27 July 2011

கலையும் நிலையும்

நேற்று மாமல்லன் எழுதிய இந்த கட்டுரை படித்தேன். 


இது போன்ற கட்டுரைகள் முடியும்போது ஒரு நெகிழ்ச்சியான அனுபவம் வருகிறதே ? அது ஏன் தோழர் ? ஒருவேளை சுஜாதாவின் சிறுகதைகள், ஒ ஹென்றியின் புனைவுகளின் தாக்கமாக இருக்குமோ ?

இதே ஐய்யங்கார் மாமி கட்டுரையின் நடுவில் வந்திருந்தால் என்ன கருத்து சொல்லி இருப்பார் ?


மணிகண்டன்,

அதேதான் சொல்லி இருப்பார். ஏனென்றால் அவர் அவர்தான். நான் இல்லை. நிஜத்தில் நடந்ததை வரிசைக்கிரமமாக அப்படியேதான் எழுதி இருக்கிறேன். அமரரான அந்த ஐயங்கார் மாமி வேறு யாருமில்லை. இப்போது இங்கிலாந்தில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஆடிக்கொண்டிருக்கும் அபிநவ் முகுந்தின் பாட்டி. மறைந்த டாஃபே மகாதேவன் அவர்களின் மனைவி.

கதைகளிலேயே கற்பனையைக் கையுப்பாய்க் கலப்பவன் கட்டுரையிலா சுவைக்காகக் கற்பனையைக் கலக்கிப் பறிமாறாப்போகிறேன். 

பொய்யில்லை என்றால் புனைவில்லை என்பது வெகுஜனப் பத்திரிகைக் கதைகளின் வேதகோஷம். சுவாரசியத்திற்காக முத்தாய்ப்புக்காக அறிவுரைக்காக குருமாவிற்கான கோழியாய் கதையின் கழுத்து திருகப்படும் கொணஷ்டையின் நிர்பந்தம்,எழுதாமலே சாகவும் தயாராயிருக்கும் இலக்கியக்காரனுக்கு இல்லை. 

மகாபாரதம் கிகாபாரதம் என்று இரு கைகளையும் சிறகாக்கிப் பறந்தால்தான் எழுத்து என்றில்லை. ஆட்டுதல் அதிகமாவதன் காரணமாய் மிஞ்சிமிஞ்சிப்போனால் கஷ்க்கத்திலிருந்து காற்றோடு ஒலியும் வரக்கூடும். 

என் அனுபவம் என்னுடையது மட்டுமே. அதை உண்மையோடும் தேர்ச்சியோடும் விவரித்தால் உங்களுக்குப் புதிய உலகமாய் அமையும். எழுதத்தொடங்கிய பேப்பரில் இருந்து எடுத்த பேனாவாலோ அல்லது தட்டச்சும்போது மேட்டர் இல்லாமல் தடைபட்ட ஆள்காட்டி விரலாலோ பீரங்கிக்கு மருந்து கிட்டிப்பாய் மூக்கை நோண்டுவதால் மூளையில் பொறி பறக்கும் என்பது என்ன கட்டாயமா? கற்பனையில்தான் புனைவு பூக்கும் காய்க்கும் என்பதெல்லாம் அனுபவ வறட்சியின் அக்மார்க் முத்திரை. 

சுவையான சம்பவக் கோர்வை சுஜாதாவாகலாம், இலக்கியமாவது எதிர்பாரா விபத்து. டைப்பிங்கே தெரியாதவன் கைபோனபோக்கில் எதேச்சையாய் AS என்று அடித்துவிட்டால் பெரிய டைப்பிஸ்டா?

அனுபவத்தைப் பார்க்கத் தெரிவதே கலை. எழுத்தாக்குவது இரண்டாவது நிலை. 

எழுத்தாளர்களில் டெம்ப்ளேட் புகழ் எஸ்.ரா யுவன் போல கேள்விகளில் கண்டாமணியா?

முன்பொருக்கால் யுவகிருஷ்ணா, அஜிதன் பத்தாம் வகுப்பு தேர்வு என்கிற ஜெயமோகனின் கட்டுரையையும் தாங்கள் இதே போன்று, அஜிதன் பெயிலாகி இருந்தால் இதே போல கட்டுரையை எழுதினிருப்பாரா என்று கேட்டீர்கள்.

எடக்கு மடக்காக என்னத்தையாவது கேட்க வேண்டும் சொல்லவேண்டும் என்பவர்களைப் பொருட்படுத்தாமல் இருக்கும்படியாக தொண்டரடிப்பொடி ஒருவரின் பதிவில் (கேள்வி கேட்டது பெண் என்று தெரிந்திருந்தும்) ஜெயமோகனின் சமீபத்திய அறிவுரை என்னவென்று தெரியுமில்லையா?

<இவர்களை ‘மயிரே போச்சு’ என எண்ணுவது வழியாகவே நீங்கள் அர்த்தபூர்வமாக ஏதேனும் எழுதமுடியும்

ஜெ>