ஆனால், அந்த ஈடுபாடு மனிதன் என்ற நிலையில் அறவுணர்வையும் கவிஞன் என்ற வகையில் எந்த அனுபவமும் தீண்டத்தகாததல்ல என்ற உரிமை பாராட்டலையும் சார்ந்தது. 

ஆரம்ப காலக் கவிதைகளில் வேட்கை மிகுந்த காதலனாகவும் தனிமையின் இருளில் கால் பதியாமற் தவித்தவனாகவும் புலப்பட்ட நெரூதாவை அரசியல் சார்பாளராக்கியது ஸ்பானிய யுத்தமும் ஃபாசிச அடக்குமுறைகளும். மனித உயிர்கள் மீதான பரிவும் மனிதச்சூழல் நிர்மூலமாக்கப்படுவதில் மூண்ட கோபமும் அவரை மாற்றின. ஜனநாயக ஆதரவாளராக இருந்ததன் காரணமாக துன்புறுத்தப் பட்டார். நாட்டிலிருந்து விரட்டப்பட்டார். 'எனது பாடல்களைப் பாடவும் நேசிக்கவும் நான் வதைபடவேண்டியிருந்தது. போராடவேண்டியிருந்தது. பூமியில் என் பங்கு வெற்றிகளையும் தோல்விகளையும் அடைந்தேன். ரொட்டியையும் இரத்தத்தையும் சுவைத்தேன்.இதைவிட ஒரு கவிஞனுக்கு என்ன வேண்டும்?' என்று கர்வத்தோடு பின் நாளில் கேட்டார்.

இடதுசாரி அணுகுமுறையுள்ள கவிஞராக அறியப்படிருந்தாலும் கட்சியின் அடையாள அட்டையுள்ள கம்யூனிஸ்டாக ஆனது 1945 இல். அர்ஜென்டீனாவைச் சேர்ந்த ஓவியரான டேலியா தெல் காரில்தான் அவரை உற்சாகப்படுத்தி அரசியலில் ஈடுபடச் செய்தார். பாப்லோ நெரூதாவின் அரசியல் அணுகுமுறையில் இரண்டுவிதமான பார்வைகள் இருந்தன. ஒன்று: மார்க்ஸியத்தின் மானுடக் கனவு. மற்றது: இடதுசாரி அரசியலின் சித்தாந்த இறுக்கம். முதலாவது பார்வையை முன்வைத்த நெரூதா எல்லாராலும் நேசிக்கப்பட்டார். இரண்டாவது பார்வைகொண்ட நெரூதா இலக்கிய ஆர்வலரால் சந்தேகிக்கப்பட்டார். ஆனால், அவர் ஒருபோதும் சித்தாந்தத்தின் கைதியாக இருக்கவில்லை. 

கம்யூனிசம் அல்லது மார்க்சியம் மக்களை நம்புவதற்கான தூண்டுதலை நெரூதாவுக்கு வழங்கியது. வரலாற்றை அடித்தள மனிதனின் பங்களிப்பாகப் புரிந்துகொள்ளக் கற்பித்தது. போராடுவதன் மூலமே வாழ்க்கையைப் பொருளுள்ளதாக்க முடியும் என்று தெளிவாக்கியது. இந்த விளக்கத்தின் சான்றுகளை அவரது கவிதைகளில் எளிதில் கண்டறிய முடியும். 

கம்யூனிச சித்தாந்தத்தின் இறுக்கம் நெரூதாவை கீழ்ப்படிதலுள்ள கட்சிகாரனாக மட்டுமே அங்கீகரித்திருந்தது. 'எதையும் யாரையும்விடவும் கட்சி பெரிது' என்று ஒப்பிக்கச் செய்திருந்தது. இந்தப் பார்வை காரணமாக கடும் விமரிசனங்களுக்கு ஆளானார் அவர். 

ஸ்டாலின் மீதான நெரூதாவின் பற்று ஒரு கட்சிக்காரனின் விசுவாசம். அதை ஒரு வெகுளித்தனமான மகிழ்வோடு அவர் கொண்டாடிக்கொண்டுமிருந்தார், 1956 வரை. இருபதாவது கட்சிக் காங்கிரஸில் ஸ்டாலின்யுகத்தின் பாதகங்களையும் கொடுமைகளையும் குருஷேவ் வெளிப்படுத்தும்வரை. சோவியத் யூனியன் மீதான மோகமும் ஸ்டாலின் மேலுள்ள விசுவாசமும் உலுக்கப்பட்டது. நெரூதா குலைந்து போனார். 'சாத்தானும் கடவுளும் ஒரே உடலில் குடியிருக்கும் நபர்' என்று ஸ்டாலினைக் குறிப்பிட்டார். இதன் எதிர்வினை அவரது படைப்பாக்கத்தில் நேர்ந்த மாற்றத்தில்தான் புலப்பட்டது. சித்தாந்த மோசடியின் கசப்புகளைத் துடைக்க அன்றாட வாழ்வின் நிகழ்வுகளையும் தனது நம்பிக்கைகளின் விமரிசனத்தையும் மையமாகக்கொண்ட கவிதைகளை எழுதுவதில் கவனத்தைத் திருப்பினார். ( 'எக்ஸ்ட்ராவகாரியோ' தொகுப்பு உதாரணம்). சோவியத்தின் எடுபிடி, ஸ்டாலினின் மூடவிசுவாசி என்ற சிறப்புப் பெயர்கள் அவர் மீது தொடர்ந்து ஒட்டவைக்கப்பட்டே வந்தன. அது பற்றி வருத்தங்கள் இருப்பினும் மார்க்சிய அடிப்படையிலிருந்து விலகுவதை அவர் ஏற்கவில்லை. இறுதிவரை மார்க்சியத்தை அவர் கண்டது அறவுணர்வின் ஆதாரப் புள்ளியாக. இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவை நிறுவும் ஆன்மீகக் கவிதைகளை எழுதவோ காதலையும் காமப் பரவசத்தையும் கொண்டாடிக்கொள்ளும் மொழியை உருவாக்கவோ கவிதையில் புதிய சோதனைகளை மேற்கொள்ளவோ அவரது சார்புநிலை தடையாகவில்லை. கவிஞனாக தனது சுதந்திரத்தை அவர் உணர்ந்திருந்ததே காரணம். 

இருபதாம் நூற்றாண்டின் முக்கிய நிகழ்வுகள் எல்லாவற்றுக்கும் நெரூதாவின் கவிதை சாட்சியாக இருந்திருக்கிறது. ரஷ்யப் புரட்சி, ஸ்பானிய உள்நாட்டுப் போர், நாஜிசம், ஸ்டாலினிசம், இரண்டாம் உலகப் போர் கட்டவிழ்த்துவிட்ட படுகொலைகள், ஏகாதிபத்தியம், காலனியாதிக்கம், மறைமுகப்போர்கள், லத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசியல், பொருளாதார நெருக்கடிகள்,ஃபிடல் காஸ்ட்ரோவின் கியூபப் புரட்சி, வியத்நாம் போர், 1968 இல் நிகழ்ந்த மாணவர் கொந்தளிப்பு, சொந்த மண்னில் சோஷலிசத்தின் வருகை, அதற்கெதிரான ராணுவக் கலவரம் - சமகாலச் சரித்திரத்தை நெரூதா தனது கவிதைகளில் பதிந்ததுபோல நவீன கவிஞர் வேறு எவராவது செய்திருக்கக் கூடுமென்பது சந்தேகமே. 

நான்கு - காதல்கள்

கவிதையுலகில் பாப்லோ நெரூதா அறிமுகமானதும் இடத்தை நிறுவிக்கொண்டதும் ஓர் இளங்காதலனாக. வாழ்நாள் முழுவதும் வேட்கை மிகுந்த காதலனாகவும் அதே சமயம் இயற்கையின் தீவிர ஆராதகனாகவும் இருந்திருக்கிறார். இந்த இருவகைக் காதலையும் பேதப்படுத்திக் காண்பது கடினம். பெண் மீதும் பெண்ணுடல் மீதுமான அவரது குதூகலம் இயற்கை மேலுள்ள மோகத்தின் இன்னொரு சாயல். ''காதல்-நீருடனும் நட்சத்திரங்களுடனும் ஒரு பயணம்/ மூழ்கும் காற்றுடனும் மகரந்தப் புயல்களுடனும் ஒரு பயணம்/ காதல் - மின்னல்களின் மோதல்; /இரு உடல்கள் ஒரே தேனில் அமிழ்கின்றன'' என்ற வரிகள் இதன் விளக்கமாகலாம். (மேற்கோள்: நூறு காதல் சானெட்டுகளிலிருந்து.)

பெண் ஸ்பரிசங்களின் வளம் நிரம்பியது அவரது அந்தரங்கம். மூன்று மனைவியர். அநேக தோழியர். எண்ணிக்கையிலொதுங்காத படுக்கையறைப் பங்காளிகள். அயலிட வாழ்க்கை மேற்கொண்டிருந்த காலத்தில் நுகர் பண்டமாக அவர் துய்த்து வீசிய பெண்கள் பலர். ஜோஸி பிளிஸ் அவர்களில் ஒருவர். பர்மியப் பெண்ணான அவர் நெரூதாவை விரட்டிவிரட்டிக் காதலித்தவர். தன்னை மணந்துகொள்ளும்படி வற்புறுத்தியவர். அவரிடமிருந்து நழுவிக்கொண்டிருந்தார் நெரூதா. வெறிகொண்ட ஜோஸி பிளிசின் காதல்வதைக்குப் பயந்து இரவோடு இரவாக பர்மாவை விட்டே வெளியேறினார். நெரூதாவின் உணர்ச்சிக் கொந்தளிப்பான காதல் கவிதைகளில் அந்த அசட்டுக் காதலியை முன்னிருத்தி எழுதிய 'மனைவி இழந்தவனின் டாங்கோ' தனியிடம் பெறும். 

ஜோஸி பிளிஸைக் கைவிட்ட பிறகு மரியா அந்தோனியேட்டா என்ற டச்சுப் பெண்ணை (1930 இல்) மணந்துகொண்டார். அந்த உறவில் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆறு ஆண்டுகளுக்குப் பின் மணவுறவு முறிந்தது. பிள்ளைப்பருவ நோயால் அற்பாயுளில் மறந்த அந்தக் குழந்தையை 'புலம்பலுடன் ஒரு பாடலி'ல் நெரூதா நினைவு கூர்ந்தார்.

டேலியா தெல் காரில் அவரது இரண்டாம் மனைவி. செயல்பாட்டு அரசியலில் நெரூதாவை ஈடுபடுத்தியவர் டேலியா. 1943 இல் திருமணம் நடைபெற்றது. ஆனால் இந்த திருமணத்துக்கு அப்போதிருந்த சிலி அரசின் அங்கீகாரம் மறுக்கப்பட்டது. சொந்த நாட்டில் வாழ்வதை இன்றியமையாத தேவையாக நெரூதா கருதினார்.1955 இல் தம்பதிகள் பிரிந்தனர். நெரூதாவின் நினைவில் 'டேலியா, உண்மையை நோக்கித் திறந்த ஜன்னலில் வெளிச்சம்'. 

நெரூதாவின் பிற்காலக் கவிதைகளின் வழிபாட்டுத் தேவதை மெட்டில்டே உரூஷியா. சிலியைச் சேர்ந்த பாடகி. 1966 இல் இருவரும் மணந்து கொண்டனர். 'நூறு காதல் சானெட்டுகளி'ன் உந்துதலும் மையப் பொருளும் உரூஷியாவின் காதல்தான். நெரூதாவின் பிற்காலப் படைப்புகளை ஒழுங்குபடுத்தியதும் அவரது மறைவுக்குப் பிறகு நூல் வெளியீடுகளை நெறிப்படுத்தியதும் உரைகளையும் நேர்காணல்களையும் பத்திரிகைப் பத்திகளையும் சீரமைத்துத் தொகுத்ததும் உரூஷியாதான். மெட்டில்டே உரூஷியா 1985 ஆம் ஆண்டு தம்பதிகளின் காதல்தீவான ஐலா நீக்ராவில் மரணமடைந்தார். 

வெவ்வேறு காலகட்டத்தில் பாப்லோ நெரூதா உறவு கொண்டு விலகிய பெண்களின் எண்ணிக்கை ஏராளம். முகமற்ற இந்த அநேகக் காதலிகளின் எண்ணிக்கையை ஒரே பெயரில் ஒளித்துவைத்துக் கவிதைகளில் நினைவு கூரவும் செய்திருக்கிறார்.  மாபெரும் மனிதநேயரான நெரூதா இந்த வஞ்சனைகளால் மனம் கொந்தளித்திருந்தார் என்பதை அவரது கவிதை வரிகளுக்கிடையில் உலர்ந்து கிடக்கும் கண்ணீர்க் கோடுகளையும் உறைந்திருக்கும் இரத்தக் கசிவுகளையும் உணரமுடிந்தால் அறியவும் முடியும்.

ஐந்து - விமர்சனங்கள்

எப்போதும் விவாதங்களின் மையமாகவும் விமர்சனங்களின் இலக்காகவும் இருந்தார் நெரூதா. தீவிரமான விருப்பங்களும் அதிதீவிரமான வெறுப்புகளும் கொண்ட பிறவி. காப்ரியேல் கார்சிகா மார்க்கேஸ் அவரை 'சென்ற நூற்றாண்டின் மாபெரும் கவிஞர்' என்று குறிப்பிட்டார். நோபல் விருது பெற்ற மற்றொரு ஸ்பானியக் கவிஞரான யுவான் ரமோன் ஜிமனேஸைப்(1881-1958) பொறுத்தவரை 'மகத்தான மட்டரகக் கவிஞர்'. சமகாலத்தவரான போர்ஹே(1899-1986) அவரை முதல்தரமான கவிஞராக ஒப்புக்கொண்டார். ஆனால், 'மனிதரென்ற முறையில் அவர் மீது மதிப்பில்லை' என்றார். தனது படிமத்தை உயர்த்திக் காட்டும் பொதுப் பிரச்சனைகளில்மட்டுமே அக்கறை செலுத்திய தந்திரசாலி என்பது போர்ஹே நெரூதாவின் மேல் கூறிய புகார். 'கலாச்சார விஷயங்களை மனித இயல்பே இல்லாமல் கையாண்ட அறிவாளி' என்பது போர்ஹேவைப் பற்றிய நெரூதாவின் குற்றச்சாட்டு. 

பிரெஞ்சுக் கவிஞர் ஸ்டெபான் மல்லார்மே (1842-98) நெரூதாவின் கண்ணோட்டத்தில் 'மூடிவைத்த அறைகளின் கவிஞர்'. டி.எஸ்.இலியட் 'அதீத அறிவுவாதி'. 'நான் விசாலமானவன். என்னுள் பலநிலைகள் நிறைந்திருக்கின்றன' என்று அறிவித்து கவிதையை வாழ்வின் உற்சவமாக்கிய வால்ட் விட்மன்தான் நெரூதாவின் இலட்சியக் கவிஞர். லோர்க்காவையும் செஸார் வயெஹோவையும் மதித்தார். 'நான் வாழ்க்கையிலிருந்து கலையைப் பிரிக்க விரும்பவில்லை; எவ்வாறோ, எங்கோ இரண்டும் ஒரே பொருளைத் தருபவையாகக் காணவிரும்புகிறேன்' என்ற ரெய்னர் மரியா ரீல்க்கே (1875-1926)யையும் வாழ்வின் புதிர்களைக் குறித்து விசாரணை தொடர்ந்துகொண்டிருந்த காஃப்கா(1883-1924)வையும் அவர் விமர்சனத்துடன் ஏற்றிருந்தார். போர்ஹே, சாமுவெல் பெக்கட், சார்ல்ஸ் போதலேர் ஆகியோரின் படைப்பாற்றலை வியந்திருக்கிறார். ரஷ்யக் கவிஞர்களான'வெண்கலத்தின் ரீங்காரமுள்ள' விளாதிமிர் மயாகாவ்ஸ்கி, 'மாலை நிழல்களின் மாபெரும் கவிஞரான' போரிஸ் பாஸ்டர்நாக் போன்றோர் அவரது தோழமைப் பட்டியலில் இருந்தனர்.

நெரூதா தனது விமர்சகர்களோடு உதாசீன மனப்பான்மையும் அருவருப்புமே காட்டியவர்.'தணிக்கையாளர்கள், உரைக்காரர்கள், இலக்கியத்தின் நோய்க்கிருமி ஆய்வாளர்கள்' இவையெல்லாம் விமர்சகர்களுக்கு அவர் வழங்கிய அடைமொழிகள். இலக்கியவாதி செயல்பாட்டாளனாவதில் மிரட்சியடையும் மத்தியதர வர்க்கத்தின் சகிப்பின்மைதான் இந்த விமர்சனங்கள் என்று அவர் கருதினார். ஒருவேளை உண்மையாகவும் இருக்கலாம். நூற்றாண்டை யொட்டிய சந்தர்ப்பத்திலும் இத்தகைய விமர்சனங்கள் தொடர்கின்றன. வீக்லி ஸ்டாண்டர்டு இதழ் அண்மையில் வெளியிட்ட ஸ்டீபன் ஸ்வார்ட்ஸ் என்ற பத்தியாளரின் கட்டுரை இதற்கு உதாரணம். கட்டுரையின் தலைப்பு - 'மோசமான கவிஞன், மோசமான மனிதன்'. 

சார்புநிலையுள்ள கவிஞனின் படைப்புகள் அப்பட்டமான பிரச்சாரம் என்ற வாதத்தை தொடர்ந்து எழுதுவதன் மூலமே முறியடித்தவர் நெரூதா. அபரிமிதமான வேகத்திலும் எண்ணிக்கையிலும் எழுதிக் குவித்தவர். கவிதையாக்கத்துக்கான கோட்பாடுகளில் அக்கறையின்மை கொண்டிருந்தவர். அறியப்பட்டதும் வெளிச்சத்தின் பரப்பில் விளம்பரப்படுத்தப்பட்டதுமான பொருள்களை விடப் பாதி வெளிச்சத்தில் மறைந்திருப்பவற்றை அகழ்ந்தெடுப்பதை கவிதையின் கடமையாக வரையறுத்துக் கொண்டிருந்தவர். எல்லாவகையான பாதிப்புகளுக்கும் தனது படைப்பு மனத்தைத் திறந்து போட்டிருந்தவர். நெரூதாவின் இருபது காதல் கவிதைகளில் பதினாறாவது கவிதை ரவீந்திரநாத் தாகூரின் 'தோட்டக்காரனி'ல் இடம்பெறும் பதின்மூன்றாவது கவிதையின் தழுவல். தொடக்கத்தில் இந்தக் குற்றச்சாட்டை மறுத்த நெரூதா பின்னர் ஒப்புக்கொண்டார். 

அறுபது எழுபதுகளில் கவிதையுலகின் துருவ நட்சத்திரமாக ஜொலித்த நெரூதா, எண்பது தொண்ணூறுகளில் மங்கலாகவே தென்பட்டார். போர்ஹே நட்சத்திரமானார். காதல் கவிதைகளுக்கு மட்டுமே நெரூதாவை துணைக்கழைத்தார்கள் ஆர்வலர்கள். ஆனால் பின் வந்த ஆண்டுகளில் பாப்லோ நெரூதா பன்மடங்கு பொலிவுடன் ஏற்றுக்கொள்ளப்படும் சூழல் உருவானது. அரசியல் சித்தாந்தங்களின் ஆதரவில்லாமல் உருவாகும் மாற்று அரசியலில், சூழலியலில், போரெதிர்ப்பில், சமூக நீதிக்கான அறைகூவலில் பாப்லோ நெரூதா இன்றியமையாதவராகியுள்ளார். மனித மனத்தின் பொது நினைவில் ஒளிகுன்றாமல் நிலைத்திருக்கிறார் என்பதன் சான்று இவை. சமகாலத்தவரும் சக கவிஞருமான லோர்க்கா சொன்னதுதான் காரணம்: 'தத்துவத்தைவிட மரணத்துக்கும் அறிவு நுட்பத்தைவிட வேதனைக்கும் மையைவிட இரத்தத்துக்கும் நெருக்கமான கவிஞர் அவர்.' 

*****